தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (11)

நானா போனதும்; தானா வந்ததும்! (11)

நானா போனதும்; தானா வந்ததும்! (11)


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சில பேர் கிட்டே, புரூப் காட்டலாம்; சில பேர் கிட்டே, காட்டக் கூடாது...' என்பர், பத்திரிகை ஆபீஸ் நண்பர்கள்.

பிரபல எழுத்தாளர்கள் சிலர், கற்பனையிலும், நடையிலும் அபாரமாக எழுதுவர். ஆனால், ஏகப்பட்ட இலக்கண பிழைகள் இருக்கும். அவரவர் வந்த வழி அது. இலக்கணம் கற்ற வழி அது. வழிப்படுத்தப்பட்ட பழக்கம்.

ஓரொரு பத்திரிகையும், சில வார்த்தைகளை இப்படித்தான் எழுதுவது என்று வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். (சிலர், 'காபி' குடிப்பர்; சிலர், 'காப்பி'தான் குடிப்பர்!)

புதிதாக, ஆசிரிய இலாகாவில் சேருகிறவர்களுக்கு, தங்கள் பத்திரிகையின் சம்பிரதாயத்தை, சீனியர்கள் சொல்லிக் கொடுத்து விடுவர்.

நான் வேலை பார்த்த, 'குமுதம்' இதழில், 'புடைவை' கிடையாது; 'புடவை' தான்.

ஆனால், நான் கதை, கட்டுரை எழுதும் போது, 'புடைவை' என்றே எழுதி விடுவேன்.

என் சீனியரும், நண்பருமான, ரா.கி.ரங்கராஜன், பலதரம் சொல்லி பார்த்தும், நான், புடைவை அணிபவனாகவே இருந்தேன். எனக்கு ஞாபகத்தில் தங்கும்படி, ஒருதரம் ஒரு, 'டயலாக்' சொன்னார்...

'அடேய் மடையா... புடைவை இல்லைடா, புடவை. நீர் மடையனல்ல, ஆகவே புடைவை அல்ல...' என் கை எப்போதாவது புடைவை என்று எழுதினால், உடனே, 'நான் மடையனல்ல...' என்பது ஞாபகத்துக்கு வந்து விடும்.

புடைவையை, புடவை ஆக்கி விடுவேன்.

'பிரம்மச்சாரி'யில், 'ச்' போடாமல், பிரம்மசாரி என்று தான் குமுதத்தில் எழுதுவோம். ஆசிரியர், எஸ்.ஏ.பி., எழுதிய முதல் நாவலின் பெயர், 'பிரம்மசாரி' தான் - 'ச்' கிடையாது.

நான் குமுதத்தில், அப்போது வேலையில் சேர்ந்திருக்கவில்லை. 'நாவலின் தலைப்பில், 'ச்' விட்டுப் போசே...' என, ஒரு கடிதம் குமுதத்திற்கு எழுதினேன். அதாகப்பட்டது, போச்சே என்பதில் நயமாக, 'ச்' ஐ விட்டுவிட்டு, 'போசே' என்று எழுதியிருந்தேன்.

அதை யாரும் படித்தனரோ, இல்லையோ தெரியாது. ஆனாலும், ஆசிரியர், எஸ்.ஏ.பி., இருந்தவரை, பிரம்மச்சாரிக்கு குமுதத்தில், 'ச்' கிடையாது!

ஒரு தவிப்பான கட்டத்தில், ஆபீசின், 'சூப்பர்வைசர் அண்ணே'யிடம் உதவி கேட்க நேரிட்டது.

பர்சில் போதுமான சில்லரை இல்லை; காரியமோ வெகு அவசரமாக செய்ய வேண்டியிருந்தது.

நான், துணை ஆசிரியராக வேலை பார்த்து வந்த பத்திரிகையில் வெளிவந்த ஒரு தொடர் கதையை, வாசகர்களில் ஒரு சாரார் ஆட்சேபித்து, எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, அந்த தொடரை நிறுத்திக் கொள்வதாக, ஓர் அறிவிப்பு செய்ய வேண்டியிருந்தது.

அறிவிப்பை, மாலை பத்திரிகை ஒன்றிலேயே வெளியிட்டு விட, பத்திரிகை நிர்வாகம் முடிவு செய்து, அந்த அறிவிப்பை எழுதித் தந்து, அதை என்னிடம் கொடுத்து அனுப்பினர். மாலை பத்திரிகையென்றால், அதற்கு மாமூலான பத்திரிகையை விட, அவசரம் அதிகம்.

மாலை, 4:00 மணிக்குள் செய்தி கிடைத்தால்தான், மாலை, 6:00 மணிக்கு வெளியிட முடியும்.

பஸ்சில் போனால், நிச்சயம் தாமதமாகும்; ஆட்டோவோ, டாக்சியோ பிடித்தாக வேண்டும். பர்சோ காலி. ஆபீசிலிருந்து அவசரமாக புறப்பட்டதால், கேஷியரை பார்த்து, பணம் ஏதும் வாங்கிக் கொள்ள மறந்து விட்@டன்.

சட்டென்று, சூப்பர்வைசர் அண்ணாச்சியின் ஞாபகம் வந்தது. போகிற வழியில் தான், அண்ணாச்சியின் வீடு.

'என்னய்யா?' என்றார் எதிர்பாராமல் என்னை பார்த்ததும்.

'அவசரமா போய், விளம்பரம் தரணும். 4:00 மணிக்கு மேலேன்னா எடுத்துக்க மாட்டாங்க. மாலை பதிப்பிலேயே வந்தாகணுமாம். விளம்பரம் தர, ஓடிகிட்டே இருக்கேன். சில்லரை இருந்தா, கொஞ்சம் கொடுங்க அண்ணே...' என்றேன் படபடவென்று.

அவர், உடனே பரபரப்புடன் அறைக்குள் போனார். பத்து பைசா, இருபது பைசா நாணயங்களாக, இரண்டு ரூபாய்க்கு கொண்டு வந்து, 'இந்தாய்யா...' என்றவாறு தந்தார்.

நான் திகைத்தேன். சில்லரைன்னா சில்லரையேவா! கடவுளே... ஆட்டோவில் பறந்தடித்து, செய்தி பத்திரிகை ஆபீஸ் போக, சில்லரை போதுமா? 20 - 30 ரூபாயாவது வேண்டியிருக்கும்.

'அண்ணே... சில்லரைன்னா, சில்லரையையே தர்றீங்களே... ஐம்பது ரூபாய் கொடுங்க. ஆட்டோவில் போகணும்...' என்று வெளிப்படையாக சொல்லி, ரூபாயை பெற்றுச் சென்றேன்.

ஆகவே, சில்லரை என்பது, கேட்கிற ஆளின் அந்தஸ்தை பொறுத்தது என்று தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் கூட, நம்மை பாதிக்கும் சில சம்பவங்களை, 'சில்லரை விஷயம்' என்று ஒதுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மயிலை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு, நான் அடிக்கடி செல்வதுண்டு. மதுரைக்குச் செல்லுமுன், சுவாமி கமலாத்மானந்த மகராஜ் மயிலாப்பூர் மடத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

அவரிடம் பேசும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கும். அவர் அடிக்கடி சொல்வார்... 'சில்லரையை எண்ணாதீங்க சுந்தரேசன்; நோட்டை எண்ணுங்க...' அவர் சொன்னதற்கு அர்த்தம்; கதை எழுதணும், 'பத்திரிகை ஆபீஸ் வேலை...' என்று சதா சொல்லி, காலத்தை வீணாகக் கழிப்பது, சில்லரை எண்ணுவது போல.

உயர்ந்த ஆன்மிக விஷயங்களை எண்ணுவது, அதன்படி நடப்பது என்பது, நோட்டு எண்ணுவது போல என்று அர்த்தம் புரிந்து, பெருமூச்சு விட்டேன்.

ஒரு சன்னியாசி, தனக்குரிய வழியில் பேசுகிறார். ஆனால், ஒரு குடும்பஸ்தன், தனக்குரிய தர்மப்படி காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது; என்ன செய்வது!

அவருக்கு என் நோட்டு, சில்லரையாகத் தோன்றுகிறது; எனக்கு, அதே சில்லரை, நோட்டாகத் தெரிகிறது. சில்லரை எது, நோட்டு எது என்பதை, அவரவரே நிர்ணயித்துக் கொள்கிறோம்.

தொடரும்.

பாக்கியம் ராமசாமி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us