தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எது அழுக்கு?

எது அழுக்கு?

எது அழுக்கு?


PUBLISHED ON : பிப் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை எழில் மிகுந்த கிராமம், ரஹ்மத் ஆபாத்; இன்னும் அங்கு, நகரத்தின் நரக விரல்கள் தீண்டாமல், எதார்த்த உணர்வுகள் மிச்சமிருந்தன. ஒரு காலத்தில், விவசாயத்தில் வளம் செழித்த மண், தற்போது, தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. அதனால், பலுான் மற்றும் இயற்கை காட்சி போஸ்டர் விற்பது என்றும், கத்தி சாணை பிடிப்பது என்றும் கிடைத்த வேலையை செய்து வந்தனர். பக்கத்து ஊர்களுக்கு காலையில் சென்றால், இரவு தான், வீடு திரும்புவர்.

ஊரில் வசதி படைத்த சிலரில் சுலைமான் ஹாஜியாரும் ஒருவர். மளிகைக் கடை வைத்திருந்தார். மனைவி இறந்து நான்கு ஆண்டுகளாகின்றன. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து கல்யாணமும் செய்து வைத்தார். தங்கள் மனைவியருக்கு இக்கிராமம் பிடிக்காததினால், திருமணம் முடிந்த ஒரு மாதத்தில், நகரங்களுக்கு சென்று, 'செட்டில்' ஆகிவிட்டனர், ஹாஜியார் மகன்கள். தானாகவே சமைத்து சாப்பிட்டார் ஹாஜியார். 60 வயது என்றாலும், பார்க்க வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருப்பார். 'இன்னொரு நிக்காஹ் முடிக்க வேண்டியது தானே...' என, கடைக்கு வருவோர் சொல்வர்; அதில் அவருக்கு இஷ்டமில்லை.

அதிகாலையிலேயே எழுந்து, சிறிது தொலைவில் உள்ள, சிறிய குடிசையிலான மசூதியில் தொழுவார். பின், வெளியே வந்து, வாசலில் வரிசையாக காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, து ஆ ஓதுவார்; சிலர், பாட்டிலில் தண்ணீரை எடுத்து வந்து இருப்பர்; அதிலும் ஓதி கொடுப்பார். பெரும்பாலும் வருபவர்கள் இந்துக்கள் என்றாலும், ஒரு சில முஸ்லிம் பெண்களும், குழந்தைகளை துாக்கி வருவதுண்டு.

எல்லார் மீதும் ஓதும் ஹாஜியார், புர்கா போட்ட ஒரு பெண்ணை மட்டும் பார்த்ததும், விலகி சென்று விடுவார். அவள் அழுக்கு படிந்தவள், அவள் மீது து ஆ ஓதினால், இறைவன் தன் மீது கோபப்படுவான் என நினைப்பார். தன்னை மட்டும் ஒதுக்குவது கண்டு, அந்த பெண்ணிற்கு கண்கள் கலங்கும்; அதை துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்து, அருகில் இருக்கும் டீ கடைக்கு செல்வாள்.

அவள் டீ கடைக்கு வந்ததும், எங்கிருந்தோ நாய்கள் ஓடி வந்து, அவளை சூழ்ந்து கொள்ளும். பிஸ்கெட் வாங்கி, எல்லா நாய்களுக்கும் போடுவாள். பின், ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் தன் குடிசையை நோக்கிச் செல்வாள். அவள் தனியாகத் தான் இருக்கிறாள். அவள் யார், எந்த ஊர், எங்கிருந்து வந்தாள் என, யாருக்கும் தெரியாது.

அவள் பெயர் நஸ் ரீன்; ரொம்ப அழகாக இருப்பாள். அவளை தேடி, ஆண்கள் அவள் குடிசைக்கு வந்து செல்வதுண்டு. சிலர் கொஞ்ச நேரம் தங்குவர்; இன்னும் சிலரோ, இரவு முழுக்க இருப்பர். ஊரில் உள்ள சில ஆண்கள், மனைவியின் முன், அவளை கேவலமாக திட்டினாலும், மனைவி ஊரில் இல்லாத சமயம், அவளை வீட்டிற்கே அழைத்து வந்து விடுவர்.

மனைவி ஊரிலிருந்து திரும்பியதும், அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்லிவிட, அந்த வீட்டில் சண்டை, சச்சரவு என்று ரணகளமாகி விடும்; காட்டிக் கொடுத்த பெண்களுக்கு குஷி. எவ்வளவு நாள் தான், 'டிவி' சீரியலையே பார்ப்பது...

நஸ் ரீனுக்கு பயந்தே, பல பெண்கள் தங்கள் அம்மா வீட்டிற்கு போவதையே விட்டு விட்டனர். அவளுடைய இந்த செயலை கேள்விப்பட்டு தான் அவளை வெறுத்தார் ஹாஜியார்.

வெள்ளிக்கிழமை தொழுகை சமயம்... பிரியாணி பொட்டலங்களை வாங்கி, மசூதிக்கு வெளியே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தந்து கொண்டிருந்தாள், நஸ் ரீன். அப்போது, தொழுகை முடிந்து வெளியே வந்த ஹாஜியார், 'அதையெல்லாம் சாப்பிடாதீங்க... துாக்கி வீசுங்க...' என்றார்.

பசியில் இருந்த ஒரு சிறுமி, அவசர அவசரமாக பொட்டலத்தை பிரித்தபடி, 'இதை ஏன் சாப்பிடக் கூடாது...' என்று கேட்டாள்.

'இந்த சாப்பாடு ஹராம்...' என்றார்.

'இதுவரை யாருமே எங்களுக்கு சோறு தரலே... அந்த அக்கா தான் தருது...' என்றபடி, பிரியாணியை அள்ளி விழுங்கினாள், சிறுமி.

அன்று, தன் மகன்களை பார்க்க பட்டணத்திற்கு சென்று திரும்பிய ஹாஜியார், இருட்டுவதற்குள் ஊர் திரும்பிட வேண்டும் என நினைத்து, தன், டி.வி.எஸ்., வண்டியை வேகமாக செலுத்தினார். ஆனால், அது ஒத்துழைக்கவில்லை. கொஞ்சம் பழைய மாடல் வண்டி. திடீரென, வானம் இருண்டது; இடியும், மின்னலும், ஒலியும் - ஒளியும் போல, வாணவேடிக்கை காட்டியது.

கொஞ்ச நேரத்தில், மழை கொட்ட ஆரம்பித்தது. அதற்கேற்றாற் போல், வண்டியும் நின்று விட்டது. எவ்வளவு முயன்றும், 'ஸ்டார்ட்' செய்ய முடியவில்லை. மொபைல் போனில், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால், சிக்னலும் கிடைக்கவில்லை.

வழியில், எந்த வண்டியும் செல்வதற்கான அறிகுறியே இல்லை. மழையில் நனைந்தபடி இருந்த ஹாஜியார், இனி என்ன செய்வது என்று புரியாமல், கலங்கினார். அப்போது, மின்னல் வெளிச்சத்தில், சிறிது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. 'அங்கு சென்று ஏதாவது உதவி கேட்கலாம்...' என்று எண்ணி, குடிசையை நோக்கிச் சென்றவர், சிறிது தயங்கி, கதவை தட்டினார்.

கதவை திறந்த நஸ் ரீன், அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். புடவை முந்தானையால், முகத்தை மறைத்துக் கொண்டாள். ஹாஜியாருக்கோ இதயத்தில் இடி விழுந்தது. 'எங்கே தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ...' என்று பயந்து, தயங்கியபடியே விஷயத்தை சொன்னார்.

''உள்ளே வாங்க...'' என்றாள் நஸ் ரீன்.

உடல் நடுங்க, அவளுடைய குடிசைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

''கொஞ்ச நேரம் தான்; மழை நின்றதும் போயிடுவேன்...''

''பரவாயில்ல... இந்தாங்க டவல்; முதல்ல தலைய துவட்டுங்க,'' அவள் நீட்டிய டவலை வாங்கி, தலையை துவட்டினார்.

''சாப்பிடறீங்களா...''

''வேணாம்; பசியில்ல...''

சங்கடத்துடன் ஒரு ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்தார். ஒரு புடவையை எடுத்து, திரைச்சீலையை போல், நடுவில் போட்டாள். இந்த பக்கம் ஹாஜியார், அந்த பக்கம் நஸ் ரீன். அவருக்கு படுக்க பாய், தலையணை, போர்வை கொடுத்தாள். மழை நிற்பதை போல தெரியவில்லை. அவர் உடல் களைத்திருந்தது. சற்று நேரம் படுக்கலாம் என, பாயில் உடம்பை சாய்த்தார்; ஆனால், துாக்கம் வரவில்லை. பசி வேறு; அதை, அவளிடம் எப்படி சொல்வது என்று தயங்கினார்.

அந்தப் பக்கம் பாயில் படுத்திருந்த நஸ் ரீனுக்கு வியப்பாக இருந்தது. 'இறைவா... நான் ஒரு பாவி; ஒரு நல்ல மனிதருக்கு அடைக்கலம் கொடுக்கும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறாய்... இவரின் காலடிபட்ட இந்த வீட்டில், இனி, எந்த அசிங்கமும் நடக்காது. அவர் பார்வை என் மீது பட்டதும், என் பாவம் எல்லாம் கரைந்து விட்டது போல் உணர்கிறேன். இனி, நான் ஏதாவது நல்ல தொழில் செய்து பொழச்சுக்குவேன்...' என, எண்ணினாள்.

ஆனால், ஹாஜியாரோ, 'இறைவா... நான் என்ன பாவம் செய்தேன்; எதற்கு இந்த தண்டனை... காலம் முழுக்க உன்னை பிரார்த்தித்தேனே, அதற்கு இதுதான் பரிசா... இவ, நரகத்தின் அடையாளம்; இவளுக்கு அருகில் நான் இருப்பதா... நான் இங்கே இருப்பதை யாராவது பார்த்து விட்டால், என்னைப் பற்றி என்ன நினைப்பர்...' என நினைத்தார்.

மனிதர்களை பற்றி பயந்த ஹாஜியார், இறைவன் அவர் மூலமாக, அவளை மாற்றி விட்டான் என்பதை உணரவில்லை. வெறும் சடங்குகளில் ஊறிப்போன மனசு, சத்தியத்தை உணர்வதில்லை.

பசியெடுக்கவே, மெல்ல எழுந்த ஹாஜியார், மெதுவாக சமையல் அறைக்கு சென்றார். அவள் துாங்கி விட்டாள் என்று நினைத்தார்; ஆனால், துாங்குவதை போல் பாவனை செய்து, அவர் செயலை கண்டு புன்னகைத்தாள்.

சோறும், ரசமும், ஊறுகாயும் தான் இருந்தது. இவ்வளவு ருசியான சாப்பாட்டை அவர் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. திரும்பும்போது ஏதேச்சையாக அவளை பார்த்தார். ஒரு போர்வை தான் இருந்திருக்கும் போல். அதை தனக்கு கொடுத்து, குளிரில் நடுங்கிக் கொண்டிந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்தார்; அவளுடைய அழகு சலனப்படுத்தியது; மெல்ல அவளை நெருங்கினார்.

நஸ் ரீன் துாங்குவது போல் நடித்தாலும், உடல் நடுங்க ஆரம்பித்தது. 'இறைவா... என்னால் இந்த நல்ல மனிதர் பாவம் செய்து விடக் கூடாதே...' என நினைத்தாள்.

அவள் அருகே நெருங்கியவர், அவள், தனக்கு தந்த போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி, தன் இடத்திற்கு சென்று துாங்கினார்.

மழை நிற்கவும், விடியவும் சரியாக இருந்தது. அவள் அமைதியாக துாங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாமல் வெளியேறினார், ஹாஜியார்.

டி.வி.எஸ்., வண்டியை தள்ளியபடியே, மசூதி வழியாக வந்தவர், ஒரு வினாடி மசூதியை பார்த்தபடி நின்றார்.

''ஏன் வெளியே நின்னுட்டீங்க... உள்ளே வாங்க,'' என்று அழைத்தார் மோதினார்.

''இதோ... வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, உடனே வந்துடறேன்,'' என்று கிளம்பினார்.

உடம்பு மற்றும் மனசு இரண்டிலும் படிந்த அழுக்கை, குளிர்ந்த நீரை ஊற்றி அகற்றிய ஹாஜியார், தெளிந்த மனதுடன், 'அல்லா, இவ்வுலகில் யாரையும் கெட்டவராக படைக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறான வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட நஸ் ரீன் போன்றவர்கள் இரக்கத்துக்கு உரியவர்கள்; அவர்களை வெறுத்து ஒதுக்காமல், அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை மதித்து, அவர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்க, து ஆ ஓத வேண்டும்...' என்ற முடிவுடன், மசூதி நோக்கி சென்றார்.

ஷானுார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us