
எல்லாரும் எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒருவருக்கு பெயரும், புகழும் பொருளும் கிடைக்கிறது; மற்றவருக்கு கிடைப்பதில்லை. காரணம்...
அக்பரின் அரசவையில் இருந்தவர்களில் பெரும்புகழ் பெற்றவர், தான்சேன் எனும் பாடகர். அவர் பாடலைக் கேட்டு அனைவருமே மயங்குவர்.
ஒருநாள்-
'உன் பாட்டு... அடாடா அடாடா... சொல்லி முடியாது. ஆமாம், உன்னை விட நன்றாகப் பாடக்கூடியவர் இருக்கிறாரா, தான்சேன்?' என்றார், அக்பர்.
'என் குருநாதர், ஹரிதாஸ் ஸ்வாமி என்பவர் இருக்கிறார். என் பாட்டு, அவர் கால் துாசுக்கு ஈடாகாது...' என்றார்.
'அப்படியானால் அவரை அழைத்து, நம் அரசவையில் பாட ஏற்பாடு செய்யலாமே...' என்றார், அக்பர்.
'மன்னியுங்கள் மன்னா... அவர் பாடல், கண்ணனுக்காக... பேரும், புகழும் தேவையற்றவர். இங்கெல்லாம் வரமாட்டார்...' என்றார், தான்சேன்.
'பரவாயில்லை. அவர் இருக்குமிடம் தேடிப்போய் கேட்பதில் ஒன்றும் பிரச்னையில்லை...' என்ற அக்பர், மாறுவேடத்தோடு புறப்பட்டார்.
மன்னரை அழைத்து, குருநாதரின் இருப்பிடம் சென்றார், தான்சேன். ஆசிரமத்தின் வெளியே, அக்பர் மறைவாக இருக்க, தம்புராவுடன் உள்ளே நுழைந்தார், தான்சேன்.
'வாப்பா... வா...' என்று, மனதார வரவேற்ற குருநாதரை வணங்கி, 'குருநாதா... ஒரு பாட்டின் ராகம் சரியாக பிடிபடவில்லை. அறிந்து போகலாம் என்று வந்தேன்...' என்றார், தான்சேன்.
'சரி... நீ பாடு அதை. எங்கு சரியில்லை என்பதைப் பார்க்கலாம்...' என்றார், குருநாதர்.
தம்புராவை மீட்டி பாடத் துவங்கிய தான்சேன், ஓரிடத்தில், வேண்டுமென்றே தவறாகப் பாடினார்.
'இங்கு தான், இங்கு தான்... கொடு தம்புராவை, நான் பாடுகிறேன். நன்றாகக் கேட்டு, பதிய வைத்துக்கொள்...' என்று, தம்புராவை வாங்கி, கண்ணன் முன் சமர்ப்பித்து, தியானித்து, சுருதி கூட்டிப் பாடத் துவங்கினார்.
ஒரு சில விநாடிகளிலேயே, ஹரிதாஸ் ஸ்வாமியின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, மூர்ச்சித்து விழுந்தார், அக்பர். அக்பரின் முகத்தில் தான்சேன், தண்ணீர் தெளித்த பிறகே, சுயநினைவுக்கு வந்தார்.
பாட்டை நிறுத்தினார், குருநாதர்.
'தான்சேன்... உன் குருநாதரைப் போல, இவ்வளவு அழகாக உன்னால் பாட முடியவில்லையே; ஏன்?' எனக் கேட்டார்.
'மன்னா... நான் பாடுவது, பேருக்கும், புகழுக்கும். என் குருநாதர் பாடுவது கண்ணனுக்காக; தெய்வத்திற்காக மட்டுமே. அதனால் தான், அவர் பாடல் உயர்வாக இருக்கிறது...' என்றார்.
வேலை செய்து தான் வாழ வேண்டும். அதைத் தெய்வ சிந்தனையோடு, தெய்வத்திற்காக என்ற எண்ணத்தோடு செய்தால், மனம் தானே துாய்மையாகி விடும்...' என்பார், காஞ்சி ஸ்ரீமஹா சுவாமிகள்.
செயல்படுத்த முயல்வோம்; கண்டிப்பாக, தீண்டாது துயரங்கள்!
ஆன்மிக தகவல்கள்!
செவ்வாய்தோறும் முருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி, ஏழை குழந்தைகள் ஆறு பேருக்கு அன்னமிட்டு வர, சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
பி. என். பரசுராமன்