sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வாரீங்களா?

/

திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வாரீங்களா?

திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வாரீங்களா?

திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வாரீங்களா?


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வாரம், திருப்பதி - திருமலையில் எந்தவித கட்டணமுமின்றி, லாக்கர் வசதியுடன், வெளியாட்கள் தொந்தரவின்றி, தேவஸ்தான, 'சேவா சதன்' என்ற ஹாலில் பாதுகாப்புடன், இலவசமாக தங்க இடம், சுடு தண்ணீருடன் கூடிய சுத்தமான பாத்ரூம், நினைத்த நேரத்தில் அன்னதான மண்டபத்தில், கியூவில் நிற்காமல், நேராக சென்று இலவச உணவருந்தும் வசதி... இதெல்லாம் எப்படி என்று கேட்

கிறீர்களா? எல்லாம் திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வரும் தொண்டர்களுக்கு தான். இதோ... புதிதாக சேவைக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்காக சில தகவல்கள்:

'ஸ்ரீவாரி சேவை' என்பது பக்தர்களுக்காக, பக்தர்களே உதவுவதுதான். திருமலையில், 40 இடங்களில் இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன் முதலில், 1999ல் இந்த சேவை துவங்கப்பட்டது. ஆரம்பத்தில், 200 பேர் தான் பணியில் ஈடுபட முன் வந்தனர். ஆனால், தற்போது, ஓராண்டிற்கு, 50 ஆயிரம் பேர் வரை திருமலைக்கு வந்து சேவையில் பங்கு கொள்கின்றனர்.

கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் சாதாரண கடை நிலை ஊழியர் முதல், பெரிய பொறுப்பில் உள்ளவர் வரை வேறுபாடு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சரி சமமாக ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சேவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதில் கலந்து கொள்ள குறைந்தது, 10 பேர் கொண்ட குழுவாக, ஒரு மாதம் முன்பே தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலருக்கு எழுதி, பதிவு செய்ய வேண்டும். அங்கிருந்து ஒப்புதல் கடிதம் வந்ததும், தங்களது சொந்த செலவிலேயே திருமலைக்கு வர வேண்டும். வந்தவுடன் பஸ் நிலையம் அருகில் உள்ள சேவா சதன் ஸ்ரீவாரி சேவை மைய அலுவலகத்தில், இதற்கென உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஒவ்வொருவரும் தங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், முகவரி சான்றிதழ் இணைத்து கொடுக்க வேண்டும். விண்ணப்ப பரிசோதனை முடிந்ததும், சேவை செய்பவர்களுக்கு அடையாளச் சின்னமாக தேவஸ்தானத்திலிருந்து கொடுக்கப்படும், 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம். இது தான் லைசன்ஸ் மாதிரி. குறைந்தது ஏழு தினங்கள் தங்கி, பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ஸ்ரீவாரி சேவகர்களுக்கு தேவஸ்தானம் கூறும் அறிவுரைகள்...

திருமலை யாத்திரை இன்ப சுற்றுலா பயணமல்ல, புனிதமான புண்ணிய ஸ்தலம். இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை புரிவதே ஸ்ரீவாரி சேவகர்களின் கடமை. குழந்தைகள் மற்றும் நோயாளிகள், மிக வயதானவர்களுக்கு அனுமதி இல்லை.

இச்சேவையில் பங்கு பெற யாருக்கும் பணமோ, பொருளோ அளிக்க வேண்டியதில்லை. இலவசமாக பங்கு கொள்ளலாம். ஆலயத்திற்கு உள்ளே சேவை புரிய அனுமதி இல்லை.

ஸ்ரீவாரி சேவையின் போது, பெண்கள் நீலவண்ண புடவையும், வெள்ளை நிற ரவிக்கையும், ஆண்கள் வெள்ளை நிற ஆடைகளையும் அணிய வேண்டும்.

சேவை செய்ய வேண்டிய இடம் மற்றும் நேரத்தை தினமும் சேவை மையத்தில் மாலையில் அறிவிப்பர். சேவை நேரம் ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் முதல், ஆறு மணி நேரம் வரை இருக்கும்.

சேவை காலத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள, 'சேவா சதன்' ஹாலில் பாதுகாப்புடன் இலவசமாக தங்கலாம். வெளி ஆட்களுக்கு அங்கு அனுமதி இல்லை. தேவஸ்தான அன்ன தான மண்டபத்தில் இலவச உணவு காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை வழங்கப்படுகிறது. 10 - 20 பேர் கொண்ட குழுவாக பிரிந்து செய்ய வேண்டிய சேவை விவரங்கள்:

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவு மற்றும் பால் போன்றவற்றை கவுன்டர் வழியாக வினியோகிப்பது.

லட்டு தயாரிப்பில் உதவுவது (குறைந்த அளவு மட்டும் அனுமதி), பக்தர்களின் பொருட்களை, 'ஸ்கேன்' செய்வதில் காவல்துறைக்கு உதவியாக இருப்பது.

பெண் சேவகர்கள் தோட்டத் துறைக்கு சென்று, கோவிலுக்கு தேவையான மாலைகள் தயாரிப்பதிலும், அலங்கார பூ கட்டுவதிலும் உதவி செய்யலாம். இப்படி, பல துறைகள் இருப்பினும், அவரவருக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து, சேவை புரியலாம். தங்கள் வசதிக்கேற்றபடி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

சேவையின் போது பல சுவாரசியமான சம்பவங்களையும் சந்திக்கலாம். தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் பொருட்களை, வைகுண்டம் காம்ப்ளக்சில், 'ஸ்கேன்' செய்யும் இடத்தில் நான் உதவியாக இருந்த போது, கிடைத்த அனுபவம் வேடிக்கையாக இருந்தது. ஒரு கிராமவாசியின் மூட்டையை பரிசோதனைக்கு உள்ளே அனுப்பினால், ஒன்றரை அடி நீளமுள்ள பெரிய கத்தி இருப்பது கம்ப்யூட்டரில் தெரிந்தது. கேட்டதற்கு, 'பழம், தேங்காய் நறுக்க தேவை...' என்று அடம் பிடித்தார். காவல் துறையினர் அதை எடுத்த பிறகு அனுப்பினர்.

இன்னொருவர், தலையில் முண்டாசுடன், இரு பிள்ளைகள், மனைவியுடன் வந்தவரின் பெரிய பையில், தன் குடும்பத்தினரின், நான்கு ஜோடி செருப்புகளை உள்ளே திணித்து வைத்திருந்தனர். அதை வெளிய எடுத்து போட வைப்பதற்குள் பெரிய பஞ்சாயத்து தான்.

இதை விட, பட்டதாரி தம்பதியர் தோற்றம். அவரது கைப்பையை, 'ஸ்கேன்' செய்ததில், உள்ளே இரண்டு மொபைல் போன் இருப்பது கம்ப்யூட்டரில் தெளிவாக தெரிந்தது. (கோவிலுக்குள் மொபைல் போன் அனுமதி இல்லை என்பது தெரிந்ததே). ஆனால், அவர்கள் போன் எதுவும் இல்லை என்று மறுத்து, வாதம் செய்தனர். கடைசியில், ஒருவாறாக அதிகாரி சிரித்தவாறே, 'போன் இருந்தால் நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?' என்றவுடன், கணவன் - மனைவி இருவரும், திருதிருவென விழித்து, பையை திறந்து, போனை எடுத்து, வெளியில் உள்ள லாக்கரில் சேர்த்தனர். இதை, முதலிலேயே செய்திருக்கலாமே! இதனால், வீண் கால தாமதம். இப்படி, பல சம்பவங்களை கூறலாம்.

வருடா வருடம் மதுரையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்களை அழைத்துச் சென்று, ஸ்ரீவாரி சேவையில் பங்கு பெறும் குழு தலைவர் ஏ.எஸ்.ராம்லால் கூறுகிறார்:

ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறுநாள், பலதரப்பட்ட மக்களோடு திருமலை செல்கிறோம். இச்சேவையில் பங்கு கொள்வதன் மூலம் ஓர் உற்சாகமான தெய்வீக அனுபவத்தை உணர முடியும். ஒவ்வொரு ஆண்டும் சேவை செய்ய வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் குழுத் தலைவராக இருந்து அழைத்து வரலாம். ஏழு தினங்கள் சேவை. சொந்த ஊரிலிருந்து புறப்பட, திரும்ப இரண்டு தினம், ஆக மொத்தம், ஒன்பது நாட்கள். வழக்கமான வேலைகள் மற்றும் அவரவருக்கு உள்ள பிரச்னைகளை எல்லாம் மறந்து, திருமலையில் இருக்கும் காலம் மிக மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது.

திருமலைக்கு சென்று சேவை முடிந்து திரும்பும் பக்தர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு உள்ளதை, காண முடிகிறது என்றார்.

என்ன... நீங்களும் ஸ்ரீவாரி சேவைக்கு தயாராகி விட்டீர்களா? இது சம்பந்தமாக மேற்கொண்டு தகவல்களுக்கு, 98431 84179 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

***

மதுரை எஸ். எஸ். ராதாகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us