
வினை விதைத்தவன்...
சமீபத்தில், உறவினர் ஒருவரை சந்தித்தேன். தற்சமயம், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். அவருடைய பெண் மற்றும் பையன் இருவரும், முன்னாள் மனைவியுடன் வசித்து வருகின்றனர்.
தன் பெண்ணை சந்திக்க முயன்றதாகவும்... ஆனால், அவள், முகம் கொடுத்து பேச மறுப்பதாகவும், அலைபேசியில் தொடர்பு கொண்டால், 'பேச விருப்பமில்லை...' என்று, இணைப்பை துண்டித்து விடுவதாகவும் புலம்பினார்.
இதே உறவினர், சில ஆண்டுகளுக்கு முன், முதல் பெண் குழந்தை பிறந்தபோது, தன் குடியே மூழ்கி விட்டது போல், உறவினர்களிடம் கூறினார்.
'பொட்டபுள்ள பொறந்துருச்சு... இனி எல்லாம் செலவு தான்... முதல் குழந்தையே, 'நெகடீவ்' (பெண் பிள்ளையை குறிக்கும் சொல், ஆண் என்றால், 'பாசிடீவ்') ஆகிப் போச்சு...' என்று புலம்புவார். அக்குழந்தையை அன்பாக துாக்கி கொஞ்சவோ, அரவணைத்துக் கொள்ளவோ செய்ததில்லை. பெண் குழந்தையை பெற்றதால், மனைவியிடமும் பாராமுகம் காட்டினார்.
அப்போது, அவருக்கு நாங்கள் எடுத்துக் கூறிய அறிவுரைகள், விழலுக்கு இறைத்த நீரானது.
என் உறவினர், விதைத்த வினையை தான், இன்று அறுவடை செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் மனைவியும், மகளும் அவரிடமிருந்து தப்பித்து கொண்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இனிமேலாவது, ஆண் அகம்பாவர்கள் திருந்துவரா!
— சக்தி.எஸ்.சுதர்சன், பெங்களூரு.
ஏமாற்று பேர்வழிகள் ஜாக்கிரதை!
தோழியின் மகன், சென்னையில், ஒரு பிரபல பள்ளியில் படிக்கிறான். மாணவனின் வகுப்பில் படிக்கும் பெற்றோர் அனைவரும், 'வாட்ஸ் ஆப் குரூப்' உருவாக்கி, அப்பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வர்.
இதனால், குழந்தைகளின் பெற்றோருக்கு, இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அன்றாடம் ஆசிரியர் சொல்லும் தகவல்கள், போட்டிகள் அனைத்தும் பகிரப்பட்டு, மிகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, அவர்கள் வகுப்பு, அனைத்து போட்டிகளிலும் முதல் இடத்தை பெற்று வந்தது.
வேறு பள்ளியிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த மாணவனின் பெற்றோரும், இந்தாண்டு, குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டனர். அப்புதிய மாணவனின் அம்மா, தோழிக்கு, 'மெசேஜ்' அனுப்பி, நிறைய சந்தேகம் கேட்பார்.
உதவும் குணம், நீங்கள் மிகவும் புத்திசாலி என்று, அவரை புகழ்ந்து கொண்டே இருப்பார். நாளடைவில் இருவரும், அந்தரங்கம் மற்றும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒன்றி விட்டனர். பின், ஆண்டு விழாவில் சந்திக்கலாம் என்று, அவர்கள் பேசிக் கொண்டனர்.
ஆண்டு விழாவிற்கு கணவர் மட்டுமே வந்தார். விசாரித்ததில், 'என் மனைவிக்கு உடம்பு சரியில்லை... அவரால் வர முடியவில்லை...' என்று கூற, தோழிக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. மறுநாள் போன் செய்து, 'நான் நேரில் வந்து பார்க்கிறேன்...' என்றாள்.
அதற்கு அவளோ, 'என் மாமியார் மிகவும் கொடுமைக்காரர். என் சம்பந்தப்பட்டவர் யாராவது வந்தால், அவர்களை மனம் நோகும்படி பேசுவார். ஆதலால், வரவேண்டாம்...' என்று, மறுத்து விட்டார்.
சந்தேகம் ஏற்பட, அவர்கள் ஏரியாவில் வசிக்கும் இன்னொரு மாணவனின் பெற்றோரை விசாரித்தபோது, அவனது அம்மா, கிராமத்துவாசி என்றும், அந்த அளவுக்கு படிப்பறிவோ, மொபைல் போனை உபயோகப்படுத்த தெரியாதவர் என்றும் தெரிய வந்தது.
அவரின் கணவர் தான், 'மெசேஜ்' அனுப்பியதும் மற்றும் குரலை மாற்றி பேசிய ஏமாற்று பேர் வழி என்று தெரிந்ததும், சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு சென்று, நேரில் அவரை வெளுத்து வாங்கி விட்டார்.
தாய்மார்களே... 'குரூப்'பில் நமக்கு யார், 'மெசேஜ்' செய்கின்றனர் என, தெரிந்து, உங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. இதுபோன்ற, 'சில்மிஷ' பேர்வழிகளிடம், உஷாராக இருங்கள்.
— பிரியா, சென்னை.
கழிப்பறையின் கதை!
'கழிப்பறை இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது...' என்று, மக்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது, மத்திய அரசு. வீடுகளில் கழிப்பறை கட்ட, மானியம் வழங்கி, உற்சாகமூட்டி வருகிறது. 'கழிப்பறை இல்லாத வீட்டைச் சேர்ந்த மணமகனுக்கு, கழுத்தை நீட்ட மாட்டேன்...' என்று பெண்களும் ஆவேசக் குரல் எழுப்ப துவங்கி விட்டனர்.
இது ஒரு வகையில் மகிழ்ச்சியை வரவழைத்தாலும், நேரில் சந்தித்த சம்பவம், என் நெஞ்சை நெருடச் செய்தது.
சமீபத்தில், தொழில் நிமித்தமாக ஆந்திர மாநிலம் சென்றிருந்தேன். மத்திய அரசு பணியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்க நேர்ந்தது. அது ஒரு, அரசு குடியிருப்பு.
மறுநாள் காலை, இயற்கை அழைப்பை நிவர்த்திக்க முனைந்தபோது, இரண்டு கைகளிலும் சொம்பில் தண்ணீர் எடுத்து, 'வா... வெளியே போகலாம்...' என்றார், நண்பர். 'என்னப்பா இது... அரசு குடியிருப்புல, 'டாய்லெட்' இல்லையா?' என்றேன். 'இருக்கு... ஆனா, குடியிருப்பில் உள்ளோர் யாரும் அதை உபயோகிப்பதில்லை...' என்று, 'திகில்' கிளப்பினார்.
தொடர்ந்து அவரே, 'அட... ஆமாம்ப்பா... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்றா மாதிரி, இங்குள்ளோருக்கு, வெட்ட வெளியை உபயோகப்படுத்தியே பழக்கம் ஆயிடுச்சு... குடியிருப்புல இருக்குற, 'டாய்லெட்'டை சிலர், குளிக்கவோ, குடோன் மற்றும் 'ஸ்டோர் ரூமாக' உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க...' என, மேலும் மிரள வைத்தார்.
அரசு, என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பகீரத பிரயத்தனம் மேற்கொண்டாலும், கண்ணை இறுக மூடி, திறக்கவே மாட்டோம் எனும் மனோபாவம், மக்களிடம் இருந்தால், யாரால் என்ன செய்ய முடியும்?
—வா.தமிழ்ச்செல்வன், சென்னை.

