PUBLISHED ON : ஜன 22, 2012

அன்று அலுவலகம் வந்திருந்த குப்பண்ணா, நான் கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டே, 'ஆகா... பிரமாத மணம்!' என்றார்.
'என்ன மணம்?'
'காபி மணம்...'
'அதுதான் கேட்கிறேன்; காபி என்ன மணம் என்று?' விழித்தார் குப்பண்ணா.
காபி மணம் என்று தனியாக ஒன்று கிடையாது. 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு மணங்கள் காபியில் கலந்திருக்கின்றன... என்றேன்.
'அதென்ன வெவ்வேறு மணங்கள்?' என்றார் குப்பண்ணா...
'மணம் என்பது அடிப்படையில் ஆறு தான். கிராம்பு மணம், பூ மணம், பழ மணம், மரப் பிசின் மணம், அழுகிய மணம், பொசுங்கல் மணம். மற்ற எல்லாம், இந்த ஆறிலிருந்து, கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்ததாகவோ அல்லது ஒரு மணத்துக்கும், இன்னொரு மணத்துக்கும் இடைப்பட்டதாகவோ இருக்கும்.
'உதாரணமாக, காபியில், பொசுங்கல் மணத்துக்கும், மரப்பிசின் மணத்துக்கும் நடுவேஉள்ள, 50 வகை மணங்கள் கலந்திருக்கின்றன...' என்றேன்.
'எனக்குத் தோன்றுகிறது, சரேலென்று கண்டுபிடித்து விடக்கூடிய ஒரே மணம், பொசுங்கல் தான். டீசல் நாற்றம், என்னமாய் மூக்கைத் துளைத்து விடுகிறது...' என்றார் குப்பண்ணா...
'அது நம் பழக்கத்தைப் பொறுத்து இருக்கிறது. மற்ற மணங்களெல்லாம் மூக்குக்கு அடிக்கடி பழக்கமாகியிருக்கும். பொசுங்கல், ரொம்ப வித்தியாசமான மணமாதலால் உடனே தெரிந்து விடுகிறது...' என்றேன்.
'உண்மை தான்... தோல் கிடங்கிலோ, சர்க்கரை ஆலையிலோ வேலை செய்கிறவர்களுக்கு, அங்கே உள்ள நாற்றம், ஒரு தொல்லையாயிருப்பதில்லை. புதிதாக நாம் போனால், மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது...' என்று ஆமோதித்து, இடத்தை காலி செய்தார் குப்பண்ணா.
***
நண்பர் ஒருவர், திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவரது கல்யாண, 'ரிசப்ஷனில்' அணிந்து கொள்ள சூட், கோட் வாங்க, சென்னை வந்தாராம்...
அவரை அழைத்துக் கொண்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள, 'ரேமண்' ÷ஷா ரூமுக்கு சென்றேன். அந்தக் கடையின் அதிபரான வட மாநில சேட்டு, நன்கு அறிமுகமானவர்.
குடும்பத் தொழிலான, வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு இருப்பவர் அவர். வட்டியில் படு கெட்டி... தவணையைச் செலுத்த, ஒரு நாள் தவறினாலும், அதற்கும் வட்டி போட்டு விடுவார்.
கடன் வாங்குபவர்களையும், 'முதலாளி' என்று தான் அழைப்பார்...
'முதலாளி இது என் தொழில்... உஷாரா இருக்கணும்... வட்டிய ஒழுங்கா கொடுங்க... அப்புறம் என்னோட வாங்க... ஓட்டல்ல போயி, ரெண்டாயிரம் ரூபாய்க்கு விருந்து வைக்கிறேன்...' என்பார்.
அன்று கடையில் இருந்தார்... எங்களை வரவேற்றவரிடம், விஷயத்தைக் கூறினேன். பொறுப்பாளரிடம் நண்பரை ஒப்படைத்து விட்டு, 'நீங்களும் பாருங்களேன்... புதுசா ஜீன்ஸ் வந்திருக்கு...' என அழைத்துச் சென்றார்.
முதலாளி... இந்த ஜீன்ஸ் அறிமுகமாகி, நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே... நாளாக நாளாக மவுசு கூடுகிறதே தவிர, ஏன் குறையவில்லை? எனக் கேட்டேன்.
'வாலிப முறுக்கின் சின்னம், ஜீன்ஸ்ன்னு நெனைக்கிறாங்க... ஜீன்ஸ் அணியும் பெண்களிடம் கூட, ஒரு ஆளுமைத் தன்மை வெளிப்படுகிறதை நீ பார்த்ததில்லையா?' என்றவர், தொடர்ந்தார்:
ஜீன்ஸ் தயாரிக்கப்படும் துணியின் பெயர் டெனிம். பிரான்ஸ் நாட்டில் ஒரு நகரின் பெயர் நைம்ஸ். இங்கு தான் பருத்தி இழை கொண்டு இத்துணி நெய்யப்பட்டு, பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.
நைம்ஸ் என்பதை, பிரெஞ்சு மொழியில், 'டி-நைம்ஸ்' என்பர். இதுவே, சுருங்கி, டெனிம்ன்னு ஆகிப் போச்சு... டெனிம் துணிகளை, வட அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஜெனோவா நகரில் ஓர் அலுவலகம் செயல்பட்டது.
இந்த ஜெனோவா என்ற சொல்லிலிருந்தே, டெனிம் துணிகளுக்கு ஜீன்ஸ் என்ற பெயர் ஏற்பட்டது. ஜீன்øŒக் கண்டுபிடித்தவர், ஒரு ஜெர்மானியர்!
டெனிம் துணிகள் முரட்டுத் தன்மைக்குப் பெயர் பெற்றவை. அமெரிக்காவைக் கண்டு பிடிக்க, கொலம்பஸ் சென்ற போது, அவர் சென்ற கப்பலில், இந்த டெனிம் துணி தான், பாய்களாகப் பயன்படுத்தப்பட்டன.
தங்கத்தைத் தேடி அலைந்த அமெரிக்கர்கள் சிலர், ஆங்காங்கே கூடாரம் அமைத்துத் தங்க, இந்தத் துணியையே பயன்படுத்தினாங்க... அத்துடன், அவர்கள் ஓட்டிச் செல்லும் வண்டிகளை மூடவும் இது பயன்பட்டது.
சுரங்கத் தொழிலாளிகள், கடும் உழைப்பினால், அவர்கள் அணியும் கால்சட்டைகள் சீக்கிரமாகக் கிழிந்து விடுகின்றன என்பதால், முரட்டு டெனிம் துணியில், கால்சட்டைகள் தைத்து அணியத் துவங்கினாங்க.
அவை தரம் வாய்ந்ததாகவும், நீடித்து உழைப்பவையாகவும் இருந்ததால், இந்தப் பேன்ட்டுகளுக்கு, தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, இளைஞர்களும், இதை பேஷன் உடையாக விரும்ப ஆரம்பிச்சாங்க.
இந்த ஜீன்ஸ்கள், 1873ல் வடிவமைக்கப்பட்டு, உரிய முறையில் பதிவு செய்யப்பட்டது. அறிமுகமான சூட்டோடு, ஜீன்ஸ் விற்பனையும் சூடு பிடித்துக் கொண்டது. இருப்பினும், அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த ஜீன்ஸ், ஐரோப்பாவுக்கு வர, 50 ஆண்டுகள் பிடித்தன.
முன்னேறிய நாடுகள் அனைத்திலும், 1970ல் ஜீன்ஸ் முக்கிய ஆடையாகக் கருதப்பட்டது.
இந்தியாவில் ஜீன்ஸ் உடைகளுக்கு, இன்றும் அமோக வரவேற்பு உள்ளது. காலத்தை வென்று நிற்கும் துணி வகை, ஜீன்ஸ் தான். இதன் பிறகு வந்த டெர்லின், ஸ்பன், பாலியஸ்டர் எல்லாம் கூட, மதிப்பிழந்து விட்டனவே என்றார்.
ரெடிமேடாக சூட், கோட் எடுத்த நண்பர் விழித்துக் கொண்டிருந்தார்... பில் எட்டாயிரத்தை தாண்டி இருந்தது, 'பார்ட்டி' கையில் அஞ்சாயிரம் தான் இருந்தது... ஜாமின் கொடுத்து அழைத்து வந்தேன்!
***
