PUBLISHED ON : ஜன 30, 2022

சிலர், தினமும் காகத்துக்கு உணவிடுவர். சிலர், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் நாட்களில் உணவு வைப்பர். ஆனால், காகத்துக்கு உணவிட எல்லாரும் தேர்ந்தெடுக்கும் நாள், அமாவாசை. அமாவாசையன்று, தர்ப்பணம் செய்ய தீர்த்தக்கரைகளுக்கு செல்வர்.
தர்ப்பணம், சிரார்த்தம் இந்த இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறிது எள்ளை எடுத்து நீர் நிலைகளில் விடுவதை, தர்ப்பணம் என்பர். தர்ப்பணம் என்பதற்கு, திருப்திப்படுத்துதல் எனவும், பொருள் கொள்ளலாம்.
நம் முன்னோருக்கு சிறிது எள்ளும், தண்ணீரும் உணவாகக் கொடுத்தாலே போதும். அதையும், நீர்நிலையில் கொடுத்தால், அதையே தங்கள் உணவாக ஏற்று திருப்தியடைவர்.
சிரார்த்தம் என்றால், சிரத்தையுடன் (கவனத்துடன்) செய்வது. ஒருவர் இறந்த நாளன்று என்ன திதி இருக்கிறதோ, அது அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த பிறையில் வருகிறதோ (வளர்பிறை, தேய்பிறை) அந்த நாளில் செய்வது சிரார்த்தம்.
சிரார்த்தம் செய்யும்போது அரிசி மாவில் செய்த உருண்டை வடிவ பிண்டத்தை தண்ணீரில் கரைப்பர். நம் முன்னோர் இறந்த திதியை கவனமாக நினைவில் கொண்டு, சிரார்த்தம் செய்வதன் மூலம், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும்.
அமாவாசைகளில் தை அமாவாசை, முக்கிய இடம் பிடிக்கிறது. தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த ராசியின் அதிபதி, சனி. சூரியன், சனியின் தந்தை. தந்தையை பிதா அல்லது பித்ரு என்பர். தந்தை, மகனின் வீட்டில் இருக்கும்போது, அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது மகனின் கடமை.
இதனால் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள், அமாவாசையன்று அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம், சிரார்த்தம் மூலம் திருப்திபடுத்த வேண்டும்.
இதுபோல் இந்நாளில் காகத்துக்கு உணவிடுவர். இதற்கான காரணத்தை உத்தர ராமாயணம் சொல்கிறது...
மருத்தன் என்ற மன்னன், மாகேஸ்வர பூஜை எனப்படும் சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்தான். இதில், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எமன் பங்கேற்றனர். அந்த நேரத்தில் இலங்கை மன்னன் ராவணன் அங்கே வந்தான். அவனால் தங்களுக்கு துன்பம் வரும் என நினைத்த தேவர்கள், பறவைகள் வடிவில் மாறி பறந்தனர். காகமாக மாறினான், எமன்.
இந்த நன்றிக்காக, அவன் காகங்கள் மீது அன்பு செலுத்தினான். மனித உயிர்களை பறித்த பிறகு, அவர்களது ஆத்ம சாந்திக்காக அவர்களது உறவினர்கள் இடும் சிரார்த்த உணவு, இனி காகங்களுக்கே கிடைக்கும் என்ற விதியை உருவாக்கினான்.
இவ்வாறு உணவிடுபவர்களுக்கு, அவர்களது முன்னோர் ஆசி வழங்க உத்தரவிட்டான். அன்று முதல் காகங்களுக்கு உணவிடும் வழக்கம் வந்தது.
காகங்களுக்கு தினமும் உணவிடுவதன் மூலம் நம் பாவங்களும், முன்னோர் செய்த பாவங்களும் நீங்கும். பிறப்பற்ற நிலைக்கு இந்த தர்மம் வித்திடும்.
தி. செல்லப்பா
