sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

யசோதரா...

/

யசோதரா...

யசோதரா...

யசோதரா...


PUBLISHED ON : பிப் 17, 2019

Google News

PUBLISHED ON : பிப் 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலில் சாமி கும்பிட்டு, ஜோதி வெளியே வரவும், கைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

''சொல்லுங்க அத்தை... இப்போ தானே கிளம்பி வந்தேன், உடம்புக்கு எதுவுமா?'' என்றாள், ஜோதி.

மறுமுனையில் அன்னபூரணி சொன்ன செய்தியை கேட்டு, சட்டென்று உலகமே கீழ் மேலாய் சுழன்று, தட்டாமாலையாய் சுற்றி ஓய்ந்தது. தடுமாறி விழப் போனவள், பக்கவாட்டு சுவரை பற்றிக் கொண்டாள்.

''என்னாச்சுமா, தண்ணி வேணுமா?'' பக்கத்தில் வந்து விசாரித்தனர், இரண்டொருவர்.

'இனிமேல் உனக்கு நல்லது தான் நடக்கும்... பகவான், உனக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்...' பிரசாதத்தை தந்து, ஐந்து நிமிடத்திற்கு முன் தான், சொல்லி அனுப்பினார், குருக்கள்.

அதற்குள்ளாகவா...

ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு ஓடி வந்தாள். உள்ளே கேட்ட குரல், உயிரை நடுங்க வைத்தது.

வீட்டில் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க, நடுவில் அமர்ந்திருந்தான், யோகமூர்த்தி. தும்பை பூ வேஷ்டி, நெற்றி முழுக்க திருநீறு, கண்களில் அத்தனை சாந்தம், அமைதி.

கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், பெரிய சத்திரத்தில், நாலா பக்கமும் எதிரொலித்த மங்கல ஓசைக்கு நடுவே, ஜோதியின் கழுத்தில் தாலி கட்டினான், யோகமூர்த்தி.

பெண்ணும், ஆணும் அடுத்தடுத்து பிறந்து, வாழ்க்கையை அலங்கரித்தனர்.

சவுரிபாளையத்தில், யோகமூர்த்தியின் அப்பா, பெரிய தனக்காரர். அவர், நடந்து வருவதைப் பார்த்தால், தோளில் இருக்கும் துண்டு, இடுப்புக்கு இடம் மாறும் பலருக்கு. அந்த மரியாதையே பெரிய விஷயம் தான்.

அவருக்கு ஒரே மகன், யோகமூர்த்தி. விளைச்சல் நிலமும், பால் பண்ணையும் அவர்களுக்கு சொந்தமாய் இருந்தது.

'நண்டு கொழுத்தால் வளையில் இராது...' என்ற பழமொழி, ஊர் பக்கம் பிரசித்தம். அந்த ரகத்தில் தான் இருந்தான், யோகமூர்த்தியும். நல்ல தாய் - தகப்பன், நிம்மதியான வருமானம், கண்ணியமான குடும்ப வாழ்க்கை; அழகான மனைவி, அன்பான குழந்தைகள்; இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்க்கைக்கு.

இதில் எதுவும் கிடைக்காதவர்களுக்கு தான், இந்த வாழ்க்கையின் வரம் புரியும். எந்த பிரயத்தனமும் இல்லாமல் இவையெல்லாம் கிடைத்ததால், அதன் அருமையை உணராமல் போய் விட்டான், யோகமூர்த்தி.

நிலம், நீச்சை பார்த்துக் கொள்ளவே நேரம் போதாத போது, சவுரிபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில், 'க்ளப்' கடை போடப் போவதாக சொல்லி, ஆர்ப்பாட்டம் செய்தான்; அப்பாவிடம் காசு வாங்கி, கடையும் ஆரம்பித்தான்.

சகவாச தோஷம், தெருக்கோடி வரைக்கும் பேசும்; மோசமான நட்பு மற்றும் பழக்க வழக்கங்களுக்கு ஆளானான்; கடையில் பெரும் நஷ்டம்.

சின்ன கடனை அடைக்க, பெரிய கடனை வாங்கி, பெரிய கடனை அடைக்க, திருட்டுத் தனம் பண்ணி, கடைசியில், லட்சங்களில் வந்து நின்றது கடன்.

நிலத்தில் விளைச்சல் இல்லை. மர்ம நோய் தாக்கி, மாடுகள் ஒருபக்கம் செத்து விழுந்தன. காரணம், கண்டுபிடிப்பதற்குள் பாதி பண்ணைக்கு மேல் காலி. யாருக்கும் தெரியாமல் நிலத்தையும், வீட்டையும், ஈடாய் காட்டி, செலவு செய்திருந்தான்.

கடன் தொகை எகிறி இருந்தது. குழந்தைகளுக்கு உடல் நலிவு, குடும்பத்தில் சச்சரவு, ஆடிப் போனான், யோகமூர்த்தி.

'இதப்பாரு யோகம்... உன் முகத்தை பார்த்து, ஒத்தை சல்லியும் நாங்க தரல... எல்லாம் உங்க அப்பாக்காக தான்... நீ மட்டும், விடியறதுக்குள்ள காசு கட்டல, வீடு புகுந்து, சட்டி, பானையெல்லாம் துாக்கி வெளியில போட்டுவோம்...

'காசுக்கு யோக்கியதை இல்லாத உனக்கெல்லாம், எதுக்கு சொந்த தொழிலு... எதையாவது வித்தாவது கடனை கட்டுற வழியை பாரு... அழகான பொண்டாட்டி இருக்கிறவனெல்லாம், கடன்காரனை, வீட்டு வாசல்ல வந்து நிப்பாட்ட கூடாது... வர்றவன் மனசு, எந்த நிமிஷம், எந்த பக்கம் சாயுமோ...' கடன் கொடுத்தவன், வார்த்தையில் அமிலத்தை இரைத்தான்.

திணறிப் போனான், யோகமூர்த்தி.

'இத்தனை ஓட்டம் எதற்கு... அரும்பாடுபட்டு இதை காப்பாற்றி எங்கே எடுத்து போகப் போகிறோம்... பிடி சாம்பல் கூட மிச்சமாகாத வாழ்க்கையில், எதற்கு இந்த பிடிப்பும், பிடிமானமும்...

'நடந்து தேய்ந்த பாதையும், உண்டு உடுத்தி களித்ததைத் தவிர உனக்கானது எதுவுமில்லை. இன்று, உன்னுடையது, நாளை, யாருடையதோ...' மல்லாந்து படுத்து, விட்டத்தை வெறித்தபடி யோசித்தவன், விடியலை தேடி, எங்கோ ஓடி விட்டான், யோகமூர்த்தி.

ஆறே ஆண்டில் முடிந்து போனது, ஜோதியுடைய வாழ்க்கை. நான்கு வயசில் மகனும், இரண்டு வயசில் மகளும், நடப்பது என்னவென்றே அறியாமல் நின்றன.

'ஞானம் தேடி போகிறேன்...' என்று, குடும்ப பந்தத்தை, ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான். அன்று போனவன், 15 ஆண்டு கழித்து வந்திருக்கிறான். தேடிப் போன ஞானம் கிடைத்ததா... அவனுக்கே வெளிச்சம்...

வாழை இலையில் சாதம் போட்டு, மண் கலையத்தில் இருந்த கட்டி தயிரை அகப்பையில் அள்ளி, மகனுக்கு பரிமாறினாள், அன்னபூரணி.

''வெஞ்சனம் வைக்கட்டா... ஊறுகாய் கொண்டாரட்டா,'' பெற்றவளின் பரிவு, உச்சி குளிர்ந்தது.

''வேணாம் தாயி... எதுவும் வேணாம்... சுவைக்கு அடிமைப்பட்ட நாவு தான், அதுக்கும், இதுக்கும் ஆசைப்படும்... ஆன்மா, எதுக்கும் ஆசைப்படாது... ஆன்மாவை நிறுத்தி வைக்க, இந்த கூடு தேவை. அதுக்கு தான் சாப்பாடே தவிர, வேறெதுக்குமில்லை... நாவை கட்டுப்படுத்தினா தான், உலக பந்தத்துல இருந்து விடுபட முடியும்,'' உப்பு கூட போடாமல் உண்டு, பசி போக்கினான்.

''இவ்வளவு நாளும், எங்கிருந்தே யோகமூர்த்தி... கட்டி ஆள, அரண்மனை இருந்தும், பரதேசி மாதிரி அலைய வேண்டிய தலையெழுத்து... என்னய்யா வந்தது உனக்கு...

''உன் மகன், காலேஜ் போறான்... பொண்ணு, பிளஸ் 2 படிக்குது... அதுங்களை உருவாக்க, ஜோதி எத்தனை கஷ்டப்பட்டிருக்குன்னு தெரியுமா உனக்கு?'' சொல்லி, முந்தானையில் முகம் பொத்தி விசும்பினாள், அம்மா.

ஜோதியின் காதலோ, பிள்ளைகளின் பாசமோ, அம்மாவின் அழுகையோ, அவன் மனதை துளி கூட அசைக்கவில்லை. பார்வையில் தெரிந்த அமைதியும், தீர்க்கமும், வேறொரு ஞானமூர்த்தியை இனம் காட்டியது.

தும்பைப் பூவாய் சிரித்தான்.

''தாயி... நீங்க சொன்ன எந்த பொருளும், உயிரும், எந்த நிலையிலும் என்னுடையதல்ல... ஏன், இந்த உடல் கூட, என்னுடையதல்ல... இன்று, இந்த கூட்டுக்குள் இருக்கிற ஆன்மா, நாளை வேறொரு கூட்டிற்கு இடம் மாறலாம்... என் தேடல், கூடு இல்லை... ஆன்மா, நிரந்தரமா ஓய்வு கொள்ளும் இறைவனின் திருவடி... கூடில்லா வாழ்வு.''

கண்களை மூடி, மகன் பேச, அவன் வார்த்தையின் பொருள் புரியாமல் அமர்ந்திருந்தாள், அன்னபூரணி.

''ஞானத்தை தேடி போனேன்... பற்றைத் தொலைச்சேன்... காடு மேடு சுத்தினேன்... நடுநிசியில் ஞானம் தேடி, அரச வாழ்வை துறந்த, புத்தர் மாதிரி... இந்த பரந்த புறவெளியில், எனக்கு ஞானத்தை தரும் போதி மரத்தை தேடி...

''காமம், காதல், பாசம், பற்று, விருப்பு, வெறுப்பு, கோபம்ன்னு, என்னுடைய ஒவ்வொரு உணர்ச்சிகளா கழட்டி வீசின போது, ஞானம் தன்னால கிடைச்சது...

''திரும்பி வந்தது, எதையும் புதுபிச்சுக்கவோ, எதையும் எடுத்துட்டு போகவோ அல்ல... சில நாட்களாய் எனக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு...

''அதாவது, 'நீ தேடி வந்த ஞானம் உனக்கு கிடைச்சிருச்சு... திரும்ப உன்னுடைய இடத்துக்கு போ... குடும்ப வாழ்க்கையை தொடர அல்ல... உன்னோடு பயணம் செய்தவர்களோடு நீ பெற்ற ஞானத்தை பகிர்ந்து கொள்ள...' அப்படின்னு... இது தான் என் பயணத்தின் அடுத்த நிலை என்று வந்திருக்கிறேன்...

''யார் கண்டா... நாளைக்கே கூட வேறு இடத்திற்கு போக உத்தரவு வரலாம்,'' என்றான், யோகமூர்த்தி.

மகனுடைய வார்த்தைகள் புரிந்தும், புரியாமலும் அமர்ந்திருந்தாள், அன்னபூரணி. மழலையில் அவன் பேசிய வார்த்தைகள் கூட புரிந்தது. இன்று, அவன் பேசுவது எதுவும் விளங்கவில்லை, அந்த பாமர தாய்க்கு.

''என்னவோ சொல்றய்யா... எதுவும் புரியல... நீ எதை தேடிப் போன, எதை வாங்கிட்டு வந்தே... எனக்கெதுவும் விளங்கல... குடும்பத்தை இறங்கு முகத்துல வச்சுட்டு, நீ ஓடிப் போன,'' என்றாள்.

அன்னபூரணியின் பேச்சை இடை மறித்து, ''ஓடிப் போகவில்லை தாயி... தேடிப் போனேன்,'' என்றான், யோகமூர்த்தி.

''எதுவோ ஒண்ணு... அதுக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஒத்தையாளா கரை சேர்க்க, ஜோதி பட்ட பாடு மட்டும் தான் எனக்கு கண்ணுல தெரியுது... இம்புட்டு நாள் கழிச்சு வந்துட்டு, 'குடும்பம் நடத்த வரல, போகிற போக்குல வந்தேன்...' என்கிற... என்னத்தை சொல்ல,'' மூக்கை சிந்தி, துாணில் துடைத்தாள், அன்னபூரணி.

சொளகில் அரிசியை புடைத்து, வலக்கையில் குருணையை லாவி, கோழிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த ஜோதி, அத்தையின் கண்ணீரை தாங்காமல், அருகில் வந்து துடைத்து விட்டாள்.

''ஏன் அத்தை அழறீங்க... உங்க புள்ளை, என் கூட இனி குடும்பம் நடத்த மாட்டாறோன்னா... அவரே அந்த நினைப்புல வந்திருந்தாலும், நான் ஒத்துப்பேன்னா நினைச்சீங்க,'' என்றாள்.

''ஜோதி.''

''ஆமாம் அத்தை... புத்தர் மாதிரி, ஞானம் தேடி போனாராம்... அவர்கிட்ட சொல்லுங்க, புத்தரா வாழ்றது கூட ஒரு வகையில் சுலபம். ஆனால், அவர் மனைவி யசோதராவா வாழ, ரொம்ப போராடணும்... அது, புத்தனால கூட முடியாது...

''காதல், காமம், பாசம், பற்று, விருப்பு, வெறுப்பு, கோபம்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டு போய், ஞானத்தை அடையறது, பெரிய விஷயமா என்ன... இத்தனைக்கும் நடுவுல உழன்றுட்டே ஞானத்தை அடையுறது தான், பெரிய விஷயம்...

''உங்க புள்ளை மாதிரி, ஒரு பிரச்னை வந்ததும், சமாளிக்க முடியாம, நானும் ஞானத்தை தேடி ஓடியிருந்தா, எனக்கு இந்த உலகம், 'ஓடுகாலி'ன்னு பேர் வச்சிருக்கும்...

''இவர் விட்டுட்டு போனதா சொன்ன, காதல், பாசம், இத்யாதிகளை சுமந்துட்டு, இவர் விட்டு போன கடமைகளை சரி செஞ்சேன். கடன்களை கட்டி, விவசாயத்தைப் பெருக்கி, குடும்ப கவுரவத்தை காப்பாத்தி, இன்னைக்கு இந்த குடும்பம் கவுரவமா நிக்கிறதுக்கு எது காரணம்... ஞானம் தானே...

''ஏன் அந்த ஞானம், புத்தருக்கு அரசவையில் இருந்திருந்தால் கூட கிடைச்சிருக்குமே... மகன் ராகுலையும், மனைவி யசோதயையும் தவிக்க விட்டிருக்க வேண்டாமே,'' நாவு சாட்டையால் விளாசினாள், ஜோதி.

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகள் என்பதை, அந்த நிமிஷம் தான், அவளே உணர்ந்திருப்பாள் போல் தோன்றியது.

சிமென்ட் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தான், யோகமூர்த்தி.

கணவன் முன் வந்து நின்று, விம்மிய கேவலோடு கண்ணீரை விழுங்கினாள்.

''தோ, இந்த பற்றற்ற ஞானிகிட்ட கேட்கறேன்... என் கழுத்துல தாலி கட்டும்போது, கண் எதிரே நின்ற மனிதர்களுக்கும், கண்ணுக்கு தெரியாத தெய்வத்திற்கும் சாட்சி வைத்து தானே, என்னோட வாழ்க்கைக்கும், எதிர்காலத்திற்கும் இவர் பொறுப்பேத்துகிட்டார்...

''நடுவுல வந்த பிரச்னையை சமாளிக்க முடியாம, இவர், ஞானம் தேடி போயிட்டார்... ஆசையை துறந்த புத்தர், துறவரம் பூண்டதுல நியாயம் இருக்கலாம்... அவரை நம்பி வந்த யசோதராவை துறவு வாழ்க்கை வாழ வைக்க, என்ன அதிகாரமிருக்கு?''

சுரீரென நிமிர்ந்து பார்த்தான், யோகமூர்த்தி.

உணர்ச்சிகளை மறந்திருந்த அவன் கண்களில், மின்னல் வெட்டி மறைந்தது.

''உணர்ச்சிகளை சுமந்துகிட்டே, அதை மரத்துப் போக வைக்கிறது தான் ஞானம்... ஆசைகள் இருந்தும் வழி தவறாம கட்டிக் காக்கிறது தான் ஞானம்... பொறுப்புகளை சுமந்துகிட்டே, இறைவனை அடையறது தான் ஞானம்...

''மறுபடியும் சொல்றேன், புத்தரா வாழ்றது கூட சுலபம்... யசோதராவா வாழ்ந்து பாருங்க, அப்போ தான் புரியும், அது எத்தனை கஷ்டம்ன்னு... அவர், தேடி போனதா சொன்ன ஞானம், எனக்கு, இருந்த இடத்திலேயே கிடைச்சிருச்சுன்னு சொல்லிடுங்க அத்தை,'' என, முந்திச்சேலையை உதறி, இடுப்பில் அழுத்தி சொருகியபடி, அவனை பார்க்காமல், கம்பீரமாய் உள்ளே போனாள், ஜோதி.

எஸ்.மானஸா






      Dinamalar
      Follow us