தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உத்தமமான குரு - சீடன் யார்?

உத்தமமான குரு - சீடன் யார்?

உத்தமமான குரு - சீடன் யார்?


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல அரிய சித்திகளை பெற்று, அசுர குலத்தின் குருவாக இருந்தவர், சுக்ராச்சாரியார். அவரிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் கற்றுக் கொள்வதற்காக, வந்திருந்தான், தேவர் குலத்தைச் சேர்ந்த பிருகஸ்பதியின் மகனான, கசன்.

கசனின் நேர்மை, பணிவு மற்றும் ஆர்வத்தை அறிந்த அசுர குருவும், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மனத் துாய்மையுடன், குருவுக்கு பணிவிடை செய்து வந்தான், கசன். இந்நிலையில், அசுர குருவின் மகளான தேவயானி, கசனிடம் தன் மனதை பறிகொடுத்தாள். ஆனால், கசன், கடமையே கண்ணாக இருந்தான்.

மற்ற அசுரர்கள், கசன் மீது பொறாமை கொண்டனர். தம் குருவின் மிகப்பெரிய சக்தியான, இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளவே, இவன் வந்துள்ளான். இவனை உயிருடன் விடக் கூடாது என்று நினைத்து, கசனை கொன்று விடுகின்றனர்.

இதை அறிந்த, தேவயானி, தன் தந்தையிடம், கசனின் உயிரை மீட்டு தரும்படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்று, கசனின் உயிரை மீட்டெடுத்தார், அசுர குரு.

சிறிது காலம் சென்றது. கசனை விடுவதாக இல்லை, அசுரர்கள். மீண்டும் கசனை கொன்று, உடலை எரித்து, சாம்பலாக்கினர். அந்த சாம்பலை சோம பானத்தில் கலந்து, தங்கள் குருவுக்கும் கொடுத்து விட்டனர். அவர்களின் வஞ்சனை அறியாத குருவும், அதை வாங்கி குடித்து விட்டார்.

கசன் பற்றி எந்த தகவலும் அறியாத தேவயானி, தன் தந்தையிடம் முறையிட்டாள்.

நடந்தது அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார், சுக்ராச்சாரியார். அவனை மீண்டும் பிழைக்க வைக்க முயன்றால், சாம்பலான அவன் உயிர் பெற்று, வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியேறும்போது, தான் இறந்து போவது உறுதி என்றும் தெரிந்தது. நிலைமையை தன் மகளிடம் சொல்லி, இருவரில் யாராவது ஒருவர் தான் உயிருடன் இருக்க முடியும், என்றார்.

தேவயானியோ, தனக்கு இருவருமே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

சாம்பலாக இருக்கும் கசனிடம், பேசலானார், அசுர குரு.

'உத்தம சீடனான உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கும் நேரம் வந்து விட்டது. நான் சொல்லும் மந்திரத்தை கவனமாக கேட்டு, பதிய வைத்துக் கொள்.

'அதன்பின், நான் அதே மந்திரத்தை சொல்லி, உன்னை உயிர்பித்து விடுகிறேன். நீ வெளியில் வரும்போது, நான் இறந்து விடுவேன். உடனே, நீ அந்த மந்திரத்தை உச்சரித்து, என்னை பிழைக்க வைக்க வேண்டும்...' என்று கூறினார்.

கசனும், அவ்வாறே சொல்ல, இருவரும் உயிருடன் மீண்டனர்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னைப் பற்றியும், தன் நோக்கம் பற்றியும் குருவிடம் உண்மையைக் கூறி, அதனால், அரிய மந்திரத்தை கற்றான், கசன். அடுத்து, தகுதியானவன் யாராக இருந்தாலும், அவனுக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்து, உண்மையான குருவுக்கு அடையாளமாக இருந்தார், சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் அசுர குலத்தைச் சேர்ந்த மற்ற சீடர்கள், பொறாமை குணம் மற்றும் முறையற்ற வழியை பின்பற்றி, சீடர்களுக்கான அருகதையை இழந்தனர்.

உத்தம குரு, சீடன் எப்படி இருந்தால் நன்மை கிடைக்கும் என்று இப்போது புரிந்திருக்குமே!

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us