PUBLISHED ON : பிப் 10, 2019

செல்வியின் முகம் பயத்திலும், குழப்பத்திலும் வெளிறியது...
'நகை எங்கே போச்சு... இங்கே தானே வச்சேன்... வேறு யாரும் எடுக்க வாய்ப்பில்லையே...' பதட்டத்துடன் தேடினாள்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
''செல்வி... இன்னைக்கு என்ன சமையல்?'' என்றபடி, தனக்கே உரிய உற்சாகத்துடன் உள்ளே வந்தாள், பக்கத்து வீட்டு அக்கா, மேகலா.
பதில் சொல்லக்கூட முடியாத அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள், செல்வி.
''என்ன ஆச்சுமா?'' தலையை ஆதுரத்துடன் தடவினாள், மேகலா.
''என் கணவர், ஆசையா வாங்கி கொடுத்த நகையை காணோம்க்கா... விலை அதிகம் என்பது, ஒரு புறம்... அதை விட, அவரு எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது... அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.''
''பதறாதம்மா... இங்கே தான் எங்கேயாச்சும் இருக்கும்.''
''இல்லைக்கா... தேடிப் பார்த்துட்டேன்... கிடைக்கல... அவரு இருந்தாலாவது பரவாயில்லை. வேலை விஷயமா வெளிநாடு போய் இருக்கும் நேரம் பார்த்து தொலைஞ்சுருச்சு. நான் போனதும், என் மேல அக்கறையும் போய்ருச்சு... அதனாலதான், 'கேர்லெஸ்' அப்படீன்னு திட்டுவாரே... என்ன சொல்றதுன்னு தெரியல.''
செல்வியின் கண்கள் கலங்கின.
இப்போது, மேகலா முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்தன.
''சரி, இப்போதைக்கு உன் வீட்டுக்காரரிடம் சொல்லாதே... சங்கடப்பட வாய்ப்பிருக்கு. தேடிப் பார்க்கலாம். கிடைக்கலைன்னா வேற என்ன செய்றதுன்னு யோசிப்போம்,'' என, சொல்லி சென்றாள், மேகலா.
ஒரு வாரம் ஆகியும் நகை கிடைக்கவில்லை.
''பேசாம அதே மாதிரி இன்னொரு நகை, வாங்கி வச்சுரலாமா,'' கேட்டாள், மேகலா.
''அவ்வளவு காசு எப்படி புரட்டுவது... பேசாம வந்தது வரட்டும்ன்னு உண்மையை சொல்லிடலாம்ன்னு நினைக்கிறேன். ஆனால், தொலை தேசத்துல இருக்கும் அவர் மனசை, கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு பார்க்குறேன்,'' என்றாள், செல்வி.
மேகலாவும் யோசித்தாள்...
'அவருக்கிட்ட, இதை மறைப்பது நியாயம் இல்லை. கணவன் - மனைவிக்குள்ள நல்லதோ, கெட்டதோ எதுனாலும் பகிர்ந்து கொள்வதே நல்லது. ஆனால், இப்போதைக்கு தெரிய வேண்டாம். வேற எப்படியாவது, நியாயமான வழில காசு புரட்ட முடியாதான்னு பார்ப்போம்...'
மேகலா சொன்னதை செல்வி ஏற்கவில்லை...
''சில மாதங்களில் அவர், இந்தியா வந்துருவாரு... அதற்குள் காசு புரட்டணும்ன்னா, கடன் வாங்கணும் அல்லது வங்கியில இருந்து எடுக்கணும். ஆனா, ரெண்டும் சாத்தியமில்லை. வேலைக்கு போனா, ஓரளவு காசு புரட்டலாம்.
''ஆனா, குழந்தைகளை நான் தான் கவனிச்சுகணும். பாடம் சொல்லித் தருவது, அவங்களுக்கு பொழுது போக்கு அப்படீன்னு, எல்லாமே நான் தான்... அதனால, இப்போதைக்கு வேலைக்கு போகவும் முடியாது,'' என்றாள், செல்வி.
''சின்ன அளவில ஏதாவது பிசினஸ் பண்ண முடியாமான்னு பாரு... முடிஞ்ச அளவு நானும் உதவி செய்றேன்.''
''பிசினசா... நானா? ஜோக் அடிக்காதீங்க அக்கா.''
அந்த வேதனையிலும் சிரித்தாள், செல்வி.
''நீயாவது படிச்சு இருக்க... படிக்காத என் அம்மா, அந்த காலத்துல சேலை - வேஷ்டி வியாபாரம் செஞ்சு தான் எங்களை ஆளாக்கினாங்க... உனக்கு பிடிச்ச விஷயத்தை ஈடுபாட்டோட செய்... நல்லா வரும். அழகு கலை, சமையல், தையல், ஆரோக்கியம் அப்படீன்னு பலது இருக்கு. உனக்கு எதுல ஆர்வம், சொல்லு பார்ப்போம்,'' ஊக்கமாக பேசினாள், மேகலா.
''உங்களுக்கு தெரியாதா... நீங்களே எத்தனை முறை என்னிடம், சமையல், 'டிப்ஸ்' கேட்டிருக்கீங்க, என் சமையலை பாராட்டி இருக்கீங்க.''
''சரி... அப்ப அதுலயே இறங்கலாம்.''
''எனக்கென்னவோ, இதை வெற்றிகரமா செய்ய முடியும்ங்கற நம்பிக்கை இல்லைக்கா... எத்தனையோ பெரிய பெரிய உணவகங்கள் இருக்கு. அனுபவசாலிகள் இருக்காங்க... எந்த அனுபவமும் இல்லாத ஒரு பெண்ணான நான், எப்படி ஜெயிக்க முடியும். குழந்தைகளை வேற கவனிச்சுக்கணும்.''
செல்வி சொன்னதை கேட்டு சிரித்தாள், மேகலா.
''பலவீனங்கள் என, நாம் நினைப்பது, பல நேரங்களில் நம் பலமாகத்தான் இருக்கும். இப்ப யாரு... நீ சொன்ன குறைகள் தான், உனக்கு உதவப் போகுது.''
யாருக்கோ போன் செய்தாள், மேகலா.
''வணக்கம் சார்... உங்க அலுவலகத்தில் மதிய உணவு வினியோகம் செய்ய, ஆள் கேட்டு இருந்தீங்க... கிடைச்சிட்டாங்களா சார்.''
''இல்லை மேடம்... சரியா அமையல. ருசி மற்றும் தாமதம் என, பல பிரச்னைகள். 'கேன்சல்' பண்ணிட்டோம். வேற யாராச்சும் இருந்தா சொல்லுங்க மேடம்.''
''எனக்கு தெரிஞ்ச பெண் ஒருவர், புதுசா இதில் இறங்கி இருக்காங்க... புதுசுங்கறதால ரொம்ப பொறுப்பா நடந்துக்குவாங்க. அவங்களுக்கும், குழந்தைகள் இருக்கு. அதனால, தரத்துல குறைவு இருக்காது. இல்லை, அனுபவசாலிகள் தான் வேணும்னாலும் சொல்லுங்க சார், ஆள் இருக்கு...'' என்றாள், மேகலா.
''அந்த புதுப்பொண்ணே சரியா வரும்ன்னு தோணுது. ஒரு மாசம், 'டிரையல் பேசிஸ்'ல வினியோகம் பண்ணட்டும். அதுக்கு அப்புறம், 'ஆர்டர் கன்பார்ம்' பண்றேன்,'' என்றார், அவர்.
செல்வி மேற்பார்வையில், சமைப்பதற்கு இரு பெண்களை நியமித்தார், மேகலா. தரமான அரிசி, இயற்கை முறையில் தயாரான எண்ணெய், ரசாயன உரம் இல்லாத காய்கறிகள் என, பார்த்து பார்த்து கொள்முதல் செய்தனர்.
வழக்கமாக, ஒரு முழு சாப்பாடு, 60 ரூபாய் என்றால், அந்த காசுக்கு சோறு, சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் என, வந்து விடும். சிலர், காய்கறிகளோ, ரசமோ சாப்பிடாமல் வீணடிப்பதுண்டு.
இதைப்பற்றி அவள் கணவன் கூறிய சம்பவம் ஒன்று, நினைவுக்கு வந்தது...
'நம் ஊர் பிரபலம் ஒருவர், ஜெர்மனி சென்றார். உணவு விலை விசாரித்தார். நம் ஊர் மதிப்புக்கு, 100 ரூபாய். 'ஆர்டர்' செய்து சாப்பிட்டார். சில உணவு வகைகளை சாப்பிட வயிற்றில் இடம் இல்லை. அப்படியே வைத்து, கை கழுவினார்.
'பில் 500 ரூபாய் என்றதும், திடுக்கிட்டார். '100 ரூபாய்தானே சொன்னீர்கள். ஏன், 500 ரூபாய் பில்?' என, கத்தினார்.
'அவர்கள், 'சார், பில்லை நன்றாக பாருங்கள்... நீங்க சாப்பிட்டதற்கு, 100 ரூபாய் தான். வீணடித்ததற்கு, 400 ரூபாய். மொத்தம், 500 ரூபாய்...' என, பணிவுடன் கூறினர்.
'பிரபலம், 'நான் காசு கொடுத்து வாங்கும் உணவை சாப்பிடுகிறேன், வீணடிக்கிறேன்... அதைப் பற்றி உங்களுக்கு என்ன?' என்று கத்தினார்.
'அதற்கு, அவர்கள் எங்கள் நாட்டு உணவை சாப்பிடும் உரிமை மட்டுமே, உங்களுக்கு உண்டு. எங்கள் மண்ணின் உணவை வீணடிக்க, யாருக்கும் உரிமை இல்லை. அதனால் தான் எவ்வளவு உணவை வீணடிக்கிறீர்களோ, அதன் மதிப்பின் இரண்டு மடங்கை, அபராதமாக வசூலிக்கிறோம். எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும், 'ஆர்டர்' செய்ய பழகுங்கள் என்று கூறினர்...'
கணவன் சொன்ன, இந்த விஷயம், அவள் மனதை கவர்ந்தது. எனவே, அவள், 60 ரூபாய் சாப்பாடு என, விலை நிர்ணயிக்கவில்லை. சோறு, காய்கறி, மோர், ரசம், காரக்குழம்பு, சாம்பார் என, அனைத்தும் தனித்தனியாக, 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகளாக கட்டினாள்.
யாருக்கு எது வேண்டுமோ, அந்த பாக்கெட்டுகளை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இது, ஏகோபித்த வரவேற்பை பெற்றது. காய்கறி ரசிகர்கள் பலர், 100 ரூபாய்க்குக்கு கூட சாப்பிட்டனர். வெறும், 60 ரூபாய்க்கு, சோறு, மோர் மற்றும் காய்கறி என, சாப்பிட்டவர்களும் உண்டு.
முதல், 'ஆர்டர்' உறுதி செய்யப்பட்டு, மேலும் பல இடங்களில் கேட்க துவங்கினர். உடலும், மனமும் உற்சாகமாக இருந்தது; பணமும் சேர்ந்தது. காணாமல் போன அதே போன்ற நகை ஒன்றை, 'ஆர்டர்' செய்து வாங்கி விட்டாள்.
சில மாதங்களுக்கு பின்...
கணவன் வீட்டுக்கு வந்ததும், உற்சாகமாக வரவேற்றாள். அவன் சொன்ன உணவு, 'கான்செப்ட்'டை, தன் மனைவி அமல்படுத்தி வருவதைப் பார்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
''எப்படி... நம்ம கல்யாண நாளுக்கு சரியா வந்துட்டேன்,'' என, சிரித்தவன், ''சரி, கிளம்பு கோவிலுக்கு போலாம்,'' என்றான்.
குழந்தைகள் உற்சாகமாக கிளம்பினர்.
புதிய சேலை அணிந்து, பூ சூடி, அந்த நகையையும் அணிந்தபடி வெளியே வந்தாள்.
''இந்தா உன் நகை,'' என, நீட்டிய அவன், அவள் அணிந்திருந்த நகையைப் பார்த்து திடுக்கிட்டான். அவளும், அவன் கையில் இருந்த நகையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
''வெளிநாடு போகும் போது, உன் நினைவா நகையை எடுத்துட்டு போனேன். இது என்ன புதுசா?'' என்றான், வியப்புடன்.
''ஆமாங்க... என் நினைவா, இதை நீங்க எடுத்துப் போனீங்க... உங்க நினைவா, எனக்கு ஒன்று வேண்டாமா... அதனால் தான், உங்க பரிசு மாதிரியே புதுசா ஒண்ணு வாங்கிட்டேன்,'' என்றாள், அவள்.
''சரி... அதை என்னிடம் கொடுத்துரு... இதை நீ வச்சுக்கோ,'' என, அவன் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கே வந்த மேகலா, ''கல்யாணத்துல மாலை மாத்துனீங்க... இப்ப நகை மாத்திக்கிறீங்களா?'' என்றாள்.
அனைவரின் சிரிப்பொலிகள், இல்லத்தை நிரப்பின.
ஜனமேஜயன்