
ஏவி.எம். நிறுவனம் தயாரித்து நீலகண்டன் இயக்குவதாக இருந்து, பின், அவர் விலகியதும் அவருக்கு பதிலாக, இயக்குனர் பொறுப்பை, எம்.வி.ராமனும், திரைக்கதையை மாற்றி அமைக்கும் பணியை, ஜாவர் சீதாராமனும் ஏற்றுக் கொண்டனர். ஏற்கனவே உள்ள நடிகர்களை வைத்து, படப்பிடிப்பு துவங்கியது.
இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகையில், கே.ஆர்.ராமசாமி, ஒரு முதலையுடன் சண்டை போடுவது போல, உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்டது.
இந்த காட்சியை படமாக்க, பெரிய நீச்சல் தொட்டி அமைக்கப்பட்டு, அதில், ஒரு முதலை விடப்பட்டது. தினமும் அதற்கு உணவாக, மாமிசம் போட்டு வளர்க்கப்பட்டது. அதற்கு பயிற்சியளிக்க, கரையான் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அவர் சொன்ன மாதிரியே சிலவற்றை அந்த முதலை செய்யும். சகல பாதுகாப்புடன் தொட்டியில் இறங்கி, முதலையுடன் சண்டைக் காட்சியில் நடித்தார், நடிகர், கே.ஆர்.ராமசாமி.
தொட்டியை சுற்றி நான்கு பக்கமும் கண்ணாடிகள் அமைத்து, மூன்று கேமராக்களில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. உச்சகட்ட காட்சி, பிரமாண்டமாக அமைந்தது.
இவ்வளவு சிரமப்பட்டு கதையை மாற்றி, இயக்குனரை மாற்றி, இரண்டு முறை எடுக்கப்பட்ட, செல்லப்பிள்ளை படம், 1955ல் திரைக்கு வந்து, சுமாராகவே ஓடியது.
இந்தியில், 'ஹம் பஞ்ச் ஏக் தால்கே' என்றால், 'நாம் எல்லாரும் ஒரு மரத்து பறவைகள்' என்பது பொருள்.
'முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து, யார் சிறப்பாக படம் எடுக்கின்றனரோ, அந்த படத்தை அகில இந்திய அளவில் தேர்வு செய்து, 'தங்கப் பதக்கம்' வழங்கப்படும்...' என்று அறிவித்திருந்தார், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு.
பிரதமர் நேரு மீது, மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார், அப்பா.
'குழந்தைகளை வைத்து படம் எடுத்து, அந்த பரிசை நாம் பெற வேண்டும். அதன் பெருமை, ஏவி.எம்., நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டும்...' என்று ஆவல் கொண்டார்.
அக்காலத்தில், இந்தியில், காதல் கதை படங்களை எடுத்து வெற்றி கண்ட, பி.எல்.சந்தோஷி என்ற இயக்குனரின் அறிமுகம், அப்பாவுக்கு கிடைத்தது. அவரது படங்களில், பாடல்கள் சிறப்பாக இருக்கும். அந்த பாடல்களுக்காகவே படங்கள் ஓடும்.
அவரை சந்தித்து, 'குழந்தைகளை வைத்து, சிறந்த படமொன்றை தயாரிக்க வேண்டும்...' என்று, தன் விருப்பத்தை தெரிவித்தார், அப்பா.
'இதுவரை, அப்படி ஒரு படம் நான் இயக்கியதில்லை. இருந்தாலும், நீங்கள் விருப்பப்படுவதால் முயற்சி செய்கிறேன்...' என்று ஒப்புக்கொண்டவர், 'ஹம் பஞ்ச் ஏக் தால்கே' என்ற,
கே.என்.நாராயணன் எழுதிய கதையை, இரண்டு மாதத்தில் தயார் செய்து, என் அப்பாவிடம் சொன்னார்.
இயக்குனரிடம், கதை பிடித்திருந்தாலும், 'இந்த கதையை, படமாக எடுத்தால், விருது கிடைக்குமா...' என, கேட்டார்.
'அது, என் கையில் இல்லை. முயற்சி செய்து பார்க்கலாம்...' என்றார், இயக்குனர்.
குழந்தை நட்சத்திரங்களான பேபி டெய்சி ராணி, மாஸ்டர் ஜெகதீபுடன், வேறு சில குழந்தைகளும் படத்தில் நடிக்க தேர்வாயினர். படப்பிடிப்பு துவங்கி, விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில், தமிழில், சாவித்திரி நடிப்பில், வெளிவந்து வெற்றி கண்ட, மிஸ்ஸியம்மா படத்தை, இந்தியில், மிஸ் மேரி என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருந்தோம். சாவித்திரி நடித்த வேடத்தில், மீனா குமாரி நடிக்க, எல்.வி.பிரசாத் இயக்கினார்.
குழந்தைகள் படத்திற்கும், மிஸ் மேரி படத்திற்கும், ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது, 'மிஸ் மேரி படம், நான் இயக்க வேண்டிய படம். காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் சிறப்பாக எடுத்து பெயர் வாங்கிய என்னை, குழந்தைகள் படத்தை இயக்க சொல்லி விட்டார், உங்கள் அப்பா. குழந்தைகளை வைத்து இயக்க வேண்டிய, எல்.வி.பிரசாத்தை, காதல் படத்தை இயக்க சொல்லி விட்டாரே...' என, என்னிடம் சொல்லி, வருத்தப்பட்டார், பி.எல்.சந்தோஷி.
குழந்தைகள் படம் நல்லமுறையில் எடுக்கப்பட்டு, வட மாநிலங்களில் வெளியானது. 'ஓகோ...' என்று ஓடவில்லை என்றாலும், சுமாரான வெற்றி படமாக அமைந்தது.
பிரதமர் நேரு அறிவித்தபடி, சிறந்த குழந்தை படங்களுக்கான, விருது கொடுப்பதற்கான படங்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு, ஏவி.எம்., படம், ஹம் பஞ்ச் ஏக் தால்கே சென்றது.
இந்தியா முழுவதிலிருந்தும் வந்த படங்களை பார்த்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, நாங்கள் தயாரித்த படம் பிடித்து விட்டது. அதனால், ஹம் பஞ்ச் ஏக் தால்கே படம் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அப்பரிந்துரையை கண்ணுற்ற பிரதமர் நேரு, படத்தை பார்க்க ஆசைப்பட்டார். உடனே, ஹம் பஞ்ச் ஏக் தால்கே படத்தை, திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த பிரதமருக்கும் பிடித்து விட்டது. விருது கொடுக்க முடிவு செய்தார்.
குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட, ஹம் பஞ்ச் ஏக் தால்கே படத்திற்கு, 1957ல், பிரதமர் நேரு முன்னிலையில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடமிருந்து, தங்கப்பதக்கமும், விருதும் பெற்றார், அப்பா.
இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், அதில் நடித்த குழந்தைகளுக்கும் விருந்து கொடுக்க விரும்பினார், நேரு.
மறுநாள் காலை, சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடானது. பிரதமர் நேருவுடன், அப்பா அமர்ந்திருக்க, எல்லா குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக விருந்து உண்டனர்.
அப்போது, 'உங்கள் படம், மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு நல்ல பாடமாக அமையும்படி, அவர்களை வைத்தே படம் செய்ய வேண்டும் என்று, நான் விடுத்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, நீங்கள் செய்த முயற்சிக்கு நன்றி. இதேபோன்று இன்னும் பல நல்ல படங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...' என, நேரு சொல்ல, அளவற்ற மகிழ்ச்சியடைந்தார், அப்பா.
'குழந்தைகள் படத்தை இயக்க செய்து விட்டாரே, உங்கள் அப்பா என்று அப்போது வருத்தப்பட்டேன். ஆனால், இன்று நான் இயக்கிய படம், 'அகில இந்திய அளவில் சிறந்த படம்' என்று விருது பெற்றிருப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது. அதற்கு காரணம், உங்கள் அப்பா தான்...' என்று மகிழ்ச்சியுடன் கூறினார், இயக்குனர், பி.எல்.சந்தோஷி.
— தொடரும்
ஏவி.எம்.குமரன்

