தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும்; தானா வந்ததும்! (7)

நானா போனதும்; தானா வந்ததும்! (7)

நானா போனதும்; தானா வந்ததும்! (7)


PUBLISHED ON : டிச 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்னிடம் யாராவது, 'செடியா, மனிதனா... எது உயர்ந்தது?' என்று கேட்டால், என் ஓட்டு மனுஷனுக்குத்தான். குடியிருப்பில் நான் ஆசையாக வைத்திருந்த வாழை மரத்தை, மேல் வீட்டுக்காரர் வெட்டிப் போட்டு விட்டார் என்னைக் கேட்காமலேயே.

வாழை இலை அவர் வீட்டு பெட்ரூம் ஜன்னலில் உரசிக் கொண்டிருந்ததாகவும், இலை வழியே ஏதாவது பூச்சி வந்து, ஆபத்தாகி விடும் என்று வெட்டி விட்டார்.

எனக்கு இரட்டை வருத்தம்; வெட்டியது ஒரு வருத்தம், கேட்காமல் வெட்டியது இன்னொரு வருத்தம்.

என் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். அவர் வீட்டிலிருந்துதான் வாழைக் கன்று வாங்கி நடப்பட்டது. அதனால், அவருக்கு அதன் மேல் அக்கறை.

மரம் வெட்டப்பட்டது அறிந்து துடித்துப் போய் விட்டார். 'சும்மா விடக் கூடாது; நானும் சப்போர்ட் செய்கிறேன். அந்த ஆளை ஒரு வழி பண்ணி விடுவோம் வா...' என்று கூப்பிட்டார்.

நான் சொன்னேன்: 'வாழை மரத்தை விட, அதை வெட்டிய மனிதர் எனக்கு உயர்ந்தவர். மரத்தை விட, மனிதன் உயர்ந்தவன். மரத்தை நேசிப்பது ஒரு நல்ல குணம் என்றால், மனிதனை நேசிப்பது அதை விட நல்ல குணம்.

'தன் இனமாகிய மனித இனத்தை - சக மனிதனை நேசிக்காமல், வேற்று இனமாகிய மரத்தை நேசிப்பது எப்படி பொருந்தும்?

'அவசரத்துக்கு, நூறு - இருநூறு வேண்டுமென்றால், இந்த வாழை மரத்திடம், 'வாழைமரம் அண்ணே... காஸ் சிலிண்டர் வாசலில் வந்து இறங்குகிறது. இருநூறு ரூபாய் குறைகிறது. கொஞ்சம் கொடுக்க முடியுமா? அடுத்த மாதம் தருகிறேன்...' என்று கேட்டால் அது, 'எஸ் சார்... நோ ப்ராப்ளம்...' என்று பர்சைத் திறந்து எடுத்துத் தருமா?

'ஆனால், மனுஷன் உதவுவான். அதனாலே செடி, கொடிக்காக ஒரு மனிதனிடம் சண்டை போடுவதில் எனக்கு விருப்பமில்லை. நானே நாலு செடிகளைப் பிடுங்கிப் போட்டேன்...' என்றேன்.

செடி, கொடியாலே கொசு வருகிறது என்ற அபிப்பிராயத்திலிருந்த மேல் வீட்டுக்காரருக்கு, நானே நாலு செடியைப் பிடுங்கிப் போட்டதும், என் மேல் வெகு சந்தோஷம். செடியாபிமானத்தை இழந்தாலும், மனிதாபிமானத்தைப் பெற்று விட்டேன்.

***

என் நண்பர் கொஞ்ச நாளாக டல்லடித்தவாறு இருந்தார். அவர் ஒரு ஆபீஸ் நடத்தி வந்தார். அவரிடம் 50-60 பேர் வேலை செய்து வந்தனர். அவரிடம் எல்லாருக்கும் பயம். 'காச் மூச்' சென்று கத்துவார். சில சமயம், 'பளார்' என்று அடித்து விடுவார்; எதற்கும் அசரப்பட்ட ஆள் அல்ல. அப்படிப்பட்டவர் டல்லா இருந்ததால் பார்க்கவே கஷ்டமாயிருந்தது.

நம்ம வீட்டில் ஒரு கோம்பை நாய் வாங்கி கட்டியிருக்கிறோம் என்று வையுங்கள்... அது சதா காலமும், 'வள் வள்' என்று குரைத்தவாறு இருக்கிறது. தெருவில் நடப்பதற்கே எல்லாருக்கும் அச்சம்.

அப்படிப்பட்ட நாய் திடீரென்று குரைக்காமல் வெறுமே படுத்திருந்தால், எஜமானர் கவலை தானே படுவார்.

நான் நண்பனை விசாரித்தேன். 'ஏன் டல்லா இருக்கிறீர்?' என்று. அவர் சொன்னார்: 'உன் பேச்சைக் கேட்டுத்தான்...'

திடுக்கிட்டேன். 'நான் என்ன செய்தேன்?'

விஷயம் இது தான். எனக்குத் தெரிந்த தியான வகுப்பில் நண்பரைச் சேர்த்து விட்டேன். 'ஒரு ஆபீசை நிர்வாகம் செய்கிறாரே. ஏக டென்ஷனாக இருக்கிறாரே... தியான வகுப்புக்குச் சென்றால், சற்று அமைதியாக இருப்பார்...' என்ற நல்ல எண்ணத்தில் சேர்த்தேன்.

அதற்குப் பலன் இருந்தது. நண்பருக்குக் கொஞ்ச நாளாக மனசிலே அமைதி. ஆனால், வேறொரு கவலை பிடித்து விட்டது. அவர் சப்தம் போடாமல், அமைதியாக இருந்ததால் சிப்பந்திகளுக்குப் பயம் விட்டுப் போய் விட்டது.

இஷ்டத்துக்குத் தாமதமாக வருவதும், வேலையைத் தள்ளிப் போடுவதும், ஆபீசின் கட்டுக்கோப்பே போய் விட்டது போல் நண்பருக்குத் தோன்றியது. சிப்பந்திகள் ஆர்டர் பிடித்து வருவதும் குறைந்து விட்டது. ஓடி, ஆடி வேலை செய்தால் தானே ஆர்டர் பிடிக்க முடியும்.

'நாம் அமைதி தேடப் போய், ஆபீஸ் நிர்வாகமே சரிந்து விட்டதே...' என்பதே அவர் கவலை. அவர் சொன்னார்... 'கோபப்பட வேண்டும் என்று நினைத்தால் கூட, இப்பவெல்லாம் கோபம் வரமாட்டேன் என்கிறது; சிரிப்புத்தான் வருகிறது. ஆனால், சிரித்த முகத்துடன் இருந்தால், எவன் வேலை செய்கிறான். அவனும் என்னோடு சேர்ந்து சிரிக்கிறான். வேலை செஞ்சிட்டு சிரிச்சா பரவாயில்லை. சும்மா ஜாலிக்குச் சிரிக்கிறான். இப்ப என்ன பண்ணட்டும்?' என்றார்.

'ராமகிருஷ்ண பரமஹம்சரை நினைச்சுக்கோ...' என்றேன்.

அவர் ஒரு பாம்புக்கு புத்திமதி சொன்னார்... 'யாரையும் கடிக்காதே...' என்று. அது கடிக்காத பாம்பாகி விட்டதால், எல்லாரும் அடித்து, சாகிற நிலைக்கு வந்து விட்டது. 'உங்களால நேர்ந்த கதியைப் பார்த்தீங்களா?' என்று அழுதது பரமஹம்சரிடம்.

அதற்கு அவர், 'கடிக்க வேண்டாம் என்று தான் உன்னிடம் சொன்னேனே தவிர, சீற வேண்டாம் என்று சொல்ல வில்லையே...' என்றார்.

அதனால் காரியம் ஆக வேண்டுமானால், அவசியமானால் கொஞ்சம் உதார் காட்டத்தான் வேண்டும்.

வண்டிக்காரன் மாட்டை ஓட்டுவதற்கு ஒரு சின்னக் குச்சியாவது வைத்திருப்பான். வெறுமே கையால் முதுகில் தட்டினால் சண்டி மாடு எழுந்து வேலை செய்யாது. மாட்டை இம்சிக்காமலும், அதே சமயம் வாங்குகிற விதத்தில் அதனிடம் உரிய வேலை வாங்கிக் கொள்வதும் தான் ஒரு நல்ல கெட்டிக்கார வண்டிக்காரனின் செயலாக இருக்கும்.

***

ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் கொஞ்சம் புத்தகப் பிரியர். அதுவும் பழைய புத்தகப் பிரியர். பழைய காலத்து துப்பறியும் நாவல்களெல்லாம் வைத்திருப்பார். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்ற துப்பறியும் ஆசிரியர்கள் எழுதிய நாவல்களெல்லாம் இருக்கும், என்னை வரவேற்று உட்கார வைத்துவிட்டு பிரிட்ஜை திறந்தார்.

'எனக்கு தொண்டக் கட்டு, வேண்டாம்...' என்று அவசரமாக மறுத்தேன்.

அவர் ஒரு ஐஸ் டீ தருவார். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவ்வாறு சொன்னேன். 'உமக்கு புத்தகம் வேண்டுமா, வேண்டாமா?'

'அது வாங்கிப் போகத்தானே வந்தேன்...' என்றேன்.

'அப்படியானால் சும்மாயிரும்...' என்று சொல்லி, பிரிட்ஜைத் திறந்தார். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. பிரிட்ஜுக்குள்ளே கூல் ட்ரிங்க்கோ, வேறு உணவுப் பொருளோ ஏதும் இல்லை.

உள்ளே இருந்த அத்தனையும் புத்தகங்கள். தன் பழைய பிரிட்ஜை புத்தக அலமாரியாக மாற்றியிருந்தார்.

'இது என்ன வேடிக்கை?' என்றேன்.

அவர் சொன்னார்... 'அசல் பிரிட்ஜ் உள்ளே இருக்கிறது. பழைய பிரிட்ஜை இப்படி மாற்றி விட்டேன்...'

உறவினர் சாமர்த்தியமே சாமர்த்தியம். அவரிடம் ஒரு கொடூரமான நல்ல பழக்கம். அது கெட்ட பழக்கமாகவும் தோன்றும். எதையுமே அவர் வீணடிக்க மாட்டார். அவர் வீட்டு பிரிட்ஜ் கெட்டு போய் விட்டது. புதியது வாங்கத் தீர்மானித்தார். பழைய பிரிட்ஜை வெறும், ஐந்நூறு ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறினர்.

உறவினர் கெட்டிக் காரத்தனமாக, அந்த பிரிட்ஜை புத்தக அலமாரியாக செய்து விட்டார். கரன்ட் கனெக்ஷனை நீக்கி விட்டார். அவசியமான சில மாறுதல்கள் செய்து, புத்தக அலமாரியாக்கி விட்டார்.

பெருமையாக சொன்னார் அவர்... 'புத்தக அலமாரி பண்ண, மூவாயிரம் ரூபாய் ஆகும். நான், இருநூறு ரூபாய் செலவில் பிரிட்ஜையே புத்தக அலமாரியாக மாற்றி விட்டேன்...'

அவர் வீட்டிலிருந்து எந்தப் பழைய பொருளும், எந்த ஜென்மத்துக்கும் வெளியே போகாது போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

மேலும், ஒரு சாட்சியாகத் கதவு ஓரமாகச் சாத்தி வைக்கப்பட்டிருந்த தரை துடைக்கும் மாப் ஸ்டிக் காட்சி அளித்தது. நீள மடிக்கோலை (மூங்கில் குச்சியை) பாதியாக வெட்டி, அதன் நுனியில் பழைய பனியன்கள், அவர் உபயோகப்படுத்திக் கிழிந்த ஜட்டிகள் ஆகியவற்றைக் கொத்தாகக் கட்டி வைத்திருந்தார்.

வீடு துடைக்கும் மாப் ஸ்டிக், நூறு ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் அவர் செலவில்லாமலேயே ஒட்டடைக் கொம்பு, கிழிசல் ஜட்டி, கிழிசல் பனியன் ஆகியவற்றைக் கொண்டு மாப் ஸ்டிக் தயாரித்து விட்டார்.

அவரது சிக்கனத்தை ஏனோ என்னால் பாராட்ட முடியவில்லை. அவரவர் அழுக்கு, அவரவர் ஜட்டியோடு தொலைய வேண்டும். வீடு பூரா அந்த அழுக்கை பரப்பலாகாது.

***

பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us