தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு -

நான், 35 வயது பெண். எனக்கு ஒரு தங்கை. அவளுக்கு திருமணமாகி விட்டது. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் எங்களது.

நான் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தேன். வேற்று மதத்தை சேர்ந்த, எம்.ஏ., பி.எச்டி பட்டப்படிப்பு படித்து முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்த, எங்கள் வீட்டு அருகில் குடியிருந்த ஒருவனை காதலித்தேன்.

எட்டு ஆண்டு காதலுக்கு பின், பெற்றோர் சம்மதத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன்.

படித்த படிப்புக்கேற்ற வேலைக்கு தான் செல்வேன் என்ற பிடிவாதத்தால், பல ஆண்டுகள் வீணாக கழித்து விட்டார், கணவர்.

முதலில், கிடைத்த வேலையில் சேர்ந்து, அதன்பின், தகுந்த வேலைக்கு செல்லலாம் என்று எவ்வளவோ கூறியும், கேட்க மறுக்கிறார்.

அடுத்தடுத்து, எனக்கு இரு குழந்தைகள் பிறந்து விட்டனர். குழந்தைகளை கவனிக்க வேண்டி, வேலையை ராஜினாமா செய்து விட்டேன். கணவனின் பெற்றோர், வெளியூரில் மூத்த மகனுடன் இருக்கின்றனர்.

சின்ன சின்ன செலவுகளுக்கு கூட, என் பெற்றோரை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால், பயமாக இருக்கிறது. மன உளைச்சலில் இருக்கும் என் தவிப்பை, கணவர் புரிந்து கொள்ளவே இல்லை.

சில நேரங்களில், இவரை ஏன் தான் காதலித்தோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

நான், மீண்டும் வேலைக்கு செல்ல முனைந்தாலும், குழந்தைகளை இவர் பொறுப்பில் விட்டுச் செல்ல பயமாக இருக்கிறது. வயதான என் பெற்றோரிடமும் விட்டுச் செல்ல முடியாது.

இப்பிரச்னையிலிருந்து மீள நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

ஒரு கழுதையை எட்டு ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டால், அந்த கழுதை, பந்தயக்குதிரை ஆகிவிடுமா?

ஒரு மாதம் காதலித்து மணந்து கொண்டால், அது வெறும் இனக்கவர்ச்சி. எட்டு ஆண்டு, 10 ஆண்டு காதலித்து மணந்து கொண்டால் அது தெய்வீகக் காதல் என்பது பொய்புனைவே. 90 சதவீத காதல் திருமணங்கள் தோல்வியுறுகின்றன.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்திருந்தாலும், உங்கள் பிரச்னைகளை அவர்கள் துாரத்தில் நின்று வேடிக்கை பார்க்கவே செய்வர்.

மெத்தப்படித்த, வறட்டு கற்பனாவாதி, உன் கணவர். கூட்டமில்லாத பேருந்தில் ஏறிக் கொள்வோம் என்ற எண்ணத்துடன், எல்லா பேருந்துகளையும் தவறவிட்டு விட்டு, பேருந்து நிறுத்தத்தில் கவிழ்ந்து கிடக்கும் முட்டாள் பயணி.

ஒரு மனிதன் வேலை வெட்டி இல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தால், துருப்பிடித்து விடுவான். அதன்பின் வேலை கிடைத்தாலும், உடலும், மனதும் ஒத்துழைக்காது. இனி நீ செய்ய வேண்டியது...-

* மீண்டும் பன்னாட்டு நிறுவனப் பணிக்கு போ. சம்பளம், பொருளாதார பாதுகாப்பு தரும். அத்துடன் சின்ன சின்ன செலவுகளுக்காக உன் பெற்றோரிடம் கையேந்தும் நிலை வராது

* 'குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரும் எந்த பணிக்கும் போ. பணி இல்லாமல் நீ வீட்டில் ஒரு நிமிஷம் இருக்காதே. உத்தியோகம் புருஷலட்சணம். வெளியே போ...'- என, கணவரை அடித்து துரத்து

* உன் மூத்த குழந்தைக்கு, இரண்டு வயதும், இரண்டாவது குழந்தைக்கு, ஒரு வயதும் இருக்கும். குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது என, உன் வயதான பெற்றோர் கூறினரா? அவர்கள் சொல்லாததை, நீ ஏன் கற்பனை செய்கிறாய்?

நீ வேலைக்கு செல்வதையும், இரு குழந்தைகளை அவர்களது பராமரிப்பில் விட்டு செல்வதையும் பற்றி, அவர்களிடம் பேசு. 99 சதவீதம் குழந்தையை பார்த்து கொள்ள, உன் பெற்றோர் சம்மதிப்பர். குழந்தைகளை பார்த்துக் கொள்வதில், உன் பெற்றோருக்கு உதவியாக பணிப் பெண்ணை அமர்த்து

* கணவரின் பெற்றோரிடமும் பேசு. எதாவது ஒரு வேலையை தேடிக் கொள்ள சொல்லி அவர்களும், கணவரை வலியுறுத்தட்டும்

* கைக்குழந்தைகளை யாரும் பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்ற காரணத்துக்காகவே, 38 சதவீத பெண்கள், மீண்டும் பணிக்கு செல்ல யோசிப்பதில்லை. மகப்பேறு நலன் திருத்த சட்டம் 2017, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகம் இருப்பது கட்டாயம் என, வலியுறுத்துகிறது.

உன் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பிறந்த வீட்டாரோ, புகுந்த வீட்டாரோ மறுத்தால், குழந்தைகள் காப்பகம் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்.

உன் கண்டிப்பு, கணவரை நேர்வழிபடுத்தும். இன்னும் ஓராண்டில் சகல பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதிபடுவாய். வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us