தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திருமணம் நடக்க வெள்ளை புடவை!

திருமணம் நடக்க வெள்ளை புடவை!

திருமணம் நடக்க வெள்ளை புடவை!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில், கணவரை இழந்த பெண்கள், வெள்ளை ஆடை அணிவது, வழக்கம். ஆனால், கன்னிப் பெண், திருமணத் தடை நீங்கி, சுமங்கலியாவதற்கு அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபடும் வழக்கம், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவிலில் உள்ளது.

ஒருமுறை வாயு, வருணன் மற்றும் அக்னி ஆகிய மூவருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டதில், தானே பெரியவர் என்று கூறி, அதை நிரூபிக்க, யார் கண்ணிற்கும் தென்படாமல் மறைந்து கொண்டார், அக்னி பகவான். இதனால், உலகில் யாகம், நைவேத்யம் போன்றவை நடைபெறாமல் போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட, லிங்க பூஜை செய்தனர்.

சிவன் உத்தரவுப்படி வெளிப்பட்டார், அக்னி பகவான். அதனால், அக்னியை பெருமைப்படுத்தும் விதத்தில், அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை மற்றும் ஏழு ஜூவாலையுடன் கூடிய ஓர் உருவத்தை படைத்தார், சிவபெருமான். இதனால், சிவனுக்கு, 'அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது.

கிருஷ்ணர் - சத்யபாமாவின் புதல்வன் நரகாசுரனின் நண்பன் பாணாசுரன். இவன், ஆயிரம் கைகளை கொண்டவன்; இவனது தாயார், ஒரு வேண்டுதலுக்காக, தினமும் ஒரு சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து வந்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல், இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் அவளுக்கு ஏற்பட்டது.

இதனால், அவளது வேண்டுதலை நிறைவேற்றவில்லை, சிவபெருமான். மேலும், அவளது தவறுக்கு பிராயச்சித்தமாக, காசியில், மண்ணால் லிங்கம் அமைத்து, நிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார்.

'ஐயனே... என் தாய் வயதானவள்; காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்...' என, வேண்டினான், பாணாசுரன். அவ்வாறே அருளினார், சிவபெருமான்.

அப்போது, அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது; அந்த நிலையிலேயே லிங்கத்தை வணங்கினர். கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு, 'கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

நாவுக்கரசர் முக்தி பெற்ற தலம் இது; இவ்வூரில் அவதரித்தவர், முருக நாயனார்; அவர், இவ்வூர் சிவனை வர்த்தமானீஸ்வரர் என்று அழைத்தார். 'வர்த்தம்' என்றால், நிகழ் காலம். நிகழ் காலத்தில் ஏற்படும் துன்பத்தை நீக்குபவர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

பிரகாரத்தில் உள்ள பூதேஸ்வரரை வணங்கினால், முன்னோர் சாபம் நீங்கும். இங்குள்ள பவுட்சேஸ்வரரை வழிபட்டால், எதிர்காலம் நன்றாக அமையும். 'பவுட்சம்' என்றால், 'இனி வருவது' என்று பொருள். முக்காலத்துக்கும் நன்மை தரும் மூன்று சிவலிங்கங்களை இங்கு மட்டுமே தரிசிக்கலாம்.

கையில் காகத்துடன் காட்சி தருகிறார், சனிபகவான். நள மகாராஜாவுக்கு ஏழரை சனி பிடித்து, அதை நிவர்த்தி செய்ய, திருநள்ளாறு செல்லும் வழியில், இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டார். அவரது பாதம் கோவில் வாசலில் பட்டவுடனேயே தோஷம் நிவர்த்தியடைந்தது. திருநள்ளாறு செல்லும் முன், இங்கு சென்றால், சனி தோஷம் நிவர்த்தியாகும்.

நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் இருப்பது மற்றொரு விசேஷம். புது வீடு கட்டுவோர், மூன்று செங்கற்களை கொண்டு வந்து, பூஜித்து எடுத்துச் சென்று, ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் பதித்து வீடு கட்டுகின்றனர். எனவே, இத்தல இறைவனை, 'வாஸ்து நாதர்' என்கின்றனர்.

அம்பாளுக்கு கருந்தார்குழலி மற்றும் சூலிகாம்பாள் என்று பெயர். மாலை பூஜையில், திருமணம் ஆகாத பெண்கள், திருமண பாக்கியம் வேண்டி, அம்பாளுக்கு வெள்ளை புடவை அணிவிப்பர். தடை நீங்கி, மணமாக இப்படி செய்வதாக ஐதீகம்.

திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், 22 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருப்புகலுார்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us