sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?

/

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?


PUBLISHED ON : மார் 13, 2016

Google News

PUBLISHED ON : மார் 13, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சிலர், பல் விலக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் பண்ணையார்கள், வேப்பங்குச்சியை எடுத்து, வயல் வரப்புகளில் வலம் வந்தபடி, வீடு திரும்பும் வரை பல் தேய்க்கின்றனர்; பல் எனாமலுக்கு, இதை விட கேடு வேறு தேவையில்லை.

பல்லை மேலிருந்து கீழாக, முரணையில் ஆரம்பித்து, பல் முடிவு வரை மேல் வரிசையையும், கீழ் வரிசையை கீழ்முரணையில் ஆரம்பித்து மேல் நோக்கியும், உணவுத் துகள்களை வெளியே தள்ளும் முறையே, சரியான பல் விளக்கும் முறை!

நாமோ (நான் இல்லீங்க!) இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு தேய்க்கிறோம். இதனால், உணவுத் துகள்கள் கடைசி வரை பற்களிலேயே தங்கி, காரையாக மாறி, பாக்டீரியாக்களின் முகாம்களாக ஆகிவிடுகின்றன.

நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை. தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்!

ஆனால், இப்படி இல்லவே இல்லை.

எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர். அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!

மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை. இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம். கிழக்கு பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

மறுபுறம் பார்க்கத் தவறவிட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா... இப்படி தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

கடற்கரைப் பகுதியை பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறில்லையோ, அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும், 'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது...' என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், 'சொல்லுங்க... எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இது, புத்திசாலித்தனமும் கூட!

நான் தமிழ் படித்து வளர்ந்தவன்; என் வழக்கறிஞர் நண்பர், திடீரென, 'புராக்காஸ்டினேஷன்' என்று ஒரு சொல்லைக் கூறி, உரையாட ஆரம்பித்து விட்டார். அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு சொன்னீங்க; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டேன்.

'அட இது தெரியாதா...' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார்.

'தெரியாது நண்பரே... நான் படிச்சதெல்லாம் தமிழ் இலக்கியம். அதுல எதுவும் தெரியலன்னா தான் தப்பு...' என்றேன் புன்னகை மாறாமல்!

'அதுவும் சரி தான்...' என்று இறங்கி வந்தவர், 'அப்படீன்னா, தள்ளிப்போடுவது, தாமதப்படுத்துவது...' என்றார்.

'நன்றி நண்பரே...' என்றேன்.

மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை; எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. அறிவு தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை.

ஹோமியோபதி மாத்திரைகள், அலோபதி மாத்திரைகளைப் போல அல்ல. எல்லா வியாதிகளுக்கும் தரப்படும் மாத்திரைகள், பார்க்க ஜவ்வரிசி போலவே இருக்கும். ஆனால், அதற்குள் இறக்கப்பட்டிருக்கும் சாராம்சம் வேறு வேறு.

நாமும் வெறும் ஜவ்வரிசியாக இல்லாமல், சரக்கு இறக்கி கொண்ட, சாரமுள்ள மாத்திரைகளாக மாறுவோம். இதற்கு, வெட்கம் மற்றும் வீண் கவுரவம் ஆகியவை, தடைகளாக இருக்கவே கூடாது!

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us