தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

சமீபத்தில், ஒருநாள் மாலை...

ஆசிரியரை சந்திக்க, 80 வயதான, சுதந்திர தியாகியும், காங்கிரஸ் அபிமானியுமான ஒருவர் வந்திருந்தார். அக்காலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலருடன் பழகியவர்.

குப்பண்ணா, நாராயணன், ராமசாமி அண்ணாச்சி, லென்ஸ் மாமா அனைவரும் வடையை மொசுக்கியவாறு அரட்டை கச்சேரியில் மூழ்கியிருந்தனர்.

கைத்தடியை ஊன்றியவாறு வந்தவர், இவர்களை பார்த்ததும், நலம் விசாரித்து, அவர்களுடன் ஐக்கியமானார்.

'தம்பி மணி... ஆசிரியர் கூப்பிட்டா, வந்து சொல்லுப்பா...' என்றார்.

அவர்கள் பேசுவதை கவனிக்கலானேன்.

பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, அரசியல்வாதியும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் பற்றி வந்தது. ஒரு பேட்டியில் அவர் கூறிய தகவலை சொல்ல ஆரம்பித்தார், தியாகி.

அது:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நான் இருந்த சமயம், ஆண்டுதோறும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய பிரவேச நிகழ்ச்சி நடந்த, ஜூலை 8ம் தேதி, அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்போது, அந்த கோவிலில் உள்ளூர் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் ஒரு பெண்மணியை எனக்கு அறிமுகப்படுத்தினர். அவரது பெயர் சொர்ணத்தம்மாள். விடுதலை போர் நடந்த சமயத்தில் அவர் பட்ட துயரம் நெஞ்சை உலுக்கக் கூடியது.

கடந்த, 1942ல் மதுரை வீதிகளில், 'வந்தே மாதரம்' என்று முழங்கி சென்ற ஊர்வலத்தில், சொர்ணத்தம்மாள், தாயம்மாள் உள்ளிட்ட சில பெண்களும் இருந்தனர். அந்த பகுதியில் இருந்த தீச்சட்டி கோவிந்தன் என்ற காவல் துறை அதிகாரி, ஊர்வலம் சென்ற இவர்களை கைது செய்தார். வேனில் அழைத்து போய், ஊமச்சிகுளம் என்ற ஊரில் சாலை ஓரத்தில் இறக்கி, அவர்களது ஆடைகளை உரித்து அங்கேயே விட்டு விட்டு போயிருக்கிறார்.

அதன்பிறகு, புதர்களுக்குள் அவர்கள் ஒளிந்திருந்து, பொழுது சாய்ந்த பின், ஒரு வீட்டின் கதவை தட்டி, தங்கள் நிலை பற்றி தெரிவித்து, பெண்களை மட்டும் வரச்சொல்லி, ஆடைகளை வாங்கி உடுத்திக் கொண்டனர்.

- இப்படி அவர் கூறி முடிக்கவும், ஆசிரியரிடமிருந்து அழைப்பு வரவும், எழுந்து சென்றார், அந்த முதியவர்.

'இன்னொரு நாள் இவரிடம் தனியாக பேச வேண்டும்; நிறைய தகவல்கள் கிடைக்கும்...' என்று நினைத்துக் கொண்டேன்.



ஆங்கில பத்திரிகை நிருபர் ஒருவர், சமீபத்தில், டிரக் டிரைவருடன் பயணித்து, பல விஷயங்கள் அறிந்துள்ளார். அதில், முக்கியமானது கையூட்டு. இதுபற்றி ஆங்கில இதழ் ஒன்றில் விரிவாக கட்டுரை எழுதியிருந்தார். உதவி ஆசிரியர் உதவியுடன் படித்த அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

டிரக் டிரைவர் ஒருவருடன் பயணித்தபோது தான், பல விஷயங்கள் தெரிய வந்தது. இதில் முக்கியமானது, கையூட்டு தான்.

இந்தியாவில், 50 லட்சம் டிரக்குகள் உள்ளன. இந்த டிரக்குகள் ஆண்டுதோறும், 60 - 70 ஆயிரம் ரூபாயை, கையூட்டாக கொடுத்து, பயணங்களை முடித்து திரும்புகின்றன.

இது, 10 பெரிய நகரங்களில் பல டிரக் டிரைவர்களை சந்தித்த பின் கிடைத்த தகவல்.

* குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களில் தான் கையூட்டு கேட்பதும், பெறுவதும் குறைவாம்

* சுமார் 50 கி.மீ.,க்கு ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர், லாரிகளை நிறுத்தி கையூட்டு பெறுகிறார்

* உ.பி., - ம.பி., மற்றும் ஒடிசாவில் கையூட்டு பெறுவது ரொம்ப அதிகம்

* தேசிய பர்மிட், ஆர்.சி., புத்தகம், இன்ஷுரன்ஸ் மற்றும் புகை சோதனை சான்று என, எல்லாவற்றையும் காட்டினாலும், லஞ்சம் வாங்கிய பின்னரே, லாரிகளை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்

* ஆர்.டி.ஓ., அலுவலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆபீஸ் சூப்பிரண்டென்ட் முதல் கிளார்க் வரை அனைவருக்கும் லஞ்சம் தரவேண்டியுள்ளது. ஆண்டுதோறும், ஆர்.டி.ஓ., அலுவலக வரி என, 7,000 கோடி ரூபாய் பெறுகின்றனர்

* ஒவ்வொரு டிரைவரும் குறைந்தது, 12 மணி நேரம் டிரக் ஓட்டுகின்றனர். அசதியாக இருந்தாலும், துாக்கம் வந்தாலும், இவர்கள் ஓட்டுவதை நிறுத்துவதில்லை. ஆனால், ஒரு கட்டத்தில், துாக்கத்தில், 'ஸ்டியரிங் வீல்' மீது தலை லேசாக மோதும்போது, ஓட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். 2 - 3 மணி நேரம் துாங்கி எழுந்து, மீண்டும் ஓட்ட ஆரம்பிக்கின்றனர்

* கடந்த, 2018ல், 1.5 லட்சம் பேர், சாலை விபத்தில் இறந்துள்ளனர். இவர்களில், 15 ஆயிரத்து 150 பேர், லாரி அல்லது டிரக் டிரைவர்கள். மொத்த விபத்தில் இவர்கள், 10 சதவீதத்தினர். கடந்த, 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேர் விபத்தில் இறந்துள்ளனர்

* டிரக் டிரைவர்களுக்கு முதுகு வலி, முட்டி மற்றும் தோல் பிடிப்பு, தலைவலி, தலை சுற்றல், கண் பார்வை மங்கல் மற்றும் 'ஹைபர் டென்ஷன்' என, பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு முக்கிய காரணம், இவர்களிடம் வரியும், கையூட்டும் பெறும் அதிகாரிகள் தான்.

இவர்களுக்கு தங்க, துாங்க வசதிகள் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பதே இல்லை. இதனால் தான், வடமாநில தாபாக்களில், இவர்களுக்காகவே கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளதை காணலாம். இதுபற்றி கூடுதல் ஆய்வு செய்தபோது, 82 சதவீதம் பேருக்கு, முதுகு வலியும், 65 சதவீதத்தினருக்கு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்னை உள்ளது, தெரிய வந்தது

* பஞ்சாப், ராஜஸ்தான் மாநில டிரக் டிரைவர்கள், போதை மருந்து உட்கொண்டு வண்டி ஓட்டுவது சகஜம். டிரக் டிரைவர்களில் பலருக்கு புகையிலை பழக்கம் உண்டு

* தேசிய அளவில், ஒரு, 'டிரிப்' போய் வந்தால், போக வர குறைந்தபட்சம், 850 ரூபாய் கையூட்டாக தர வேண்டியுள்ளதாக கூறுகிறது, ஆய்வு. கோல்கட்டா, கவுகாத்தி பகுதிகளில் 97.5 சதவிகிதம், இது ரொம்ப அதிகம். அடுத்து, நம் தமிழகம், 89 சதவிகிதம்; மூன்றாவது, டில்லி, 84.4 சதவிகிதம். இவர்களிடமிருந்து தப்ப, மாற்று வழி முயற்சித்து, அதில் மாட்டி, கூடுதலாக கையூட்டு தந்து பயணத்தை தொடருவதும் கண்கூடு

* இவர்கள் இவ்வளவு அக்கறையாக வேலை செய்தாலும், மனதளவில் திருப்தியில்லை. காரணம், குறைந்த சம்பளம். வழியில் அதிகாரிகள் தொல்லை. சரியாக நிர்ணயம் செய்யப்படாத வேலை நேரம். விரைவாக சென்று இறக்க, டிரக் முதலாளிகளின் கெடுபிடி என, பல பிரச்னைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் மீறி தான், இவர்கள் தொடர்ந்து இந்த தொழிலில் இருக்கின்றனர். இவர்களின் பிரச்னைகளை அரசு கவனத்தில் கொண்டு, ஆவன செய்தால், விபத்துகள் குறையும்.

- இப்படி எழுதியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us