sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வாழ்க்கை சக்கரம்!

/

வாழ்க்கை சக்கரம்!

வாழ்க்கை சக்கரம்!

வாழ்க்கை சக்கரம்!


PUBLISHED ON : மே 05, 2013

Google News

PUBLISHED ON : மே 05, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரவி, தன் மனைவி மற்றும் தாயாருடன் காரில், சென்று கொண்டிருந்தான். வழியில், முதியோர் இல்லம் ஒன்று, கண்ணில்பட்டது. அதன் அருகில், காரை நிறுத்தினான்.

''அம்மா... இந்த வீட்டு திண்ணை மேல, கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு. நானும், ரமாவும் என் நண்பர் வீட்டுக்குப் போயிட்டு வந்து, உன்னை அழைத்துச் செல்கிறோம்,'' என்றான் ரவி.

'ஏம்ப்பா... உன் நண்பர் வீட்டுக்கு, நானும் வந்தால், உன் கவுரவம் குறைந்து விடுமா...' எனக் கேட்க நினைத்தாள் ரவியின் அம்மா. இருவரும் தன்னைத் திட்டுவார்களோ எனப் பயந்து, அவன் கூறியபடி, திண்ணை மீது அமர்ந்து அவன் வருகைக்காக காத்திருந்தாள். களைப்பு மிகுதியால், அப்படியே தூங்கி விட்டாள்.

''அம்மா...எழுந்திரிங்க. யார் நீங்க... ஏன், இங்கே வந்து படுத்திருக்கீங்க,''என்று கேட்டபடி, அந்த இல்லக் காப்பாளர் அவளை எழுப்பினார். சோர்வுடன் எழுந்த பார்வதி அம்மாள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.

''ஐயா... என் மகனும், மருமகளும் என்னை இங்கே இருக்கச் சொல்லிவிட்டு, சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்தவுடன் சென்று விடுகிறேன்,'' என்றாள்.

''ஏம்மா... மதியம் சாப்பிட்டீங்களா...''என்று அந்தப் பெரியவர் கேட்ட பின் தான் தெரிந்தது, தான் காலை முதல், இங்கு தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பது.

''சரி, உள்ளே வாருங்கள்... சாப்பாடு இருந்தால் தருகிறேன்,'' என்று கூறி, அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

''ஏம்மா... நீண்ட நேரமா காத்துக்கிட்டு இருக்கிறதா சொல்றீங்க... எங்க போனாங்க உங்க மகனும், மருமகளும்?''

''அதாங்க தெரியலை. நண்பர் வீட்டுக்கு போய்ட்டு, கொஞ்ச நேரத்துல வந்துடறோம்ன்னு தான், சொல்லிட்டு போனாங்க. எங்கே போனாங்கன்னு தெரியலையே!''

''ஏம்மா, நான் ஒரு விஷயம் சொல்றேன், கோபப்படாதீங்க. இங்கே தங்கியிருக்கிற முதியோரெல்லாம், தங்கள் பிள்ளைகளால் கொண்டு வந்து விடப்பட்டவங்க தான். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை, இங்கே அழைத்து வந்து, எங்களிடம் விவரங்களை சொல்லி, 'மாதா மாதம் பணம் அனுப்புகிறோம், ஜாக்கிரதையாகப் பார்த்துக்குங்க... நாங்க வேலைக்குப் போகிறதாலே, இவுங்களைத் தனியா வீட்ல விட்டுட்டுப் போவதற்கு பயமாயிருக்கு. அதனால் தான், இங்கே வந்து சேர்க்கிறோம்...' என்றெல்லாம் சொல்லிவிட்டு போவர். ஆனால், உங்கள் மகனும், மருமகளும் உங்களுக்கே தெரியாமல், உங்களை இங்கே கொண்டு வந்து விட்டு போய் உள்ளனர். எங்களிடம் சொன்னால், செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்குமோ என்றெண்ணி, உங்களை அநாதரவாக விட்டு, சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டனர் என நினைக்கிறேன்,'' என்றார்.

அவர் சொல்வதைக் கேட்டு, விக்கித்து நின்றாள் பார்வதி அம்மாள். என்மகன் இப்படிக்கூட செய்வானா? நான் அவனுக்கு, அவ்வளவு பாரமாகவா ஆகிவிட்டேன்... எண்ண ஓட்டம், கண்ணில் நீரை வரவழைத்தது. அவனை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தோம் என்பது ஒரு நிமிடம், அவள் மனத்திரையில் காட்சிகளாய் ஓடியது.

''சரிம்மா... கவலைப்படாதிங்க. இந்தக் காலத்துப் பிள்ளைங்க கல்யாணம் ஆயிட்டாலே, பெத்தவங்களை மறந்துடுவாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க. இங்கேயே நீங்க தங்கிக்கலாம்,'' என்றார் அந்தப் பெரியவர்.

''ரொம்ப நன்றிங்க,'' என்றாள் பார்வதி அம்மாள்.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அந்த இல்லத்தின் முன், கார் ஒன்று வந்து நின்றது. நான்கு வயதுக் குழந்தையுடன், தம்பதியர் காரிலிருந்து இறங்கி அலுவலக அறைக்குள் நுழைந்தனர். காப்பாளர், அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, அவர்கள் பின்னால் யாராவது நிற்கிறார்களா எனப் பார்த்தார்.

''என்ன பார்க்கிறீர்கள்? நாங்கள் வயதானவர்களைக் கொண்டு வந்து, உங்கள் இல்லத்தில் விடுவதற்கு வரவில்லை. அதற்குப் பதிலாக, இங்குள்ள வயதான ஒரு அம்மாவை அழைத்துப் போக வந்துள்ளோம்,'' என்றாள் வந்த பெண்மணி. அவளுக்கு முப்பது அல்லது முப்பைந்தைந்து வயது தானிருக்கும். பார்ப்பதற்கு படித்தவளாகவும், பண்புள்ளவளாகவும் இருந்தாள்.

காப்பாளர், ''உட்காருங்கள், என்ன சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

உடனே, அந்தப் பெண்மணி, ''ஐயா... நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம். கை நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், எங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை. எனவே, இங்குள்ளவர்களில், ஒரு வயதான அம்மாவை எங்களுடன் அனுப்பி வைத்தால், அவர்களை என் அம்மாவை போல் பார்த்துக் கொள்வேன்.

''எங்கள் குழந்தையை, வீட்டிலிருந்து அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு வேண்டிய உதவிகளைக் செய்து, தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் அழைத்து வர வேண்டும். அவர்கள், எங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம். வேலைக்காரர்கள் மீது, எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தான் மனது வைத்து, எங்களுக்கு உதவ ஒரு வயதான அம்மாவை எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றாள்.

''அம்மா. நீங்க சொல்வதும் சரி தான். இங்குள்ள வயதான பெண்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளால் கொண்டு வந்து விடப்பட்டவர்கள். அவர்களை பார்க்க, அவ்வபோது வந்து செல்வர். அவர்கள் யாரையும் விட முடியாது. ஆனால், சில நாட்களுக்கு முன், ஒரு அம்மா வந்துள்ளார். அவர்களை, அவர்களது மகனே எங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்து விட்டு சென்று விட்டார். அந்த அம்மாவுக்கும் வேறு யாரும் துணை இல்லாததால், அவர்களை கேட்டுப் பார்க்கிறேன்,'' என்று சொல்லி, பார்வதி அம்மாளை அழைத்தார் .

பார்வதி அம்மாள் உள்ளே நுழைந்தவுடன், அந்த பெண் தன்னையறியாமல் எழுந்து நின்றார்.

''ஐயா... இவர்களைப் பார்த்ததும், என் அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறது. இவர்களையே தயவு செய்து, எங்களுடன் அனுப்பி வையுங்கள். உங்கள் இல்லத்திற்கும், எங்களால் இயன்ற நன்கொடை தருகிறோம்,'' என்றாள்.

'' அதெல்லாம் வேண்டாம். ஆண்டவன் அருளால், எங்களுக்கு வேண்டிய பொருளுதவி கிடைக்கிறது,'' என்று கூறி,

பார்வதி அம்மாளை பார்த்து, ''பார்வதி அம்மா, நீங்கள் இவர்களுடன் செல்ல விருப்பமா? இவர்கள் வீட்டிலேயே தங்கி, இவர்களின் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும்... போகிறீர்களா?'' எனக் கேட்டார்.

பார்வதி அம்மாளும், அவர்களுடன் செல்ல சம்மதித்தாள். அவர்கள் அனைவரும் காரில் ஏறினர். கார் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்திதள்ள, பார்வதி அம்மாள் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

பார்வதியும், அவள் கணவனும் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர். முதலில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனைச் செல்லமாக வளர்த்து வந்தனர். அடுத்து, ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில், அவளது கணவன் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தான். பார்வதிக்கு அந்தப் பெண் குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது. இது பிறந்தவுடனே, தன் தந்தையை பலி வாங்கி விட்டதே என்றெண்ணி வருந்தினாள். அதோடு மட்டுமல்லாமல், இப்பெண்ணை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம்! பையனாவது கடைசி காலத்தில், நம்மைக் காப்பாற்றுவான், இந்தப் பெண் பெரியவளானவுடன், எவனையாவது திருமணம் செய்து கொண்டு போகப் போகிறாள், நம்மை எங்கே கடைசி வரை காப்பாற்றுவாள், என்றெல்லாம் நினைத்தவளாக அந்த பெண் சிசுவை ஒரு அனாதை இல்லத்தின் திண்ணை மேல் கிடத்தி விட்டு, யாருக்கும் தெரியாமல் வந்து விட்டாள்.

அந்தப் பழைய நினைவுகள், இப்பொழுது அவள் மனதில் காட்சியாக விரிந்தன. அன்று, என் மகளைப் பாரமாக கருதி, யாருக்கும் தெரியாமல், அனாதை இல்லத்தில் விட்டுவிட்டேன். இன்று, என்மகன் என்னை பாரமாகக் கருதி, முதியோர் இல்லத்தில், யாருமறியாமல் விட்டு சென்றான். 'முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பார்களே... அது இது தானோ...' என்றெண்ணியவளாய் கண் கலங்கினாள் பார்வதி அம்மாள்.

எந்தப் பெண் குழந்தை வளர்ந்து பெரியவளானவுடன், தன்னைக் காப்பாற்றாமல், கணவனுடன் சென்று விடுவாள் என்று நினைத்தாளோ, அதே பெண் குழந்தை வளர்ந்து, பெரியவளாகி, அனாதை இல்லத்தில் வளர்ந்தாலும், படித்துப் பட்டம் பெற்று, நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டதோடல்லாமல், தன்னைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்ற அழைத்துச் செல்கிறாள் என்பதை அறியாத பார்வதியம்மாள், தன் மகளுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

தன் தாயைத் தான் அழைத்து செல்கிறோம் என்பதை அறியாத, அந்தப் பெண்ணும், தன் குழந்தையை பார்த்துக் கொள்ள, ஒரு நல்ல அம்மா கிடைத்து விட்டாள் என்ற மகிழ்ச்சியில், தன் தாயுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

இறைவன் போடும் கணக்குக்கு முன்னால், நம் கணக்கு எப்போதும் தப்புக் கணக்கு தான்!

***

சுந்தர இளங்கோவன்






      Dinamalar
      Follow us