தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீண்டும் மஞ்சள் பை கலாசாரம்!

குழந்தையின் முதல் பிறந்தநாளை, பெரிய மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார், உறவினர். விருந்து முடிந்த பின், அனைத்து பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் துணி பை ஒன்று கொடுத்தனர்.

குழந்தைகள் தனக்கு கொடுத்த மஞ்சள் பையை சந்தோஷமாக பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மாஸ்க், சானிடைசர் மற்றும் பனை ஓலை பெட்டியில் நிறைய சாக்லெட் இருந்தது. மேலும், அந்த மஞ்சள் பையின் மேல் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பெயரும், அதன் கீழே ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் அச்சிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பையிலிருந்ததையும் ஆர்வமாக படித்தனர், குழந்தைகள். ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடித்துள்ளார், விழா நடத்தியவர். குழந்தையின் முதல் பிறந்தநாள் மிக வித்தியாசமாக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சமூக நலன் கருதி, நாமும் இதை கடைப்பிடிக்கலாமே!

- பி. இந்துராணி, சென்னை.

நிலக்கடலை தோலை வீசாதீர்கள்!

சமீபத்தில், சென்னைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது, வழியில் ஓரிடத்தில் பஸ் நின்றது. நிலக்கடலை வியாபாரியிடம், பயணியர் நிறைய பேர், கடலை வாங்கினர். என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடலை சாப்பிட்ட பின், அதன் தோலை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தினர்.

அதை கண்டு, 'பஸ்சில் குப்பை போடாமல், தனியாக எடுத்து வைக்கின்றனர். இது நல்ல செயல்...' என, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அதில் ஒரு பெண்மணி, போனில் யாரிடமோ, 'நீ சொன்ன ஐடியா சூப்பரா வேலை செய்கிறது. வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, மண் கட்டியாகாமல் இருக்கிறது. ரோஜா செடி, முன்பை விட செழிப்பாக இருப்பதோடு, நிறைய பூக்கிறது.

'இந்த கடலை தோலால், இப்போது மண்ணை கிளறி விட அவசியமில்லை. உன் ஐடியாவுக்கு மிக்க நன்றி. இந்த கடலை தோலையும் மண்ணில், 'மிக்ஸ்' செய்து வைத்து விட்டால், செடி நன்கு வளரும்...' என்றார். பிறகுதான், கடலை தோலை ஏன் பத்திரப்படுத்தி வைத்தனர் என்ற விஷயம் புரிந்தது. நானும் அந்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். செடி சூப்பராக வளர்கிறது. அப்ப, நீங்களும்!

அ. சாரதா, தருமபுரி.

அப்பாவின் மேடைப் பேச்சு விபரீதம்!

காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.

'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.

'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.

- பெ.பாண்டியன், காரைக்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us