PUBLISHED ON : மார் 13, 2022

இறுமாப்பு தாளவில்லை; நேர்த்தியாக உடையணிந்து தயாரானாள், ஜானகியம்மாள். இன்று, பள்ளி ஆண்டு விழாவில், அவளுக்கு, சிறந்த ஆசிரியை விருது வழங்கி, பணி நிறைவு விழாவும் கொண்டாடப்பட இருக்கிறது.
தான் உரையாற்ற வேண்டிய பக்கங்களை சரி பார்த்தாள், ஜானகியம்மாள்.
'சிறந்த ஆசிரியை, 32 ஆண்டு சேவை; என் திறமையால் உயர்வு; பள்ளி முதல்வராக மட்டும், 20 ஆண்டுகள்; என்னிடம் படித்த மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், வக்கீல் என, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில்...
'என் அனுபவம், கண்டிப்பு; நான் கொடுக்கும் தண்டனையால் உயர்ந்த மாணவர்கள்; என்னை போல ஒரு ஆசிரியர்... என, எதையும் விட்டுவிடக் கூடாது...' என்று மனம் அடித்துக் கொண்டது.
'என் அளவுக்கு அங்க யாருக்கும் சர்வீஸ் இருந்ததில்லை. இனி இருப்பதும் சந்தேகம் தான். நான் தான் சூப்பர் ஸ்டார்...' என்று கண்ணாடியை நோக்கி தனக்குள் பேசினாள்.
ஆம்... வேலை பார்த்த அனைத்து பள்ளிகளிலும் சிறந்த பெயர் எடுத்தவள்.
''என்னம்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட, மாலை 6:00 மணிக்கு தானே விழா?'' என்று கேட்டான், மகன் சதீஷ்.
''சீக்கிரம் போகணும். நீ, 5:00 மணிக்கெல்லாம் வந்துரு. நானே தேர்ந்தெடுத்த பழைய மாணவர்கள், 15 பேரை பேச அழைச்சிருக்காங்க. பெரிய வேலைல இருக்காங்க; அதுல ஒருத்தி கலெக்டர். உன் நண்பன் சரத், பெரிய இன்ஜினியர், அவனும் வர்றான்.
''நீதான், நான் சொன்னதை கேக்காம எம்.இ., படிச்சு, சொற்ப சம்பளத்துக்கு பேராசிரியரா இருக்க; மாலை இலவச டியூஷன் வேற எடுக்கற... இரவும் பகலும் அந்த, 'சென்டர்'ல தான் இருக்க. லண்டன் வேலையையும் வேண்டாம்ன்னு சொல்லிட்ட, இல்லன்னா இந்நேரம்...''
''இந்நேரம் அங்க நல்லா மாட்டிட்டு இருப்பேன். சீக்கிரம் வாம்மா, எனக்கு சிறப்பு வகுப்பு இருக்கு,'' வெடுக்கென சொல்லி நகர்ந்தான்.
''ஆமா, நீ கூடுதல் வகுப்பு வச்சு சொல்லி கொடுத்தா, அவங்க சிறந்த இன்ஜினியர் ஆயிடுவாங்க. இங்க வந்தாங்களே... ஒண்ணும் சொல்ல தெரியல,'' என்றாள்.
''அம்மா, அவங்களுக்கு செய்முறை அறிவு இருக்கு. ஆனா, எழுத தெரியல. பயிற்சி குடுத்தா முன்னேறிடுவாங்க. நான் பார்த்துக்கறேன். உன்ன பள்ளில விடணும்னா சீக்கிரம் வா,'' என்றான்.
''இவனுக்கும் போய் பாடம் நடத்தினேனே,'' என்று சலித்துக் கொண்டாள்.
சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, பள்ளி.
''வாங்க மேடம், இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?'' மலர்ச்சியுடன் வரவேற்றாள், 5ம் வகுப்பாசிரியை, மலர்விழி.
சைகையை மட்டும் பதிலாக அளித்தாள், ஜானகியம்மாள்.
''சிறப்பு விருந்தினருக்கான வரவேற்பை எழுதணும். ஒரு பெரிய தொழிலதிபர், 'சோஷியல் மீடியா'ல ரொம்ப புகழ்பெற்றவர். பெயர் கார்த்திகேயன், சிறந்த மனிதர். நிறைய...'' என, மலர்விழி முடிப்பதற்குள், ''சரி, வேலையை பாருங்க,'' நறுக்கென்று சொல்லி நகர்ந்தாள், ஜானகியம்மாள்.
மாலை, விழா நடைபெறும் அரங்கில், முன் வரிசையில் அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தாள், ஜானகியம்மாள்.
வலது புறம் பழைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தது, அவள் கண்கள்.
நிகழ்ச்சி நிரலை மீண்டும் பார்த்தாள்: முன்னாள் மாணவர்கள் பேசும் நேரம் - 6:30 - 7:30.
'அதற்குள் கண்டிப்பா வந்துடுவாங்க...' என, நினைத்துக் கொண்டாள்.
நிறைய குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
'வாழ்த்துக்கள் மேடம்... மன்னிச்சுடுங்க மிஸ்... பணிச்சுமையால் வர இயலவில்லை... கண்டிப்பாக வீட்டிற்கு வரேன்... சிறந்த ஆசிரியை நீங்க தான்...' என, இன்னும் பல.
அவள் கண்கள் பனித்தன.
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவள், 'பேண்ட்' வாத்தியத்தின் சத்தத்தில் நிமிர்ந்தாள். துாரத்தில் சிறப்பு விருந்தினரின் கார் வந்தது.
மாநிறம், வசீகரமான தோற்றம், கட்டுகோப்பான உடல், சாதாரண உயரம், 30- - 35 வயது தான் இருக்கும். சரியான நேரத்திற்கு வந்தான், கார்த்திகேயன்.
மாணவர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. சிலர், ஓடிச்சென்று அவனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல திசையிலிருந்து ஓடி வந்து மாணவர்களை கட்டுப்படுத்தினர், ஆசிரியர்கள்.
''நான் போறப்போ புகைப்படம் எடுத்துக்கலாம்,'' என்று பணிவுடன் கூறி, மேடை ஏறினான், கார்த்திகேயன்.
''எல்லாருக்கும் வணக்கம்.''
மாணவர்களின் ஆரவாரம் காதை பிளந்தது. எழுந்து நின்று, கைத்தட்டி வரவேற்றனர்.
பேச்சை தொடர்ந்தான், கார்த்திகேயன்:
ரொம்ப சந்தோஷம். பேசறதுக்கு எதுவும் படிச்சிட்டு வரலை. என்னைப் பற்றியும், பள்ளி அனுபவங்களை பற்றியும் சொல்றேன். கலந்துரையாடுவோம். என்னிடம் கேட்க விரும்புவதை கேட்கலாம்.
முதலில், இதற்கு முன் பரிசு பெற்ற எல்லா மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். வாழ்வின் மிக முக்கியமான விஷயம், பாராட்டு. அதை ஊக்கமா எடுத்து, நீங்க வாழ்வில் மென்மேலும் வெற்றி பெறணும். கிடைக்காதவங்க ஏங்க கூடாது.
வெற்றியை ஊக்கமாகவும், தோல்வியை பாடமாகவும் எடுத்துக்கோங்க. உங்கள் திறமை எது என்று தேர்ந்தெடுத்து, அதுல முயற்சி செய்து, இந்த உலகத்துக்கு நிரூபிக்கணும்.
ஜெயிச்சவன மட்டுமே ஊக்குவிக்கும் ஒரு வினோதமான உலகத்துல தான், நாம இருக்கோம். அவனுக்கு அவன் வெற்றியே ஊக்கம் தான்; அது பலருக்கு புரியல, பரவாயில்லை.
வெற்றிக்குப் பாராட்டோ, தோல்விக்கு ஊக்கமோ கிடைக்கலைன்னு வருத்தப்படாதீங்க. அதை முதலில் செய்பவர் நீங்களா இருங்க; உங்களுக்கும் சரி, மத்தவங்களுக்கும் சரி; வெளில தேடாம, உங்களுக்குள்ள தேடுங்க.
ஆசிரியர்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன்... புறக்கணிப்பு, ஒரு கொடூரமான விஷயம். நானும் நிறைய சந்திச்சிருக்கேன். 'நீ எதுக்குப் படிக்க வர... மக்கு'ன்னு, என்னைப் பார்த்து என் ஆசிரியர்களே கேட்டிருக்காங்க.
'எதற்கும் லாயக்கில்லாதவன்' என்று கூறும்போது, மிகவும் பயமாக இருக்கும். 'நாம ஏன் பிறந்தோம்'ன்னு நினைச்சிருக்கேன். ஆனா, 'நாம பிறந்ததற்கு காரணம் இருக்கு. கண்டிப்பா சிறந்த ஒரு மனிதனா வருவோம்'ன்னு எனக்கு நானே தட்டிக் கொடுத்துப்பேன்.
ஒரு குழந்தையை, ஒரு மனிதனா தான் பார்க்கணும். படிக்கிறவன், படிக்காதவன், திறமையானவன், திறமையற்றவன் என்று அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமலேயே வகைப் படுத்துகின்றனர்.
ஒரு குழந்தையின் மனதில் பிரிவினை விதைக்கப்படும் ஆரம்பம், அதுதான். நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படும். தாழ்ந்தவனாக நினைப்பவனை ஒதுக்க துவங்குகிறான், அவன். அதுமட்டுமின்றி, அதற்கேற்ற நட்பு வட்டாரங்கள் உருவாகிறது. ஒடுக்குமுறை, உயர்வு, தாழ்வு எல்லாம் பழக துவங்குகிறான்.
இதே இடத்தில், ஆசிரியர்கள், மாணவர்களிடம் சமத்துவத்தை கொண்டு வர முடியும். ஏதோ ஒன்றில் ஒவ்வொருவரும் சிறந்தவர்கள் என்பதை உணர்த்தும்போது, நீங்கள், அந்த குழந்தையின், ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தையே உயர்த்துகிறீர்கள்.
ஆசிரியர்களே... நீங்க, சொல்லிக் குடுக்க மட்டும் வரல, ஒரு மனிதனின் வாழ்க்கையையே வடிவமைக்க தேர்ந்தெடுக்கபட்டவர்கள். உங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால், காப்பாற்றப்படுவது ஒரு சமுதாயம்.
மாணவர்களும் அப்படி தான்; ஆசிரியர்கள் சொல்படி நடக்க வேண்டும். பயமும், அன்பும் கலந்த மரியாதையைச் செலுத்த வேண்டும். பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும், அடுத்தபடியாக உங்கள் முன்னேற்றத்தை விரும்பும் ஒரே ஜீவன் ஆசிரியர்கள் தான். தன்னலமற்ற அவர்களது மனதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பட்டப் பெயர் வைப்பது, புறம் பேசுவது, எல்லாம் மிகப்பெரிய பாவம். அதை ஒரு போதும் செய்யாதீர்கள். சக மனிதனை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். யாரையும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று கூறாதீர்கள். அதிலும், ஒரு ஆசிரியர் அந்த வார்த்தையை கூறவே கூடாது.
சக மனிதனை புண்படுத்தும், அவன் திறமையை அழிக்கும் கொடூர செயலை யாரும் செய்யாதீர்கள். அவனை தவறான முடிவுகளுக்குத் தள்ள வேண்டாம். நான் அறிவுரை சொல்லவில்லை; ஒரு நண்பன், சக மனிதன் சொன்னதா நினைத்துக் கொள்ளுங்கள். தவறிருந்தா மன்னியுங்கள்.
மற்றொரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம். இப்போது நீங்கள் என்னுடன் உரையாடலாம். என்ன வேண்டுமானாலும் கேளுங்க, உங்க கருத்துக்களையும் சொல்லுங்க, என்று, தன் உரையை முடித்தான், கார்த்திகேயன்.
எல்லாரும் எழுந்து நின்று கைத்தட்டினர். மாணவர்கள் பலரிடமும் நம்பிக்கை தென்பட்டது. அங்கிருந்தவர்களும், சில ஆசிரியர்களும், யாருடைய தற்கொலை, வன்முறை, வேலையின்மை, முன்னேறாத வாழ்க்கைக்கும் தாங்கள் காரணமாயிருக்க கூடாதென்று நினைத்துக் கொண்டனர்.
ஆரவாரம் தணிந்தது.
மாணவர்கள் கலந்துரையாடத் துவங்கினர்.
ஜானகியம்மாளுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. இதயம் வேகமாக அடித்தது. மலர்விழியை சைகையில் அழைத்தாள்.
''சொல்லுங்க மேடம்.''
''யாரு இவன்... ஏதோ சொல்ல வந்தீங்களே...''
''பெரிய தொழிலதிபர் மேடம்.''
''என்ன தொழில்?''
''கே. என். பார்ம்ஸ் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் நிறைய கிளைகள் உள்ளன.''
''அப்படியா!''
''அதுமட்டுமில்லை, தன்னம்பிக்கை பேச்சாளர், சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக ஒரு அமைப்பு வெச்சிருக்கார். ஒரு ஆசிரமம் நடத்துகிறார்,'' அவனது முகநுால் பக்கத்தைக் காட்டினாள்.
அதிர்ந்தாள், ஜானகியம்மாள்.
அவள் பணியாற்றிய ஒரு பள்ளியின் பெயர், அதே ஆண்டு, அவள் தான் அவனுக்கு டி.சி., வழங்கிய முதல்வர்.
அதற்கு பின் பார்த்தது, அவளை உலுக்கியது.
எம்.பி.ஏ., படித்திருந்தான், அதுவும் இந்தியாவிலேயே சிறந்த பல்கலையில். ஒரு மாணவனைப் பற்றி தான் கணிப்பதே சரி என்று நினைக்கும் அவளுக்கு, அது ஒரு இடியாய் இருந்தது.
அவள் சிந்தனையில், 10ம் வகுப்பில் டி.சி., கொடுக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரைப் பார்த்து அழும் காட்சி வந்தது. பதறிப் போனாள்; வியர்த்தது.
'உங்கள் மகன் எதற்கும் லாயக்கில்லை; 10 மாடு வாங்கி கொடுங்க மேய்க்கட்டும்... மகளை கல்யாணம் பண்ணிக்குடுங்க, பாத்திரம் தேய்க்க தான் லாயக்கு...' அவள் டி.சி., குடுக்கும்போது சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
கலந்துரையாடலை கவனித்தாள், ஜானகியம்மாள்.
''சார், ஊக்கம் குறையும் வார்த்தைகளை எப்போதுமே கேட்கிறோம். ஆனால், எப்படி அதை புறக்கணித்து முன்னேறுவது,'' என்று கேள்வி எழுப்பினாள், ஒரு மாணவி.
''நீ படிக்கவே லாயக்கில்லை; மாடு மேய்க்கதான் லாயக்குன்னு
என்னை பார்த்து சொல்லிருக்காங்க. இப்போ என் பண்ணையில்,
500 மாடுகளுக்கு மேல் இருக்கு. எனக்கு கீழ, 200 பேர் வேலை பார்க்குறாங்க. ஆனால், அதுக்கு நான் எம்.பி.ஏ.,
முடிக்க வேண்டி இருந்தது,'' என்று கூறி சிரித்தான்.
எல்லாரும் சிரித்தனர்.
''சும்மா சொன்னேன். அந்த வார்த்தைகளில் அர்த்தம் இல்லைன்னு சொல்ல வந்தேன். அதெல்லாம், மனசுல எடுத்துக்காதீங்க.
10:00 மணிக்கு விமானம். நாம இன்னொரு நாள் சந்திக்கலாம். எனக்கு, நீங்க குறுஞ்செய்தி அனுப்பலாம். இணைந்திருப்போம். மிக்க மகிழ்ச்சி. ரொம்ப நன்றி!''
இன்னும் உயர பறக்க கிளம்பினான், கார்த்திகேயன்.
ஒரு முடிவுடன் எழுந்தாள், ஜானகியம்மாள்.
'விருதும் வேண்டாம், ஓய்வும் வேண்டாம். இதற்கு இன்னும் நேரமாகவில்லை. இனிமேதான் துவங்கணும்...' என, அழுத்தமாக நினைத்தாள்.
தன் மகனின் இலவச பயிற்சி மையத்தை நோக்கி நடந்தாள், ஜானகியம்மாள்.
ஸ்ருதி செல்லதுரை
