PUBLISHED ON : ஜன 30, 2022

ந. சேதுரத்தினம், கல்பாக்கம்: 'அந்துமணி ஒரு சிறந்த வியாபாரி...' என, என் நண்பன் சொல்கிறான்; ஏனெனில், உங்களது, கேள்வி - பதிலை புத்தக வடிவில் வெளியிட்டு, பொருள் ஈட்டுகிறீர்களாம்... உங்களது பதில் என்ன?
எனது கேள்வி - பதிலை தொகுத்து, 'தாமரை பிரதர்ஸ்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் தான் வெளியிடுகிறது... வருமானம் அவர்களுக்குத் தான்; எனக்கில்லை!
ஆர். கேசவன், துாத்துக்குடி: ஒரு ஏழை குடிமகனுக்கும், பணக்காரனுக்கும், இன்று நம் நாட்டில் என்ன வித்தியாசம்?
இதில் என்ன பெரிய சந்தேகம்... ஏழை, எதுவும் கிடைக்கவில்லையேன்னு கஞ்சி குடிக்கிறான்... பணக்காரன், டாக்டர் சொல்லி விட்டாரே என்று கஞ்சி குடிக்கிறான்!
* கே. மோகன், திருச்சி: சென்னையில் ஓடும் கூவம் ஆறு சுத்தமாகி விடுமா?
கிழக்கில் உதிக்கும் சூரியனின் ஆட்சி இப்போது நடக்கிறது... அதை மேற்கில் அவர்கள் உதிக்கச் செய்யும்போது தான் சுத்தமாகும்!
அ. கல்பனா, வேலுார்: அசைவம் சாப்பிடுபவர்கள் எல்லாரும் முரடர்களாக இருப்பார்களாமே... அது சரிதானா?
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஹிட்லர் பற்றி படித்திருப்பீர்கள் தானே... அவர் எவ்வளவு பெரிய முரடர், சர்வாதிகாரி... அவர் சுத்த சைவமாம்! இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள்!
* அப்துல், திருச்சி: தமிழகத்தில் புதிதாக, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதே...
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலையும் கிடைக்கப் போவதில்லை; அவர்களாலும் தனி, 'கிளினிக்' அமைக்க முடியப் போவதில்லை...
இன்ஜினியர்களைப் போல், இவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி, வீடு வீடாக, 'ஊசி போடணுமா, ஊசி...' எனக் கூவக் கூடிய நிலை வந்து விடும்!
வி. சின்னம்மா சரஸ்வதி, ராமநாதபுரம்: தமிழக அரசியல் கட்சிகள், ஏதாவது ஒரு வகையில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற்று விடுமா?
தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியாலும், ஒரு நாளும் பெற்று விட முடியாது... சும்மா நாடகமாடுகின்றன!
அம்பை தேவா, சென்னை: மறைந்த நடிகர் காளிதாஸ், உங்களுக்கு, விடிகாலை 4:30 மணிக்கே, 'வாட்ஸ் ஆப்'பில், 'குட்மார்னிங்' போட்டு விடுவார் என, எழுதியிருக்கிறீர்கள்... உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?
மெரினாவில் தான்... இரவு நேரத்தில், லென்ஸ் மாமாவுடன் சேர்ந்து கொள்ள வருவார்... (எதற்கு என உங்களுக்குத் தெரியுமே...) அப்போது பழக்கமானவர்தான்!
