/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நேர்மறை எண்ணத்துடன் இருப்பவரா நீங்கள்!
/
நேர்மறை எண்ணத்துடன் இருப்பவரா நீங்கள்!
PUBLISHED ON : ஆக 28, 2022

நம்மைச் சுற்றி எப்போதுமே, 'பாசிட்டிவ் வைபரேஷன்' இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு செயல்படுவோம். எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர். 'தெரியாது, நடக்காது, முடியாது, கிடைக்காது' என, சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.
உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையை செய்யுங்கள். 'இந்த வேலையை செய்ய வேண்டுமே...' என செய்து முடிக்காமல், 'இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்...' என்று வேலை பாருங்கள்.
'பவர் புல்'லாக உணருங்கள்: உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மன வலிமை மிக முக்கியம். உங்களைப் போல இந்த உலகத்தில், 'பவர் புல்'லானவர் யாருமில்லை என்ற எண்ணத்தை, வளர்த்துக் கொள்ளுங்கள்.
நேசியுங்கள்: உங்களை, நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை, முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல அழகானவர், திறமையானவர் யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
பயணப்படுங்கள்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும்; சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக் கூடாது. வெற்றிக்கான வழியை ஆராய்ந்து, அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், 'பாசிட்டிவ்' எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா