PUBLISHED ON : மே 08, 2022

'குருவே... படைக்கும் நைவேத்யத்தை, இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால், பிறருக்கு பிரசாதமாக வழங்க முடியுமா?' என்று கேட்டான், சீடன் ஒருவன்.
எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்து, 'நம் வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்...' என்றார், குரு.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருந்து தோன்றியது
என பொருள் கொண்ட, 'பூர்ணமிதம்' எனும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார், குரு.
அனைத்து மாணவர்களும், மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பின், கேள்வி கேட்ட, சிஷ்யனை சைகையால் அழைத்த குரு,'எனதருமை சீடனே... மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?' என்றார்.
'முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் குருவே...' என்றான்.
'எங்கே ஒருமுறை சொல் பார்ப்போம்...' என்றார், குரு.
கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி, கணீர் குரலில் கூறத் துவங்கினான்.
'பூர்ண மித பூர்ண மிதம்...' என, கூறி முடித்தான்.
'நீ, சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே... எங்கே உன் புத்தகத்தை காட்டு...' என்றார், குரு.
பதட்டம் அடைந்து புத்தகத்தை காண்பித்தவன், 'குருவே... தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால், இதில் இருப்பதை போலவே நான் கூறினேன்...' என்றான், சீடன்.
'இந்த புத்தகத்திலிருந்து படித்து தான் மனதில் உள் வாங்கினாயா... இதிலிருந்து உள் வாங்கினாய் என்றால், மந்திரம் இதில் இருக்கிறதே.... உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக் கொண்டால், புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா...' என்றார், குரு.
குழப்பமாக பார்த்தான், சீடன்.
குரு தொடர்ந்தார்...
'உன் நினைவில் நின்ற மந்திரம், சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்துால வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது, ஸ்துால வடிவில் இருந்தாலும், அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
'நீ உள்வாங்கிய பின், புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்து விட்டதா, இல்லையே... அதுபோல தான், இறைவன் உட்கொண்ட பிரசாதம், அளவில் குறையாமல் இருக்க, நாம் எல்லாரும் உண்கிறோம். ஸ்துாலமாக இருக்கும் நாம், சூட்சுமமாக இருக்கும் இறைவனுக்கு படைத்த நைவேத்யத்தை உட்கொள்கிறோம்...' என்று விளக்கினார், குரு.
ஆன்மிக வாழ்வுக்கு, பாரம்பரிய பூஜை முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த, கூறப்பட்ட கதை இது.
ஆ. சி. கோவிந்தராஜன்
