sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 13, 2019

Google News

PUBLISHED ON : ஜன 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்னுடைய நீண்ட நாள் வாசகர் அவர், அரசின் உயர் பதவியில் உள்ளவர்; ஆனால், சந்தித்தது இல்லை. அவரும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவரும், என்னை சந்திக்க விரும்புகின்றனர் என, எழுத்தாளரும், அரசு உயர் பதவியில் இருப்பவருமான, ஜே.டி.ரவி கூறினார்.

ஓட்டல் ஒன்றில் சந்திக்க, முடிவானது.

லென்ஸ் மாமாவும், எழுத்தாளர், ஜே.டி.ஆரும் உடன் இருக்க, அவர்களை சந்தித்து பேசினேன்.

'இவர், உங்கள் தீவிர வாசகர். பா.கே.ப., பகுதியையும், அந்துமணி பதில்கள் பகுதியையும், பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வருகிறார்.

'சுய முன்னேற்றம் குறித்த வாசகர்களின் கேள்விகளை படித்துவிட்டு, அதற்கான பதில் என்னவாக இருக்கும் என, யோசிப்பதும், பின், அக்கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள் என, படிப்பதும், இவர் பாணி...' என, அந்த அதிகாரியை என்னிடம் அறிமுகப்படுத்தினார், ஜே.டி.ரவி!

நாங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே, குசல விசாரிப்புகளை முடித்து, 'நீங்க பேசிட்டிருங்க... நான் கொஞ்சம், 'ரிலாக்ஸ்' பண்ணிட்டு வந்திடுறேன்...' என, நாசூக்காக கூறி, அந்த ஓட்டலின், உ.பா., கூடம் நோக்கி நகர்ந்து விட்டார், லென்ஸ் மாமா.

'அரசு உயர் அதிகாரி மற்றும் மருத்துவர் என, இருவேறு துறைகளை சேர்ந்த நீங்கள் இருவரும் நண்பர்கள். இதில், பணியை பொறுத்தவரை யாருக்கு முழுமையான திருப்தி உள்ளது?' என, வினவினேன்.

முதலில் மருத்துவர் பதில் சொன்னார்...

'மனிதனை, நோயின் பிடியிலிருந்து மீட்பதும், ஆரோக்கியமாக வாழ வைப்பதும், உயிரை காப்பதுமான தொழில் என்னுடையது. இதில், நிச்சயமாக நான் மன நிறைவை உணர்கிறேன். உயிர் காக்கும் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. அதன் புனிதத்தன்மை பாதிக்கப்படாமல், அதை செய்வதை விட, ஆத்மதிருப்தி வேறெதும் இல்லை...' என்றார்.

'உண்மைதானே...' என்று நினைத்து, நான் தலையசைத்தேன்.

'ஆனால், மருத்துவ தொழிலில் இப்போது வியாபார நோக்கம் ஊடுருவி வருகிறதே என்பதை மறுக்க முடியாதே...' என்றார், அரசு அதிகாரி.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த நான், அவரிடம் திரும்பினேன்...

'உங்கள் பணியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்றேன்.

'மருத்துவ தொழில், புனிதமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது, தனி மனிதனின் நலனுக்கானது. ஒரு மருத்துவர், தன்னை நாடி வரக்கூடிய நோயாளிக்கு செய்யும் சேவை.

'ஆனால், அரசின் உயர் பதவி என்பது, அப்படி அல்ல... அது, சமுதாயத்திற்கு செய்யும் பணி. கல்வித்துறை என்றால், மாணவர் சமுதாயத்திற்கு... மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்றால், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு... இப்படி ஒரு சமூகத்தின் பிரிவினர் அனைவருக்கும் என, செய்யப்படும் பணி.

'இதில், ஏதோ ஒரு மட்டத்தில், அரசியல் இருந்தாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தபிரிவுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை தீட்டுவதிலும், செயல்படுவதிலும், அதை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதிலும், நான் ஆத்மதிருப்தியை உணரவே செய்கிறேன்...' என்றார்.

'செய்யும் பணி எதுவாக இருந்தாலும், அதை முழுமையான ஈடுபாட்டோடும், நேர்மையோடும் செய்தால், அதுவே ஆத்ம திருப்தி...' என, நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, உ.பா., கூடத்தில், தன் பணியை செவ்வனே முடித்துவிட்டு வந்தார், லென்ஸ் மாமா.

'இந்த ஓட்டல், முன்ன மாதிரி இல்ல மணி. நான் என்னோட, 'பிராண்ட்'டை கேட்டால், 'பேரர்' அதை காதில் வாங்காமல் போய், 'மெனு கார்டை' எடுத்து வந்து நீட்டுறான். 'ஸீ மெனு கார்டு சார்... வாட் யூ வான்ட்... ஷோ மீ சார்... எஸ் சார்...'ன்னு திரும்ப திரும்ப சொல்றான். அப்புறம் தான் தெரிஞ்சது, வடக்கத்தி பையன். அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு...' என்றார் சலிப்பாக.

'வட மாநில இளைஞர்களை பணி அமர்த்துவதில், பல சவுகர்யங்கள் இருப்பதாக, சில நிறுவனங்கள் கருதுகின்றன. பணியாளர்கள் தங்கும் அறையில் அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அதனால், நேர காலம் பார்க்காமல் வேலை செய்வர். எந்த கட்சியிலோ, தொழிற்சங்கத்திலோ சேர்ந்து, நிர்வாகத்துக்கு எதிராக கொடி பிடிக்கும் வாய்ப்பு இல்லை.

'மாமாவுக்கு கல்யாணம், மச்சினிக்கு வளைகாப்பு, பாட்டி செத்துப் போச்சுன்னு லீவு போட மாட்டார்கள். வேலையை விட்டு அனுப்பி விட்டால், புது வேலை தேடுவது கடினம் என நினைத்து, நிர்வாகத்துக்கு விசுவாசமாக இருப்பர் என்றெல்லாம் நிறுவனங்கள் கருதுகின்றன... அதனாலேயே, வட மாநில இளைஞர்களை கீழ்மட்ட பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதில், சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன...' என்றேன்.

தலையசைத்து, ஆமோதித்தனர், சபையினர்.

'நிறுவனங்களில் இளைய தலைமுறையினர், நிர்வாக பொறுப்பிற்கு வரும்போது, சில மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான்... இந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட தொழிலின் முன்னேற்றத்துக்கு உதவுவதும் உண்டு. வாரிசுகளை நிர்வாகத்திற்கு பழக்கும் தொழிலதிபர்கள் பலரும், 'என்னை விட என் பையன் சிறப்பாக செயல்படுகிறான்...' என, பெருமைப்படுவதை பார்த்திருக்கிறேன்...' என்றேன்.

'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழி இருக்கிறதே...' என்றார், அதுவரை எங்கள் உரையாடலை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த, ஜே.டி.ஆர்.,

'எனக்கு இதில் ஒரு சந்தேகம் என்றுமே உண்டு. மகனை தொழிலில் அறிமுகப்படுத்தி, அவன் திறமையை கண்டு பெருமைப்படுவது, தந்தையாக இருக்கும்போது, பழமொழியில் ஏன் தாயை முன்னிலைப்படுத்தி இருக்காங்க; தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்று தானே பழமொழி இருக்க வேண்டும்...' என்று சந்தேகம் கேட்டார், லென்ஸ் மாமா.

'எனக்கு தோன்றுவதை சொல்றேன். அது, சரியா - தவறா என்றெல்லாம் எனக்கு தெரியாது...' என்று பீடிகை போட்ட அரசு அதிகாரி, 'இந்த பழமொழி, விலங்கினங்களை உவமானமாக வைத்து சொல்லப்படுவது. விலங்கினங்களை பொறுத்தவரை, குட்டியை ஈன்றெடுப்பது, பாலுாட்டி வளர்ப்பது, அதற்கு வாழும் முறைகளை கற்றுக்கொடுப்பது எல்லாமே, தாய் விலங்குகள் தான்.

'ஆண் விலங்குகள், சோம்பேறிகள். பெண்ணோடு இணை சேர்ந்து இனப்பெருக்கம் செய்வதோடு, அவை பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றன. ஒரு சிங்க குட்டிக்கு, அதன் தாய் சிங்கம் தான், வேட்டையாட கற்றுக் கொடுக்கும்.

'ஒரு புலி குட்டிக்கு, அதன் தாய் புலி தான் பதுங்கவும், பாயவும் கற்றுக்கொடுக்கும். இதனால் தான், தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழி உருவாகி இருக்கும்...' என்று முடித்தார்.

அவர் சொன்ன கருத்து ஒப்புக்கொள்ளக் கூடியதா அல்லது வேறு கருத்து ஏதாவது இருக்கிறதா... வாசகர்கள் எனக்கு எழுதலாமே!






      Dinamalar
      Follow us