PUBLISHED ON : ஜூலை 05, 2020

சிலருக்கு வயதானாலும், அதற்குரிய தோற்றம் தெரியாது. 25 வயதுடைய பெண், 55 வயசு போல இருப்பதும், 70 வயதுக்கு மேற்பட்டோர் சிலர், துடிப்பும், துறுதுறுப்புமாக இருப்பதுண்டு.
எனவே, வயது என்பது, வெறும் உடம்பில் இல்லை. உண்மையான வயது, உங்கள் ஆரோக்கியம் மற்றும் மனப்பான்மையை பொறுத்தது தான். சரி, கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... உங்களின் உண்மையான வயதை கண்டுபிடிக்கலாம்.
1. இரவில், குறைந்தது, 7 அல்லது 8 மணி நேரமாவது துாங்குவேன்.
2. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், கீரை வகைகள், நெல்லிக்காய், பிரக்கோலி, ஆப்பிள், தக்காளி போன்ற அதிக, 'ஆன்டி ஆக்சிடென்ட்' இருக்கும் உணவு பொருட்களை, வாரத்தில் ஐந்து முறையாவது எடுத்துக் கொள்வேன்.
3. தினமும் ஒரு முறையாவது, நெல்லி, நாவல் பழம் போன்றவை சாப்பிடுகிறேன்.
4. ஒமேகா-3 அதிகம் உள்ள மீன் உணவை, வாரத்துக்கு மூன்று முறை எடுத்துக் கொள்வேன்.
5. புரோட்டின் அதிகமுள்ள முட்டையை வாரத்துக்கு ஐந்து முறை எடுத்துக் கொள்வேன்.
6. போலிக் ஆசிட் அதிகமிருக்கும், வெண்டைக்காய், கேரட், காலிபிளவர், சோளம் போன்ற உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வேன்.
7. சின்னதா தலைவலி, உடம்பு வலிக்கு கூட, 'பெயின் கில்லர்' மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
8. ஏதாவது ஒரு பழ ஜூசை, வாரத்திற்கு ஐந்து முறை குடிப்பேன்.
9. தினமும், காலை, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன்.
10 புத்தகம் படிப்பது, செஸ், சுடோகு போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுவது; நுட்பமான கவனிப்பு தேவைப்படும், 'பெயின்டிங், எம்பிராய்டரி' போன்ற வேலைகளில் அதிகம் ஈடுபடுவேன்.
11. உடலின் கொலஸ்ட்ரால் அளவு, நார்மலாக இருக்கிறது.
12. பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், சாக்லேட், பீட்சா, பர்கர் மாதிரியான கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட மாட்டேன்.
13. என் குடும்பத்தில் எல்லாரும், 80 வயது வரை, அவர்களின் நினைவை இழக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
14. அதிக உடல் பருமன் இல்லாமல் இருக்கிறேன்.
15. முழு தானியங்கள் மற்றும் வெண்ணெய் போன்ற ஸ்கின்னுக்கு தேவையான வைட்டமின், 'ஈ' நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்கிறேன்.
16. இதயத்துக்கு நன்மை தரும், ஆலிவ் எண்ணெயை தான், சமையலுக்கு அதிகம் உபயோகிக்கிறேன்.
17. மது அருந்தும் பழக்கம் இல்லை.
18. ரத்தக் கொதிப்பின் அளவை நார்மலாக வைத்துள்ளேன்.
19. எனக்கு சர்க்கரை நோய் இல்லை.
20. குறட்டை, துாக்கமின்மை போன்ற இரவு நேர குறைபாடுகள் இல்லை.
21. மன அழுத்தத்தை என்னால் குறைத்துக் கொள்ள முடியும்.
22. எனக்கு நல்ல நட்பு வட்டம் இருக்கிறது. அவர்களோடு பேசுவது, நேரத்தை கழிப்பது என்று சுறுசுறுப்பாக இருப்பேன்.
23. எனக்கு, ஞாபகமறதி பிரச்னை இல்லை.
இப்போ, நீங்க எத்தனை கேள்விக்கு, 'ஆம்' என்று பதிலளித்தீர்களோ, ஒவ்வொன்றுக்கும், ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில், கூட்டி பாருங்கள். சரி, உங்கள் வயதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா...
மதிப்பெண், 20லிருந்து 23 வரை இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதிலிருந்து, 15ஐ கழித்து கொள்ளுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. இதை அப்படியே, 'மெயின்டெயின்' செய்யுங்கள். பிற்காலத்தில் எந்த நோயும் உங்களை அண்டாது.
பதினைந்தில் இருந்து, 19 ஆக இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதிலிருந்து, 10ஐ கழித்து கொள்ளுங்கள். இதுதான் உங்களின், உண்மையான வயது. நீங்கள், உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கிறீர்கள். ஆனால், இல்லை என்று பதிலளித்த கேள்விகளை மட்டும், எப்படி சரி செய்யலாம் என்று யோசியுங்கள்.
பத்தில் இருந்து, 14 வரை இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் உண்மையான வயதில் தான் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் அதிக கவனமாக இருப்பது அவசியம்.
ஏழிலிருந்து, ஒன்பது வரை இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதில், 5ஐ கூட்டுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. சற்று சோர்வாகவும், மெதுவாகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள். இதுதான் சரியான சமயம் உங்களை சுறுசுறுப்பாக மாற்ற.
ஏழுக்கும் குறைவாக இருந்தால், உங்களுடைய ஒரிஜினல் வயதுடன், 10ஐ கூட்டுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. உடனே, ஒரு, 'மாஸ்டர் செக் - அப்' செய்யுங்கள்.
மேலே சொன்னவைகளை பின்பற்றுங்கள்.
ஆர். கீதா