தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விடியல்

விடியல்

விடியல்


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடகை கார், ஊருக்குள் வந்தது. மருத்துவமனைக்கு போயிருந்த அருணாச்சலம் வாத்தியார் வீடு திரும்பினார். காரை விட்டு அவர் இறங்கும் முன், நலம் விசாரிக்க, ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர்.

''என்ன விஷயம்ப்பா?'' எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார், தேரியப்பன்.

''மேலத்தெரு அருணாச்சலம் வாத்தியார், ஆஸ்பத்திரிலேருந்து வந்திருக்காராம்.''

''அவருக்கென்ன?''

''தெரியாதா ஒங்களுக்கு?''

''தெரியாதே... சென்னைக்குப் போயிட்டு, முந்தாநாள்தானே வந்தேன்.''

''ஓ... அப்படியா, அவருக்கு, வயித்துல ஆபரேஷன். 18 நாள் கழிச்சி இன்னிக்குத்தான் திரும்பியிருக்கார்.''

'ச்சே... பாவம், ஆபரேஷன்னா ரொம்ப கஷ்டமாச்சே... போய் பார்க்கலாம்...' என, வீட்டிற்குப் போய், துண்டை உதறி தோளில் போட்டு, சென்னையில் வாங்கிய புது செருப்பைக் காலில் மாட்டி, கிளம்பும்போது, ''எங்கே புறப்பட்டுட்டிக?''என்றாள், மனைவி செண்பகம்.

''அருணாச்சலம் வாத்தியாருக்கு ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருக்காராம்; போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துர்றேன்.''

''சரிதான்... போனமா, வந்தமான்னு வாங்க. வேண்டாத கதையெல்லாம் பேசிப்புடாதீங்க.''

''வேண்டாத கதை என்னத்தடீ பேசப் போறேன்... வாய மூடிகிட்டுக் கெட,'' மனைவியை அலட்சியப்படுத்தி, நடையைக் கட்டினார்.

கீழத்தெருவிற்குள் வரும்போது, சிலர், அருணாச்சலம் வாத்தியாரைப் பார்க்க ஒன்றாகப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டார், தேரியப்பன்.

''அருணாச்சல வாத்தியார் இனிமே பெழைப்பார்ன்னா நெனைக்கறிய,'' என்றார், தேரியப்பன்.

''ஏன்?'' என்றார், ஒருவர்.

''ஆபரேஷன் பண்ணதால எப்படி தப்புவான்? அதுவும், 18 நாளா ஆஸ்பத்திரியில போட்டுருந்துதுன்னா ரொம்ப ஆபத்தான நோயாத்தான இருக்கணும். பாவம், நல்ல மனுஷன். மிஞ்சிப்போனா ஆறு மாசம் அல்லது ஒரு வருஷம்தான் தாங்கும்,'' மனதளவில் மிகவும் வருந்தி சொன்னார், தேரியப்பன்.

''யோவ்... நீரா ஒரு முடிவெடுத்து அவரு தாங்க மாட்டார்ன்னா என்னய்யா அர்த்தம்... சும்மாக் கெடையும் ஓய்,'' என்றார், இன்னொருத்தர்.

''என்னமோ எம் மனசுல பட்டத சொன்னேன். வாத்தியார் ரொம்ப காலம் வாழ்ந்தா, வேண்டாம்னா சொல்லுதேன்?'' என்றபடி நடந்தார், தேரியப்பன். அவரை பின் தொடர்ந்தனர்.

வீட்டிற்குள் சோர்வாகப் படுத்திருந்தார்,  வாத்தியார்.

''அண்ணாவி எப்படி இருக்கிய... கன பாடுபட்டுட்டிய போலிருக்கே... வயித்திலயா ஆபரேஷன் நடந்தது?'' கேட்டார், ஒருவர்.

''ஆமா... கன பாடுதான் பட்டுட்டேன். இந்தா பாருங்க,'' தன் சட்டையை விலக்கி அறுவை செய்திருந்த இடம் காட்டினார், அருணாச்சலம். நெஞ்சுக்குழியிலிருந்து தொப்புள்குழி கடந்து சென்றிருந்தது.

''அடடா எம்மாம் பெரிசு? பெரிய ஆபரேஷன்தான் போலருக்கு,'' என்றார், ஒருவர்.

''இவ்ளோ பெரிய ஆபரேஷன் பண்ணி யாரு பொழச்சிருக்கா... இந்த டாக்டர் பயலுவ என்னத்தயோ துட்டுக்காவ செய்வானுவ... உள்ள என்னெல்லாம் கொடக்கம் பண்ணுவானுவளோ,'' தேரியப்பனால் பேசாமல் இருக்க முடியவில்லை.

''அதெல்லாம் ஒண்ணுமில்லை. டாக்டர் நல்லா கவனிச்சார்... இன்னும் ஆறு மாசத்தில எல்லா வேலையும் செய்யலாம்னுட்டார்,'' என்றார், அருணாச்சல வாத்தியார்.

''அண்ணாவி... நீங்க என்னதான் சொல்லுங்க... ஒரிஜினல் மாதிரி ஒட்டு போட்டது ஒழைக்குமா? எப்பம் பிச்சுக்கிட்டுப் போவுமோ, எத்தன நாள் தாங்குமோ... ஒங்க மனசுக்கும், கொணத்துக்கும் இப்படி ஒரு நோயி வந்திருக்கப் படாது. இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் உசிரோடக்கெடந்தா நல்லாருக்கும்... ம்ம்... கடவுளு எறக்கமில்லாதவன்யா...'' என, 'உச்' கொட்டினார், தேரியப்பன்.

அவரோடு வந்திருந்தவர்கள், அருணாச்சலம் வாத்தியாரைக் கவனித்து விட்டு நெளிந்தனர்.

அருணாச்சலம் வாத்தியாரின் முகம் சிறுத்தது. பயம் கலந்த உள்ளுணர்வா... தனக்கு ஏதுமாகாது என்பதை எப்படி தெளிவுபடுத்துவது என்ற குழப்பமா என்றறிய இயலா பார்வை தெரிந்தது.

''அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எனக்கு நல்லா கொணமாயாச்சு. இனிமே நோயே கெடையாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். கொஞ்ச நாள், ஓய்வு எடுத்தா பழைய மாதிரி எழுந்திருச்சிடுவேன்,'' பலகீனமாய்ச் சொன்னார், அருணாச்சல வாத்தியார்.

''நீங்க சொன்னதெல்லாம் சரி. தலைக்கு வந்தது தலப்பாவோட போயாச்சு. ஆபரேஷன் பண்ணின பொறவு, நோயி ஏன் வரப்போவுது... நீங்க முன்ன விட இன்னும் புது தெம்போட எழுந்து நடப்பிக,'' ஆறுதல் சொன்னார், ஒருவர்.

''என்னதான் சொல்லுங்க... எனக்கென்னமோ பயமாருக்கு. அண்ணாவிய இப்படி பார்ப்பம்ன்னு கனவுலகூட நெனச்சிப் பார்க்கல. வரப்படாதது வந்தாச்சு, மனசு கேக்கல. ம்ம்... நம் கைல என்ன இருக்கு, சாமிய நல்லா கும்பிடுங்க,'' சொல்லி எழுந்தார், தேரியப்பன்.

தேரியப்பனை எரிச்சலோடு பார்த்து தலை குனிந்தார், அருணாச்சலம் வாத்தியார்.

மற்றவர்களும் விடை பெற்று எழுந்து வெளியில் வந்ததும், ''யோவ் தேரி... அறிவிருக்கா ஓய் ஒமக்கு?'' கோபத்தோடு கேட்டார், பாண்டி.

''ஏன்... என் அறிவுக்கென்ன?''

''சொகமில்லாம ஆஸ்பத்திரிக்குப் போயி, செத்துப் பொழச்சி வந்திருக்கற மனுஷன, மூஞ்சிலடிக்கற மாதிரி, 'நீரு அஞ்சாறு வருஷத்துல செத்துப் போவீரு'ன்னா என்னய்யா அர்த்தம்? 'ஒரிஜனலைப் போல ஒட்டுப்போட்டது இருக்காது... எப்ப பிச்சிகிட்டுப் போகுதோ'ன்னு சொன்னீரே... அந்த மனுஷன் மூஞ்சி அஷ்ட கோணலா நெளிஞ்சுதே பார்த்தீரா?'' கோபமாகக் கேட்டார், கந்தசாமி.

''தீன்னா நாக்கு வெந்துறாது ஓய்... என் வயசுல இப்படி எத்தன பேத்தப் பார்த்திருப்பேன்... நெஞ்சுக் குழிலருந்து தொப்புளு தாண்டி சத்திரமிட்டாச்சே... இன்னும் கஷ்டந்தானே... கொஞ்சகாலம் வாழ்ந்தா நல்லதேங்கற நல்லெண்ணத்தில தான் அப்படிச் சொன்னேன். தப்பா?''

''தப்புன்னா தப்பு, மகா பெரிய தப்பு ஓய்... சாகக் கெடக்கறவனப் பார்த்தாக்கூட, 'நீ நல்லாதானிருக்கே... நாலே நாள்ல மத யான மாதிரி எந்திருச்சு வருவே'ன்னு தைரியம் குடுக்கணும் ஓய்,'' சற்றே கோபத்துடன் கடிந்து கொண்டார், பாண்டி.

''சும்மாயாச் சொன்னான்... 'யதார்த்தவாதி வெகுஜன விரோதி'ன்னு... நான் ஒண்ணும் இல்லாததச் சொல்லலியே... ஒங்கள மாதிரி உள்ள ஒண்ணு, வெளிய ஒண்ணுன்னு நமக்கெல்லாம் பேச முடியாதப்பா,'' கடுகடுப்புடன் தலை கவிழ்ந்து நடந்தார், தேரியப்பன்.

யாரும் பேசவில்லை. நடந்தனர்.

எதிரே வந்த கீழத்தெரு கிருஷ்ணன், ''எல்லாரும் வாத்தியாரப் பார்த்துட்டுத் திரும்புறிய போலருக்கே... எப்படி இருக்கிறார்?''

''பெரிய ஆபரேஷன்... கொடலக் கிழிச்சு உட்ருக்கானுவ... இனிம அவ்வளவுதான்,'' முந்திக்கொண்டார், தேரியப்பன்.

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, பாண்டிக்கு; அடக்கிக் கொண்டார்.

''அதெல்லாம் ஒண்ணும் ஆவாதுடேய்... நீ ஒண்ணுன்னா ஒம்பதும்ப... மூடிகிட்ட வாடே,'' தேரியை கைபற்றி இழுத்தார், கந்தசாமி.

''கிருஷ்ணண்ணே... வர வர ஒங்க ஒடம்பும் கெட்டுகிட்டு வருது... சுகர் அதிகமாகியாச்சுன்னு நெனைக்கறேன்...

ஒடலு ரொம்ப மெலிவாத் தெரியுதே?'' என்றார், தேரியப்பன்.

''இல்லியே... நான் நல்லாத்தானே இருக்கேன். ஒடம்பு ஒண்ணும் கொறயலியே.'' என்ற கிருஷ்ணனுக்கு, தன் ஆரோக்கியத்தின் மீதே சந்தேகம் வந்தது.

''கிருஷ்ணண்ணே... இந்த கிறுக்கன்கிட்ட பேசிகிட்டிருந்திய... ஒங்களுக்கும் நோக்காட்ட உண்டு பண்ணிபுடுவான். பேச்சுக் குடுத்துறாதீங்க,'' சிரித்தபடியே எச்சரித்தார், கந்தசாமி.

'யல, உள்ளதச் சொல்ல உடமாட்டியால... என்னண்ணியும் போங்கல...' ஆற்றாமையுடன் தன் வீட்டை நோக்கிப் போனார், தேரியப்பன்.

'தனக்கு மட்டும் நோய்கேடே வராதுங்கற நெனப்பு... தனக்கு வந்தாத் தெரியும் தலைவலியும் மண்டகுத்தும்...' முணுமுணுத்தபடியே தன் வீட்டை நோக்கிப் போனார், பாண்டி.

வீட்டிற்குப் போன தேரியப்பன், செண்பகத்திடம் நடந்ததைச் சொன்னார்.

''உங்களுக்கு பேசத் தெரிஞ்சது இவ்வளவுதான். எப்படின்னாலும் அடுத்தவங்க வயித்தெரிச்சலக் கொட்டிக்காம இருக்க முடியாது; இந்த புத்தி ஒங்களவுட்டு எப்பத்தான் போகப் போகுதுன்னு தெரியல. கடவுளுக்குத்தான் வெளிச்சம்,'' என்ற செண்பகம், வேலையில் ஈடுபட்டாள்.

நல்லவர் தான். ஆனால், அவரால் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று சொல்லத் தெரியாது. அது சரியில்லை என்பது அவருக்குத் தெரியாது. தெரியும் காலம் வரவேண்டும்... வரும், வரும்போது நல்லபடியாக வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

''இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று...'' என, புத்தகத்தை விரித்து படித்துக் கொண்டிருந்தான், தேரியப்பனின் பேரன்.

''யல... எம் பேரா... என்னம்மோ சொல்லுதியே அதுக்கு என்னால அர்த்தம்?'' என்றார், தேரியப்பன்.

''ஆங்... நீங்க எங்க போனாலும் ஒங்க மனசுல பட்டதப் படபடன்னு பேசிப்புடுதியளே... அப்படிப் பேசப்புடாதுன்னு அர்த்தம்,'' வெடுக்கெனச் சொல்லி, தன் வேலையில் ஈடுபட்டாள், செண்பகம்.

''கனியைப் போல் வார்த்தை இருக்கும்போது, காய் மாதிரி கசப்பான வார்த்தையைப் பேசக் கூடாதுன்னு அர்த்தம்ன்னு, எங்க டீச்சர் சொன்னாங்க தாத்தா,'' எதார்த்தமாகப் பதில் சொல்லி, படிப்பைத் தொடர்ந்தான், பேரன்.

''வச்சுகிட்டு நாங்க என்ன வஞ்சகமா பண்றம்... மனசுலப் பட்டதத்தான் சொல்றம்... சரியோ, தப்போ அதெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா... இந்த வஞ்சகம், சூதெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா,'' சலிப்புடன் சொல்லி, நாற்காலியில் அமர்ந்தார், தேரியப்பன்.

ஆண்டுகள் உருண்டோடின. ஊரில் என்னென்னவெல்லாமோ நடந்து விட்டன. தேரியப்பன் சென்னைக்குப் போயிருந்தபோது, நெஞ்சைப் பிடித்து ரயில்வே ஸ்டேஷனில் விழுந்து விட்டார். மருத்துவமனையில் சேர்த்தனர். நல்லவேளை, அவரின் மகன், மகள் எல்லாரும் அங்கிருந்ததால் அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர்.

'இனியொரு முறை நெஞ்சுவலி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்று எச்சரித்து, மருந்து, மாத்திரை கொடுத்தனுப்பினர். ஊர் வந்து சேர்ந்தவரைப் பார்ப்பதற்கு, ஊரில் உள்ளவர்கள் காலை முதல் மாலை வரை வந்து போக ஆரம்பித்தனர்.

வந்தவர்களில் தேரியப்பன் மேல் அதிக அக்கறை உள்ள ஒருவர், ''உங்களுக்கு இப்படி ஒரு நோய் வரும்ன்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கல. ஒருக்கா, 'ஹார்ட் அட்டாக்' வந்துட்டா ஓயாம வந்துருமாமே... எளவெடுத்த நோயி மனுஷனுக்கு ஆவாது.

''மாமா, நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க... ஒங்களுக்கு ஒண்ணும் ஆவாது. கொறச்சுப் பார்த்தாலும் ஒரு வருஷமாவது தாங்கும். அதுக்குப் பொறவு ஆசுபத்திரியில போயி படுத்திறமாட்டியளா... கவலப்படாதீங்க,'' என்றது தான் தாமதம், தேரியப்பனுக்கு நெஞ்சு வலித்தது போலிருந்தது.

அதே நேரம், தனக்கு ஆறுதல் சொன்ன உறவினரைக் கடித்துக் குதறிவிட வேண்டும் போலிருந்தது. அருகில் நின்றிருந்த செண்பகத்துக்கு, அவர் படும்பாடு நன்கு புரிந்தது. வந்தவரை விரட்டியடிக்க வேண்டும் போலிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

''அண்ணே... இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதுண்ணே... மனசத் தளரவுட்றாதீங்க. நோய் வராத மனுஷன் யார்ண்ணே இருக்கா? மனம் நல்லாருந்தா ஒடம்பும் நல்லாவே இருக்கும். இத நான் சொல்லல... மருத்துவமே சொல்லுது,'' படித்த ஒரு இளைஞர், பக்குவமாய்ப் பேசினார்.

அதைக் கேட்டதும், தேரியப்பனுக்குள் தெம்பு புதிதாய்ப் பிறந்தது போலிருந்தது. வந்தவர்களெல்லாம் போய் விட்டனர். உள்ளே வந்தாள், செண்பகம்.

'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்று, தன் பேத்தி சத்தமாய் படிப்பது கேட்டது.

''செண்பகம்... இப்பதான்டி இந்த திருக்குறள் எவ்வளவு எதார்த்தமானதுன்னு புரியுது. தனக்கு வந்தாத்தான் தலவலியும், காய்ச்சலும் தெரியும்ன்றது சரிதான்டி. யாருக்கு சொகமில்லன்னாலும் அவங்க மொகத்துக்கு நேர்லயே, 'இனி அவ்வளவு தான்... நீங்க தேறமாட்டிய'ன்னு எல்லாமே தெரிஞ்சவன் போல சொல்லுவேனே...

''அப்பல்லாம் எல்லாரும் என்னத் திட்டினாக்கூட, அறிவு கெட்டவங்கன்னு எம்போக்கிலயே தாண்டி போனேன். ஆனா, என்னப் பார்த்து யாராவது, 'நீ இனிமே தாங்க மாட்டேல'ன்னு சொல்லும் போது தான், அந்த வார்த்தையோட வலி தெரியுது... 'ஒனக்கு ஒண்ணும் ஆகாது நீ தைரியமாயிரு'ன்னு சொல்ற வார்த்தையோட சொகமும் தெரியுது,'' என்ற தேரியப்பனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

''ஒங்களுக்கு புத்தி வர்றதுக்காகத்தான் இந்த நோயே வந்திருக்கும்ன்னு நெனைக்கறேன். அடுத்தவங்க என்ன நெனைப்பாங்கன்னு மனுசுல நெனச்சுப் பார்த்துப் பேச ஆரம்பிச்சிட்டம்னாலே நல்லத மட்டும்தாங்க பேசுவோம்,'' என்ற செண்பகத்தின் மனதில், தன் கணவனைப் பற்றி வெகுநாளாயிருந்த வருத்தம் சுத்தமாக விலகியது.

'உற்சாகம் தர்ற வார்த்தையைப் பேசத் தெரிந்தவன் தான் மனிதன்...' என்று தன்னைப் பார்க்க வருபவருக்கெல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறார், தேரியப்பன்.

தாமரைச் செந்துார் பாண்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us