தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடித் தேர்... (9)

ஊர் கூடித் தேர்... (9)

ஊர் கூடித் தேர்... (9)


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவைத்திற்கு, 'பிரன்ட்லைனர்ஸ்' புத்தகத்தின் ஏழாம் பகுதி வெளியீட்டிற்காக வந்திருந்தார், மேனகா. அப்போது அவருடன் நான்கு நாட்கள் கூடவே இருந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. மேனகாவை, துார்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜனுடன், டில்லியில் அவரது வீட்டில் சந்தித்திருந்தேன்.மேனகா, ரொம்ப கச்சிதம். எதையும் தள்ளிப் போடுவதில்லை. 'இ- - மெயில்' அனுப்பினால், 10வது நிமிடம் பதில் வந்துவிடும். நிகழ்ச்சிக்கு வர அவர் சம்மதித்து விட்டாலும், தேதி ஒதுக்கித் தருவதில் சிரமப்பட்டார்.முதலில், ஏப்., 2002ல் எங்கள் நிகழ்ச்சியை தீர்மானித்திருந்தோம். ஆனால், அவரிடமிருந்து பச்சைக்கொடி வராமல் போகவே, மாற்று ஏற்பாடாக, நடிகர்கள் கமல் மற்றும் விஜயகாந்தையும் லேனா தமிழ்வாணன் மூலம் அணுகி இருந்தேன்.எதிர்பாராமல் ஒரே நேரத்தில், கமலும், விஜயகாந்தும் அந்த தேதிக்கு சம்மதம் தெரிவிக்க,-- திக்கு முக்காடிப் போனோம். இருவருக்குமே ரசிகர்கள் வட்டம் பெரிது; சேர்ந்தும் வர மாட்டார்கள்; வந்தாலும் சமாளிக்க முடியாது. என்ன செய்வது!இதில் யாரை தவிர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சோதனையின் உச்சமாக... மேனகாவிடமிருந்தும் அந்த தேதிக்கு சம்மத தகவல் வந்தது. மூவரையும் வருந்தி அழைத்து, இப்போது வேண்டாம் என்று எப்படி சொல்வது? அப்புறம் திரும்ப அவர்களிடம் போக முடியாது. விழாவை தள்ளி வைத்து விட யோசித்தோம். அப்போது, சதாம் உசேன் கை கொடுக்க முன் வந்தார். எப்படித் தெரியுமா?மறுபடியும் குவைத்தின் மேல் தாக்குதலுக்கு தயாரானார், சதாம். விழாவை தள்ளி வைக்க அருமையான சாக்கு கிடைத்ததால், எங்கள் தலை தப்பியது.பிறகு, செப்., 2003ல் தேதி கொடுத்து, விழாவை சிறப்பித்தார், மேனகா. அவரது முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சி, துள்ளல், சின்ன பெண் போல துடுக்குத்தனம்; பளிச் பளிச் பதில்கள், எதற்கும் அஞ்சா விமர்சனங்கள்.மேனகாவை, 'பர்ச்சேஸ்' செய்ய அழைத்துப் போனால், நம்மை உட்கார வைத்து, அவர் மட்டும் கடை கடையாய் நுழைந்து விடுவார். 'பரவாயில்லை மேடம், நாங்க வேடிக்கை பார்க்கிறோம்...' என்று, இடைவெளி விட்டு பின் தொடர்வோம். ஆனால், இரண்டு மணிநேரம் கழித்து, வெறும் கையோடு தான் வெளியே வருவார்.'ஒரு ரகசியம் சொல்லட்டுமா... நான் ஒரு, 'புவர் பர்ச்சேசர்!' ஆபரணம், பளபளா ஆடை, பர்ப்யூம், மேக் - அப் சமாசாரங்கள் எதுவுமே உபயோகிப்பதில்லை; வேண்டாத பொருட்களை வாங்குவதுமில்லை. என்ன தான் இருக்குன்னு சும்மா பார்க்கத்தான் வந்தேன்...' என்பார்.அவர் கடைக்கு போகும்போது தேவைப்படும் என்று, குவைத் தினார்களை நீட்ட, 'வேணாம். எங்கிட்ட டாலர்கள் இருக்கு...' என்று, வாங்க மறுத்தார். 'பரவாயில்லை, உங்கள், 'பர்சேஸ்'காக, நாங்க கொஞ்சம் பட்ஜெட் வச்சிருக்கோம்...' என்றோம்.'எதுக்கு... என் தேவைக்கு வாங்கிக் கொள்ளும் வசதி, என்னிடம் உள்ளது. எந்த கை நீட்டலும் யாரிடமும் கூடாது என்பது, என் பாலிசி... அப்படி தரணும்னா, 'அனிமல் ஹாஸ்பிடலு'க்கு கொடுங்க...' என்பார்.'மேடம்... நீங்க அரசியலுக்கே லாயக்கில்லை...' என்று தயக்கத்துடன் முனகினோம்.'ரொம்ப நன்றி...' என்று புன்னகைத்தார்.

மேனகாவின் சிந்தை, செயல் எப்போதும் சுற்றுப்புறச் சூழல்-, விலங்குகள் நலம் என்றே இருக்கிறது. அதற்காக, இந்தியா முழுக்க விலங்குகள் நலக் காப்பகங்கள் அமைத்து வருகிறார். அப்போது, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு இடம் பேசி, நிதி இல்லாததால் அதை வாங்க முடியாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.அதை நாங்கள் தருவதாக சொன்னதும், அவருக்கு மகிழ்ச்சி. புத்தகங்கள் பல எழுதியுள்ளார், மேனகா. அதில், குழந்தைகளுக்கு இந்து--, பார்சி மற்றும் -முஸ்லிம் பெயர்கள் சூட்டுவதற்காக தயாரித்த புத்தகம், மிக பிரபலம்.'உலகிலுள்ள பெயர்கள் எல்லாம் இதில் அடக்கம்...' என்று பெருமைப்பட்டார். அதுமட்டுமில்லாமல், 'நீங்கள் எந்தப் பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், அதற்கு அர்த்தம் சொல்கிறேன்...' என்றார்.பல விஷயங்களில் மேனகா கறார் என்றாலும், செருக்கில்லாமல் நன்றாக ஒத்துழைத்தார். குவைத்தில் அவரது நிகழ்ச்சிகள், 'லஞ்ச், டின்னர்' மற்றும் சந்திக்கும் நபர்கள் பற்றி பட்டியல் தயாரித்திருந்தோம். எதற்குமே அவர் மறுக்கவில்லை.மேனகாவின் நிகழ்ச்சியில் அந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றிருந்த, நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பாராட்டு நடத்த முடிவு செய்திருந்தோம். அவரும் மறுக்காமல், 'நல்லிதானே... அவரும் நல்ல காரியங்கள் செய்து வருபவர் தானே... பாராட்டுக்குத் தகுதியான மனிதர். நல்லா செய்யுங்க...' என்று, சம்மதித்தார்.மேனகாவின் குவைத் பயணத்தின்போது, குவைத் அரசரின் சகோதரியும் - சுற்றுச்சூழல் பொறுப்பாளருமான, ஷேகா ஹம்தாலை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். இருவருக்குமே அதில் திருப்தி.அவரது விலங்குகள் நல காப்பகத்திற்கு நிதி திரட்ட, எங்களுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடன் டின்னருக்கு அவரை அழைக்க, அவநம்பிக்கையுடன் தான் சம்மதித்தார். அந்த டின்னரில், அவரது விலங்குகள் நலக் காப்பகத்திற்கு, 12 லட்ச ரூபாய் நிதி திரண்டது.-- இம்புட்டு அன்யோன்யமாக இருந்த மேனகா, ஒரு சாதாரண விஷயத்துக்காக சண்டை பிடித்தார், பாருங்கள்... அது...— தொடரும்என். சி. மோகன்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us