தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தப்பு!

தப்பு!

தப்பு!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன்னை வணங்கியவர்களுக்கு பதில் வணக்கம் கூறிய தயாநிதிக்கு, அவர்களை இதற்கு முன், எங்கோ பார்த்த நினைவாக இருந்தது.

அப்போது வேகமாக எதிர்பட்ட சின்னய்யா, ''தம்பி... உங்கள சந்திக்கணும்ன்னு சொன்னாங்க; அதான் உட்கார வெச்சேன். எனக்காக கொஞ்ச நேரம் அவங்க கூட பேசுங்க,'' என்றார்.

மூத்த பணியாளரான சின்னய்யா, இல்ல பொறுப்புகளில், தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். அதனால், அவர் வார்த்தையை மீற முடியாமல், அவர்களிருவரையும் அமரச் சொல்லி, தயாநிதியும் அமர்ந்தான்.

''ஐயா... என் பேரு தியாகராஜன்; இவங்க, என் மனைவி சாவித்திரி. உங்கள சந்திச்சு உதவி கேட்கலாம்ன்னு வந்திருக்கோம்,'' என்றார்.

அவர் சொன்ன பெயர்கள், தனக்கு ஏற்கனவே பரிச்சயமானது போல் தோன்றியது. ஆனாலும், புலப்படவில்லை.

''எங்கிருந்து வர்றீங்க... என்ன உதவி வேணும்?'' கேட்டான், தயாநிதி.

''நாங்க கூடுவாஞ்சேரியிலிருந்து வர்றோம். நான், ஏ.ஜி., ஆபீஸ்ல அக்கவுன்டன்டா இருந்தேன். இவங்க மெட்ரோ வாட்டர்ல வேலை செஞ்சாங்க. எனக்கு பூர்வீகம், சிதம்பரம் பக்கம்; இவங்க வடசென்னை, ரெண்டு பேரும் காதல் திருமணம் செய்துக்கிட்டோம்.''

ஏ.ஜி., ஆபீஸ், மெட்ரோ வாட்டர் என்ற பெயர்களும் மனதில் பதிந்த பெயர்களாகவே இருந்தன.

முதன் முறையாக அந்த பெண்மணி வாய் திறந்தாள்...

''நல்லபடியா போயிக்கிட்டு இருந்தது, எங்க வாழ்க்கை. ரெண்டு பேர் சம்பாதிக்கிறதுனால கையில அதிக பணப்புழக்கம். விரும்பியதையெல்லாம் வாங்கி அனுபவிச்சு வாழ்ந்தோம். எங்கள் சந்தோஷத்துக்கு அடையாளமாக, அழகான ஒரு மகன் பிறந்தான்.

''நல்லவிதமா இருந்த எங்க வாழ்க்கையில யார் கண்ணு பட்டதோ, புயல் வீச துவங்கிடுச்சு. அந்த புயல் தானே வீசல, நாங்களா உருவாக்கிட்டோம். இன்னும் சொல்லப் போனா... என்னால உருவாச்சுன்னே சொல்லலாம்.

''ஆரம்பத்தில் சாதாரணமா ஆரம்பிச்ச பிரச்னை, நாளுக்கு நாள் பெருசாகி ஒருத்தரையொருத்தர் விட்டு பிரியும் நிலை உருவாகிடுச்சு.

''என்னோட நச்சரிப்பு தாங்காம இவரு, விவாகரத்துக்கு சம்மதிச்சார். அப்பவும், சில நிபந்தனை போட்டேன்.

''அது, விவாகரத்துக்குப் பின், இவரு தான் மகனை வளர்க்கணும், ஏன்னா, என்ன கட்டிக்கப் போறவர், அவனை கொடுமைப்படுத்துவார். ஆனா, இவரை கட்டிக்கப் போறவளை, இவர் சமாளிக்க முடியும்ன்னு நினைச்சு, அந்த நிபந்தனையை போட்டேன். ஒத்துக்கிட்டார். அந்த அடிப்படையில பரஸ்பரம் பிரிஞ்சிட்டோம்,'' என்று சொல்லி அழத் துவங்கினாள்.

தன் மனைவியை தேற்றி, அவள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார், தியாகராஜன்...

''ஒரு ஆண்டு, நாங்க தனியா வாழ்ந்தோம்; என்னோட தான் இருந்தான், மகன். அந்த ஒரு ஆண்டும், காலையில் எழுந்து ஸ்கூல் கிளப்பி, சாயங்காலம் அவசர அவசரமாக வந்து, அவனை கூட்டிக்கிட்டு வந்து டியூஷன்ல விடுவேன்.

''ரெண்டு வேளை வீட்டுச் சாப்பாடு, ஒரு வேளை ஓட்டல் சாப்பாடுன்னு ஓட்டியும், என்னால அவனுக்கு ஈடு கொடுக்க முடியல. அடுத்த ஆண்டு, அவனை ஒரு பிரைவேட் ஹாஸ்டல்ல தங்க வெச்சேன்.

''என் மகனுக்கு பாடம் சொல்லித் தந்த டீச்சர் மேல காதல் ஏற்பட்டது. மகனோட எதிர்காலத்தை உத்தேசித்து, அவளை, 'அவாய்ட்' செய்ய பார்த்தேன், முடியல. இவ ஒரு நிபந்தனை விதிச்ச மாதிரி, அவளும் ஒரு நிபந்தனை விதிச்சா. மகனை விட்டுட்டு வரணும்ன்னு...'' என, முடிக்காமல் சில நிமிடம் அவர் அமைதி காக்க, அவனுள் படபடப்பு கூடியது.

''வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டேன். எப்படி அவனை விட்டுட்டு போறதுங்கற கலக்கம் இருந்தாலும், அவ மேல் இருந்த ஆர்வத்தால், ஒரு நாள் ஹாஸ்டல்ல வந்து மகனைப் பார்த்துட்டு, இரண்டு ஆண்டுகள், 'மெடிக்கல் லீவு' போட்டுட்டு, அவளை அழைச்சுக்கிட்டு ஊரை விட்டே போயிட்டேன்.''

சொல்லி முடித்து, கலங்கிய கண்களை துடைத்துக் கொள்ள, அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி குடி கொண்டது. தயாநிதிக்கு அனைத்தும் புரிபட, எழுந்து நின்றான்.

கதவோரம் நின்றிருந்த சின்னய்யா, நிலைமையை சமாளிக்கும் விதமாக, ''உங்க ரெண்டு பேருடைய ரெண்டாவது திருமண வாழ்வு நல்லா இருந்ததா?'' என்று, கேட்டார்.

''தப்பு செய்துட்டோம். இதை விட சிறப்பா இருக்கும்ன்னு நினைச்சு, இதைவிட மோசமானதில் மாட்டிக்கிட்டோம். இவரை கல்யாணம் செய்து, ரெண்டு புள்ளைங்களை பெத்துக்கிட்ட அந்த டீச்சர், இவரோட பணத்தையும் அமுக்கிக்கிட்டு, இவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டா.

''புள்ளைங்களையும் இவர்கிட்ட ஒட்ட விடல. நான் நம்பி போனவரு, என்னை கொஞ்ச நாள் கொஞ்சினாரு. அப்புறம் வேலைக்காரியா நடத்தினாரு. போதும், இந்த நரக வாழ்க்கைன்னு நினைச்சு வேதனைப்பட்டு இருந்த போது, ஒருநாள், கபாலீஸ்வரர் கோவிலில் ரெண்டு பேரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுச்சு.

''அது ஆண்டவனோட அனுக்கிரகம்ன்னுதான் சொல்லணும். ரெண்டு பேரும் பழசை மறந்துட்டு, ஒண்ணா சேர்ந்து வாழ முடிவு செஞ்சு, அங்கிருந்து புறப்பட்டு வந்துட்டோம்,'' என்றாள்.

''இப்ப உங்களுக்கு என்ன வேணும்,'' என்று கேட்டான், தயாநிதி.

'கடைசி காலத்தில் தனியா இருக்க முடியல, தனிமை வாட்டுது. ஒரு, 'ஹோம்'ல தங்கினா, நாலு பேரோட நல்லது கெட்டதுல பகிர்ந்துக்க முடியும். மேலும், நாங்க தேடிக்கிட்ட பிரச்னைகள் மூலம், பாதிப்பு வராம பாதுகாப்பா இருக்க முடியும்ன்னு நினைக்கிறோம். எங்களுக்கு தங்க, இந்த இல்லத்துல இடம் கிடைக்குமா?' என்றனர்.

அவர்கள் பேசி முடித்த பின், மீண்டும் அங்கே அமைதி குடி கொண்டது. அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை, அவர்களை விடவும் அதிகமாக எதிர்பார்த்தார், சின்னய்யா.

''உங்களோட கதை இப்படி இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. உங்களை விட வயசுல நான் சின்னவன். இது சரியா, தவறாங்கறதை விடவும், பொதுவா சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியல.

''கணவன் - மனைவிங்கற உறவு, ஈடு இணையற்ற ஒன்று. அந்த வட்டத்திற்குள் வரும் ஆணும், பெண்ணும் அவங்கவங்க பொறுப்பை உணர்ந்து செயல்படணும். நம்மை நம்பி, தன் சொந்த பந்தங்களை உதறிட்டு வந்திருக்கா... அவளை கஷ்டப்படுத்தாம, கண்ணீர் சிந்த விடாம காப்பாத்தணும்ன்னு கணவனும்...

''இருபது ஆண்டுகள் தன் குடும்பத்தாரோட, அந்த சூழலில் வாழப் பழகிட்டு கணவன் வீட்டுக்கு வந்திருக்கோம். அங்கே இருந்த மாதிரி, இங்க எதிர்பார்க்காம, இந்த சூழலுக்கேற்ப மாறிக்கணும். புகுந்த வீட்டு மனிதர்களை புரிஞ்சுக்கிட்டு, அவர்களை அரவணைச்சு வாழப் பழகி மதிப்போடு, மரியாதையையும் பெறணும்ன்னு மனைவி நினைக்கணும்.

''இப்படி அவுங்கவுங்க பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து வாழப் பழகிட்டா, அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை இருக்காது. அவங்களால மத்தவங்களுக்கும் பிரச்னை இருக்காது.

''மறுமணம் தப்பில்ல; வாழ்க்கை துணையை பறி கொடுத்துட்ட பின், அதுபற்றி சிந்திக்கணும். அதைத் தாண்டி மனசுக்குப் பிடிக்கலேன்னா விலகிப் போறதும் குற்றமில்ல. ஆனா, கணவன் - மனைவி ரெண்டு பேருமா இருக்குற வரைக்கும் தான், எந்த முடிவையும் எடுக்கலாம். குழந்தைப் பெத்துக்கிட்ட பின், மறுமணம் பற்றி நினைக்கிறது மகா பாவம்.

''நம்மோட சுகத்தை விட, குழந்தையின் நலன் முக்கியம்ன்னு நினச்சா, எதையும் விட்டுக் கொடுக்க முடியும். மனசுக்கு கடிவாளம் போடும் வழிகளை விட்டுட்டு, மறுமணங்கிற ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கிடறதால, குழந்தைங்க தான் பாதிப்புக்குள்ளாகும்.

''உங்க மனசுல இருக்கிறதை பகிர்ந்துக்க யாருமில்லேன்னு சொன்னீங்களே... அன்னைக்கு உங்க குழந்தையை அம்போன்னு விட்டுட்டு வந்தீங்களே... அது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.

''உங்க ரெண்டு பேருக்கும் பிறந்த அந்த குழந்தைக்கு, உங்களை விட்டா யாரைத் தெரியும்... ஏற்கனவே, அம்மா பிரிஞ்சுப் போயிட்டாங்க; இப்போ அப்பாவும் வரலேயேன்னு எப்படியெல்லாம் அந்த குழந்தை அழுது களைச்சிருக்கும். ஏன் உங்க குழந்தையை இத்தனை கஷ்டப்படுத்தினீங்க... உங்களுக்கு பிள்ளையா பிறந்ததாலயா?'' என, தயாநிதி கேட்க, அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர்.

''அது கிடக்கட்டும். அதுக்கு பின், அந்த பையனைப் போய் பார்த்தீங்களா?''

''நாலு ஆண்டுகளுக்குப் பின், அவன் நினைவு வாட்டியது; போய் பார்த்தேன். அந்த ஹாஸ்டல்ல அவன் இல்ல. அங்கே வேலை பார்த்த ஒருத்தர், அங்கிருந்து போகும்போது அழைச்சிட்டுப் போனதா சொன்னாங்க. அவுங்க இருக்கிற இடமும் தெரியாதுன்னுட்டாங்க.''

''அப்பறம்.''

''அவனை மறக்க முடியாம தவிச்சேன்; அதன் பின், அவன் செத்துட்டதா நினைக்க ஆரம்பிச்சேன்,'' என, அவர் சொல்ல, அவன் மட்டுமல்ல, சின்னய்யாவும் திடுக்கிட்டார்.

''ஏன் அப்படி?''

''அப்படி நினைக்காம போயிருந்தா... அவன் நினைப்பில் நானும் செத்திருப்பேன்.''

''போதும், எழுந்து போங்க.''

தயாநிதியிடமிருந்து அப்படிப்பட்ட வார்த்தையை எதிர்பார்த்திராத, அவர்கள் முகம் மாறியது.

''தம்பி, எங்களுக்கு இடம் தர மாட்டீங்களா?''

''இங்கே, 40 பேர் தங்கியிருக்காங்க. இவங்க எல்லாரும், உங்க மாதிரி பொறுப்பில்லாத பெற்றோரால் கைவிடப்பட்டவங்க. இவங்க எல்லாரும் படிப்பதுடன், பகுதி நேரமா வேலை பார்க்குறாங்க. எல்லாரும் உயர்ந்த லட்சியத்தோட இருக்குறாங்க.

''ரெண்டு பேர் ஐ.ஏ.எஸ்., படிச்சுட்டு, வெளிமாநிலத்தில வேலையில் இருக்காங்க. இவங்களோட லட்சியம் என்ன தெரியுமா? மறுமண ஆசையில் கைவிடப்படற சிறார்களை ஒன்று திரட்டி அரவணைக்கிறதும், அப்படிப்பட்டதொரு தவறுக்கு எதிரா போராடறதும் தான்.

''அப்படிப்பட்டவங்களுக்கு மட்டும் தான் இந்த இல்லத்தில் இடம்ன்னு சட்ட வரைவே உருவாக்கப்பட்டிருக்கு. இதை நான் உருவாக்கல, இந்த இல்லத்தை நிறுவிய சோமசுந்தரம் அய்யா உருவாக்கினாங்க.

''யார் யாரோ பெத்த பிள்ளைங்களுக்கு, தன்னை அர்ப்பணிச்சவர் வாழ்ந்த இடம் இது. இங்கே பொறுப்பு இல்லாத உங்களைப் போன்றவங்க தங்க முடியாது,'' என்ற அவனது ஆவேச பேச்சு, அவர்களை பயம் கொள்ள செய்தது.

''அப்ப நாங்க போகலாமா?'' என, அப்பாவியாய் கேட்டாள், அந்த பெண்மணி.

சின்னய்யா வேகமா வந்து, தயாநிதியை இழுத்துக் கொண்டு, அலுவலகத்தின் உள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

''தம்பி... அவுங்க...''

''தெரியும் சின்னய்யா. தெரிய வைக்கவும் தெளிவு படுத்தணும்ன்னுதானே, இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கீங்க.''

''நான் ஏற்பாடு செய்யல தம்பி, அவுங்க ரெண்டு பேரையும் பார்க்க பாவமா இருந்துச்சு. அந்த அடிப்படையில தான், உங்ககிட்ட கூட்டிக்கிட்டு வந்தேன். ஆண்டவன் அனுக்கிரகம் உங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்திருக்கு. ஆனா, மகனை அம்போன்னு விட்டுட்டு வந்ததை ஒத்துக்காம, அவன் செத்துட்டான்னு நினைச்சு வாழறதா சொன்னத தான், ஏத்துக்க முடியல.''

''சமாதானம் செஞ்சுக்காம போனா மனசுக்கிட்டேயிருந்து தப்பிக்க முடியாதே, சின்னய்யா. அதனால, மகனை சாகடிச்சுட்டு, அவுங்க வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.''

''தம்பி, நடந்ததை விட்டுட்டு நடக்க வேண்டியதை நினைங்க. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல... இருக்குற காலமாவது மூணு பேரும் ஒண்ணா இருந்துட்டுப் போகலாமே...'' என்ற அவரது பேச்சுக்கு சற்று நேரம் வரை பதில் கூறாமல் இருந்தவன், பின் பேசினான்...

''பெத்த பிள்ளையையே பாரமா நினைச்சு அம்போன்னு விட்டுட்டு போனாங்க. ஆனா, யாரோ எவரோ நீங்க, நெஞ்சில் ஈரத்தோட என் கையை பிடிச்சு இங்கே அழைச்சுட்டு வந்தீங்க. நீங்க போதும் எனக்கு.

''ஆனாலும், அவங்களை மாதிரி, நானும் கடமையை மறந்தவனா இருக்க விரும்பல. அவங்கள நம் சாம்பசிவம் அய்யா நடத்துற ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க, அடிக்கடி போய் பாருங்க. ஆனா, அவுங்க மகன் செத்ததாகவே இருக்கட்டும்.''

''தம்பி, ஒரு வேண்டுகோள்.''

''மறுபரிசீலனை செய்யக் கூடாதான்னு கேட்கப் போறீங்க அதுதானே...''

''ஆமாம், கடைசி காலத்தில், தப்பு செய்துட்டோம்ன்னு, அவுங்களை மாதிரி நீங்களும் வருத்தப்படக் கூடாதில்லையா...''

''வாய்ப்பே இல்ல, எப்போ நான் இல்லத்துக்கு வந்தேனோ... அப்பவே நான் தாய், தந்தை இல்லாதவனாய் ஆயிட்டேன். இப்போ என்னுடைய உறவு நீங்க, சோமசுந்தரம் அய்யா, இன்னும் என்னைப் போலவே இந்த இல்லத்தில் இருக்கிறவங்க; இதைத் தாண்டினா இந்த தேசம்.

''என்னை காப்பாற்றி வளர்த்தது போல, என்னை மாதிரி பெற்றோரால் கைவிடப்படற பல ஆயிரம் பிள்ளைகளுக்கு ஆதரவாகவும், ஆதர்சமாகவும் இருக்குதே இந்த தேசம்... இதனோட மகனா இருக்கிறதும், என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு என்னால் இயன்றதை செய்யறதும் தான், என்னோட ஆசை, லட்சியம். இதுக்கு என்னை அர்ப்பணிச்சுக்கிறதையே, என் வாழ்க்கைப் பணியா தீர்மானம் செஞ்சுட்டேன்,'' என, உணர்ச்சிக் கொப்பளிக்க பேசி முடித்த தயாநிதியின், குரல் உடைந்து அழுகையாய் வெளிப்பட, அவனை அணைத்து ஆற்றுப்படுத்தினார், சின்னய்யா.

சற்று நேரத்திற்குப் பின், அவன் இயல்பு நிலைக்கு வர, சின்னய்யாவும் தன் எண்ணங்களிலிருந்து மீண்டு, இல்லத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த தியாகராஜன் - சாவித்திரி தம்பதியை அழைக்க, வேகமாக சென்றார்.

என். சபரிநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us