PUBLISHED ON : அக் 21, 2012

கற்பனை உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்டை மையமாக வைத்து, முதல் முதலாக வெளியான படம், 'டாக்டர் நோ' இந்த படம், 1962ல், திரைக்கு வந்தது. இதில், ஜேம்ஸ் பாண்டாக சீன் கானரி நடித்தார். அவருக்கு ஜோடியாக, உருசுல்லா ஆண்ட்ரஸ் என்ற நடிகை நடித்தார்.
இதற்கு பின், 22 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி விட்டன. முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளிவந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, ஹாலிவுட்டில் இதை, பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். பாண்ட் படங்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கார், உடைகள் போன்றவற்றை ஏலம் விட்டு, அறக்கட்டளைகளுக்கு, அந்த பணத்தை நன்கொடையாக வழங்குகின்றனர்.
மற்றொரு பக்கம், இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையரில், மிக பொருத்த மான ஜோடி யார் என்பது குறித்து, ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள், இதில் பங்கேற்று, ஓட்டளித்தனர். இதில், 'டாக்டர் நோ' படத்தில் நடித்த உருசுல்லா ஆண்ட்ரசுக்கு தான், முதலிடம் கிடைத்தது. இரண்டாவது இடம், 'டை அனதர் டே' படத்தில், ஜேம்ஸ் பாண்டை காதலித்த, ஹாலி பெர்ரிக்கு கிடைத்தது.
— ஜோல்னா பையன்.
