PUBLISHED ON : பிப் 17, 2019

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், எளிதில் இருமல் மற்றும் ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். எனவே, நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற, அன்றாட உணவில், காளான்களை சேர்க்க வேண்டும். இதை சாப்பிடுவதால், நான்கு வாரத்தில் உங்கள் உடல், நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதை உணரலாம்.
பொதுவாக, காளான்கள் என்று சொன்னவுடன், அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவர். ஏனெனில், காளான்களில் பல வகைகள் உள்ளன. ஆனால், மூன்று வகை காளான் மட்டும், உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியவை. அவை: 'ரிஷி, மேட்டக் மற்றும் ஷிட்டேக்' போன்றவை.
ரிஷி காளான்: சிவப்பு மற்றும் சற்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு காளான் போலவே இருக்காது. இதன் மேல் பகுதி மடல் போலவும், தண்டுப் பகுதி தடித்தும் இருக்கும். சீன மொழியில், 'லிங் ஸி' என்று அழைக்கப்படும் இது, இரண்டு நுாற்றாண்டுகளுக்கு மேலாக, சீன மருத்துவத்தின் முக்கிய மூலிகை காளானாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டக் காளான்: சிறிய ஓக் மரத்தைப் போன்ற தோற்றம் மற்றும் அடர்த்தியான பழுப்பு நிற மடல்களைக் கொண்டது. இந்தக் காளான், புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கு செய்யப்படும் ரசாயன சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை குணப்படுத்தும். இது, 'எய்ட்ஸ்' நோயைக் குணப்படுத்தும் என, சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. மேலும், சர்க்கரை நோய், தீராத உடல் சோர்வு, முற்றிய காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கும், இந்த காளான் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
ஷிட்டேக் காளான்: மிகவும் சுவையான இந்த காளான், உலகம் முழுவதும் பிரபலமானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நாளும், இதை தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும், என்பதை கண்டறிந்தனர்.
இந்த மூன்று வகைக் காளான்களும், கடைகளில் கிடைக்கும். சமைத்து, அன்றாட உணவில் சேர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன், ஆரோக்கியமாக வாழுங்கள்.
தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்