
தங்கமும், வெள்ளியும், பணமும் சுவாமிக்கு காணிக்கை கொடுத்து வழிபட்டிருப்பீர்கள். கடல் மணலை கொடுத்து, வழிபடுவதைப் பார்த்திருக்கிறீர்களா...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள, உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தான், இந்த அதிசய வழிபாடு நடக்கிறது.
கூட்டப்பனை கிராமத்திலிருந்து ஒருவர், பால் விற்க தினமும், உவரி வழியாக செல்வார். தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். அந்த இடத்தில் கடம்ப மரத்தின் வேர் இருந்தது. அதுவே, காலை இடறி விடுகிறது என்பதால், வேரை வெட்டினார். அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது.
வியாபாரி அதிர்ச்சியடைய அப்போது, அசரீரி ஒலித்தது. 'சிவனாகி நான், இந்த இடத்தில் குடி கொண்டிருக்கிறேன். எனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்து...' என்றது.
பெரிய அளவில் வசதியில்லாதவர், பக்தர். தன் தகுதிக்கு ஏற்ப, பனை ஓலை கூரை அமைத்து, கோவில் கட்டினார். அங்கு சுயம்புவாக ஒரு லிங்கமும் எழுந்தது. 'சுயம்பு' என்றால் 'தானாக தோன்றுவது..'. எனவே, சுவாமிக்கும், சுயம்புலிங்கநாதர் என, பெயர் சூட்டப்பட்டது. அம்பாளை பிரம்ம சக்தி என்பர்.
இந்நிலையில், பக்தர்கள் ஏராளமாக அங்கு வந்தனர். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறின, இதை அடுத்து, அக்கோவில் பெரிதாக உருவானது.
இது, ஒரு கடற்கரை கோவில். நோய்கள் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, கடலில் நீராடி, சுயம்புலிங்க நாதரை வணங்குவர். பணமிருந்தும் மன அமைதி இல்லாதவர்கள், இத்தலத்துக்கு வந்தால், நிம்மதி கிடைக்கும்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால், கடற்கரை மணலை, 11 அல்லது 41 ஓலைப் பெட்டிகளில் சுமந்து, கோவில் முன் கொட்டுகின்றனர்.
பக்தர்களின் கஷ்டங்கள் கடல் மணல் போல் உதிரியாகப் போய்விடும் என்பது, நம்பிக்கை. மார்கழி மாதம், 30 நாளும், காலை நேரத்தில் சுயம்புலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். கடல் ஓரத்தில் உள்ள நான்கு ஊற்றுகளிலும் நல்ல தண்ணீர் உள்ளது. சுவாமியின் அபிஷேக நீர் இதுவே.
தை மாதத்தில் பூசம், அமாவாசை விசேஷம். வைகாசி விசாக விழாவில், மகர மீனுக்கு சுவாமி காட்சி தருவார். தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகள், பங்கு - உத்திரம், ஆடி - அமாவாசை, மார்கழி - திருவாதிரை, கார்த்திகை - தீப நாட்களில் விசேஷ பூஜை நடக்கும்.
இந்த கோவிலில், 108 அடி உயரத்திற்கு ஒன்பது நிலை ராஜ கோபுரம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது.
திருநெல்வேலியிலிருந்து நாங்குநேரி, திசையன்விளை வழியாக, 70 கி.மீ. தூரத்திலும், திருசெந்தூரில் இருந்து, 42 கி.மீ. தூரத்திலும், உவரி உள்ளது. தொடர்பு எண்: 94437 22885
தி. செல்லப்பா

