தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (5)

நானா போனதும்; தானா வந்ததும்! (5)

நானா போனதும்; தானா வந்ததும்! (5)


PUBLISHED ON : டிச 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் முன்பு ஒரு தோட்ட வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். வீட்டுக்கு அருகேயே ஒரு பெரிய பாம்பு புற்று இருந்தது. வீட்டுச் சொந்தக்காரரிடம் அது பற்றி நான் அவசரமாகவும், அடிக்கடியும் சொல்வேன்... 'சார்... பாம்பு புற்றாக இருக்கு. அதை, எப்படியாவது கொஞ்சம் சரி பண்ணி விட்டால் பரவாயில்லை...' என்பேன்.

அந்த வீட்டுக்காரர் மகா கெட்டிக்காரர். 'அந்தப் புற்றில் பாம்பு கிடையாது...' என்றார்.

'அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?' என்றேன்.

அதற்கு அவர், 'குடியிருந்தால், மாசா மாசம் எனக்கு வாடகை கொண்டு வந்து தந்திருக்குமே! என் வீடுகளில், எனக்கு தெரியாமல், வாடகை கொடுக்காமல், ஒரு பூச்சி புழு கூட இருக்க நான் அனுமதித்தது இல்லை...' என்று சிரித்தார்.

உயிர் போகிற விஷயங்களில் கூட, சிலர் இப்படித்தான் சிரித்து மழுப்பி விடுவர்.

எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், இடம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான சமாச்சாரம். அதுவும் எழுத்தாளர்களுக்கு இட வசதி ரொம்ப, ரொம்ப அவசியம்.

அவர்கள் எழுதிய புத்தகங்களையோ, விரும்பி படிக்க வேண்டும் என்று சேர்த்து வைக்கும் புத்தகங்களையோ எழுதிக் குவித்த கதைகளை வைப்பதற்கு பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இடம் கிடையாது.

இந்த லட்சணத்தில் அடிக்கடி வீடு மாற்றும் போது, பல விழுக்காடு புத்தகங்களை இழக்க நேரிடுகிறது. 'வீடு முழுவதும் ஏன்தான் இவ்வளவு புத்தகங்களோ?' என்று சலிக்காத மனைவிமார் அபூர்வம்.

நான் சற்றுக் கொடூரமாக பதில் அளிப்பேன். 'சலூனில் முடிதானே நிறைய இருக்கும்; எழுத்தாளர்கள் வீட்டில் புத்தகங்கள்தானே இருக்கும்...' என்பேன்.

இப்போதெல்லாம் புத்தகங்களால் ஏற்படும் இட நெருக்கடியைத் தீர்க்க, ஒரு வழி கண்டுபிடித்து விட்டனர். சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கதைகளையெல்லாம், 'சிடி'களாக பதிவு செய்து விடுகின்றனர்.

சில பிரமுகர்கள் நிறைய சாதனைகள் செய்திருப்பர்; ஆனால், அவரை பாராட்டுகிற பேர்வழி, சரியான ஞாபக மறதி ஆசாமியாக இருப்பார்.

ஆகவே, இன்னார் இன்ன சாதனை செய்திருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுகிறோம் என்று ரொம்ப சுருக்கமாக, குறிப்பிட்ட ஒரு சாதனையை பற்றி மட்டும் சொல்லி, அறிமுகப்படுத்துவார்.

சாதனையாளர் மனசில் பொருமிக் கொள்வார். 'என்னய்யா இந்த மனுஷன்... நான் கஷ்டப்பட்டு வாங்கின கலைமாமணி பட்டத்தையே சொல்ல மறந்துட்டாரு...' என்ற நினைப்புடன், தன்னுடைய நன்றி உரையில் சாமர்த்தியமாக தான் வாங்கிய பட்டங்கள், கவுரவங்கள், சிறப்புகள் இவற்றைத் தெரிவித்து விடுவார்.

எப்படியென்றால், 'அன்பர்களே... நான், 2006ம் ஆண்டு வாங்கிய கலைமாமணி விருதின் போது அடைந்த மகிழ்ச்சியை விட, கடந்த ஆண்டு காக்கி நாடா கர்நாடக இசைக் குழு தந்த, ரசிகஸ்ரீ விருதை அடைந்த போது ஏற்பட்ட புளங்காங்கிதத்தை விட, மாநில பிசியோதெரபிஸ்ட் சங்கத் தலைவர் என்ற பொறுப்பில் ஏற்படும் திருப்தியை விட, பன்னாட்டு வர்த்தக கிளையில் மேலாளர் என்ற பெருமையை விட, அருள்மிகு சமயபுர அம்மன் கோவில் அறங்காவலர் என்ற அந்தஸ்தை விட, சுவர் இலக்கிய சொல் கழகத்தின் ஸ்தாபகர் என்ற நினைப்பை விட, இன்று, இந்த மன்றம் எனக்கு அளித்த பாராட்டையும், 'கவிதைமணி' என்ற சிறப்பையுமே பெரிதாக போற்றுகிறேன்...' என்று சொல்லி, அவர் இதுவரை பெற்ற விருதுகள், பதவிகள் எதையும் விட்டு விடாமல், வந்தவர்கள் காதில் பதிவு செய்த திருப்தியுடன் அமநாவல்.

நான் வேலை பார்த்த காரியாலயத்தில், இரவு நேர டூட்டி அடிக்கடி வந்து சேரும். அப்போது, எனக்கு துணையாக காரியாலயத்திலேயே ஒரு பூனைக் குட்டி இருந்து வந்தது.

ஆபீசில் ராத்திரியில் தனியாக இருக்க எனக்கு கொஞ்சம் பயம்தான்; ஆனால், பூனைக் குட்டி என் மேஜைக்கு கீழே படுத்திருந்தால், ஒரு தைரியம். அந்த வெள்ளைக் குட்டி, சில சமயம், மேஜை மேலே தாவி ஏறி நான் புரூப் சரியாக திருத்துகிறேனா என்று பார்க்கும்; ஆனால், ஒரு தரம் கூட தப்பு கண்டுபிடித்ததில்லை.

பாத்ரூமுக்கு இருட்டில் நடந்து போக எனக்கு பயமாக இருக்கும். ஆனால், பூனைக் குட்டி என் கூடவே, 'மியாவ் மியாவ்' என்று கத்திக் கொண்டு வருவது ஆறுதலாக இருக்கும்.

என் கூடவே அது வருவதற்கு ஒரு காரணம் இருந்தது. பாத்ரூம் போகிற வழியில்தான், டைனிங் ஹால். மதிய நேரம் அங்குதான் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவர் - நானும்.

அய்யோ பாவம் பூனைக் குட்டி. நான் டைனிங் ஹாலுக்குப் போகிறேனாக்கும், கூடவே சென்றால் தின்ன ஏதாவது கிடைக்கும் என்று தப்பாக கணக்கு போட்டு, கூடவே வரும்.

எனக்கு ராத்திரியில் சப்பாத்தி சாப்பிட கொஞ்சமும் பிடிக்காது; ஆனால், பூனைக் குட்டிக்கு சப்பாத்திதான் பிடிக்கும். அதனால், ஆபீசில் இரவு தங்கும் போது, 'இரவுக்கு சப்பாத்தி அனுப்பி விடு...' என்று மனைவியிடம் சொல்வேன்; பூனைக்குப் போட்டு மகிழலாமே!

என்னோடு இப்படி விளையாடிக் கொண்டிருந்த பூனைக் குட்டிக்கு, கொஞ்ச நாளில் காதல் மலர்ந்து விட்டது; என் மேல் அல்ல. எங்கிருந்தோ வந்த ஒரு கடுவன் பூனை மீது; அதாவது, ஆண் பூனை மீது.

அந்தக் கடுவன் பூனைக்கு கர்ண கடூரமான குரல்; பொருத்தமில்லாத வயசு; கரடு முரடான தேகம் - அதன் மூஞ்சியும், முகரக் கட்டை நிறமும்! அடிக்கடி வரும் அந்த ஆண் பூனையை பார்த்தாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

என் பூனைக் குட்டியிடம், 'அவசரப்படாதேடி குட்டி... உனக்கு நல்ல அழகான, உன் வயசுக்கு பொருத்தமான வரனாக தேடித் தருகிறேன்...' என்று என்னால் சொல்ல முடியுமா? சொன்னால்தான் அதற்கு புரியுமா?

கடுவன் பூனையின் குரல் கேட்டதும், பூனைக் குட்டி என்னைத் தனியே விட்டுவிட்டு, அந்த முரட்டுப் பூனையை நோக்கி ஓடிவிடும். கொஞ்சம் தாமதித்தாலும் கடுவன் பூனை ஜன்னல் பக்கமாக வந்து, 'நான் வந்தாயிற்று...' என்று கூறுவது போல குரல் கொடுக்கும்.

அந்தக் கடுவன் பூனையை நான் எப்படி வெறுத்தேனோ, அதே போல அதுவும் என்னை வெறுக்கவே செய்தது - ஏதோ அதனுடைய காதலியை நான் கட்டுப்படுத்தி, சிறை வைத்திருப்பது போல!

நான் விரட்டினால் கூட ஓடாமல், நின்று என்னை முறைத்து பார்க்கும். நானும் தைரியசாலியல்லவா? 'பூனைக்கெல்லாம் பயப்படலாமா?' என்று அதை துணிச்சலுடன் பதிலுக்கு முறைத்துப் பார்ப்பேன்.

அப்புறம் சரி, சரி... இதை போய் முறைப்பானேன் என்று பெருந்தன்மையுடன் வாபசாகி விடுவேன். மேலும், அது மாப்பிள்ளை பூனை. கடைசியில் பூனையை வளர்த்து, பூனை கையில் கொடுத்தாயிற்று.

நான் சப்பாத்தி போட்டு வளர்த்த பூனைக்குட்டி, அந்த முரட்டு முதிய காதலனுடன் ஒரு தினம் எங்கோ ஓடிவிட்டது.

பூனை பாதிப்பு, ஹிப்னாடிச பூனையை மையப்படுத்தி, ஒரு நாவலையே எழுத வைத்தது.

என்னை முறைத்து பார்த்த அந்த முரட்டு பூனைக்கு, ஏதாவது ஹிப்னாடிச சக்தி இருந்து தொலைத்தால் என்ன நடக்கும் என்று நான் கற்பனை செய்து பார்த்ததன் விளைவுதான் அந்த நாவல்.

— தொடரும்.
பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us