sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ராசி!

ராசி!

ராசி!


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரகப்பிரவேச வீட்டில், கார்த்திகேயனைப் பார்த்த போது, மனது நறுக்கென தைத்தது. பக்கத்தில் திரும்பி நிர்மலாவைப் பார்க்க, அவளும் சொல்லி வைத்தது போல், என்னையே பார்த்தாள்.

''நான் நினைச்சேன். இவர் வருவார்ன்னு, சரியா வந்துட்டார். இதோ பாருங்க, நீங்க பாட்டுக்கு துாரத்து சொந்தம், பால்ய சினேகிதன் அது, இதுன்னு, அத்தனை விஷயத்தையும் சொல்லி வைக்காதீங்க,'' புயல் எச்சரிக்கை கொடியை பார்வையிலேயே, நிர்மலா ஏற்றி விட்டிருக்க, அவசரமாய் தலையை ஆட்டி வைத்தேன்.

என்னைப் பார்த்துவிட்டு கூட்டத்தை தாண்டி, என்னிடம் ஆவலாக வந்து நின்றான்.

''சுந்தரம், எப்படி இருக்கடா... காலையில் வந்ததிலிருந்து உன்னை தான் தேடிட்டு இருக்கேன். நமச்சிவாயம் மாமா உன்னைக் கூப்பிடாம இருப்பாரா... அவருக்கு உன் மேல அத்தனை இஷ்டம்,'' என, ஆத்மார்த்தமாய் தழுவிக் கொண்டவன், நிர்மலாவை நலம் விசாரித்து, குழந்தைகளிடம் படிப்பைப் பற்றி கேட்டு விட்டு, வேறு யாரோ உள்ளே வர, அவர்களைக் காண நகர்ந்து போனான்.

இத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்த நிர்மலா, அவன் அப்படி நகர்ந்ததும், முகத்தில் இருந்த சிரிப்பை நிறுத்தி, குனிந்து என்னிடம் மறுபடியும் எச்சரிக்கும் குரலில் சொன்னாள்:

''இந்த சிரிப்பு, விசாரிப்பு, கட்டிபிடி வைத்தியம் இதெல்லாம் பார்த்து, நான் இல்லாதப்போ எதுவும் சொல்லிடாதீங்க. அவர் ஒரு ராசி கெட்ட மனுஷன். இவனெல்லாம் இங்கே வரலைன்னு யார் அழுதா...'' என, முனகிக் கொண்டே இருக்க, என் பார்வையை வேறு பக்கம் திருப்பி அமர்ந்தேன்.

கார்த்திகேயனை நினைத்தால் மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது. அவன் மீது சொந்தமும், சுற்றமும் குத்தி வைத்திருக்கும் முத்திரையின் மீது, எனக்கு அபிப்ராயம் இல்லை. ஆனால், மொத்தமாக அப்படிச் சொல்வது தவறென்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தான், கார்த்திகேயனும் இருந்தான்.

இருவரும் கல்லுாரியில் ஒன்றாகத்தான் படித்தோம். அதன்பின், அரசாங்க தேர்வு எழுதி, ஒரே, 'அட்டெம்ட்டில்' பாஸ் செய்து, மனைவி, குழந்தைகள் என்று, என் வாழ்க்கை சரியான பாதையில் செல்ல, கார்த்திகேயன் வாழ்க்கை அங்கேயே நின்றது.

படித்து முடித்த கையோடு, அப்பாவின் கடைக்கு பொறுப்பேற்க, இரண்டே ஆண்டில் வியாபாரம் நஷ்டமாக, தொழிலை மொத்தமாக மூட வேண்டியதானது.

விருதுநகரில், 'ஹோல்சேல்' கடைக்கு மேனேஜராக போனான். முதலாளி குடும்பத்தில் சொத்து தகராறு என்று, கடை மொத்தமாக கை மாற, கார்த்திகேயனுக்கு வேலை போனது.

அடுத்தடுத்து ஆறேழு இடங்கள், போவதும், வருவதுமாய் இருந்தான். நிலையான வருமானம் இல்லாததால், கல்யாணம் முதல், குழந்தை வரைக்கும் அத்தனையும் தாமதமாகவே நடந்தது.

தொடர் தோல்விகளும், தொடர்ந்து துரத்திய துரதிஷ்டமும், கார்த்திகேயனை, 'துக்கிரி' என்ற இடத்தில் கொண்டு வந்து நிறுத்த, வாய்க்கு வாய், வேறு வேறு அடையாளத்தோடு அறிமுகமானான் கார்த்திகேயன்.

'அவனைக் கூப்பிடாதீங்க... அவனுக்கே எதுவும் சரியில்லை... அவன்கிட்ட சொன்னா, எதுவுமே நடக்காமப் போயிடும்...'

எனக்கு இதிலெல்லாம் துளி கூட நம்பிக்கை இல்லை தான். வேலையில் இருந்து சலித்து திரும்பி, வீட்டில் நிம்மதியாக அமரும் கொஞ்ச நேரமும், யாருக்காகவோ சண்டை போட்டு அவனை நல்லவனென்று நிரூபிக்கும் ஆர்வமெல்லாம் தொலைத்திருந்த நடுத்தர வயது எனக்கு.

ஆனால், கார்த்திகேயனை பற்றி மற்றவர்கள் ஏதாவது சொன்னால், மனது உண்மையாகவே வருத்தப்படும்.

'அவன் காதுகளில் இதெல்லாம் விழாமல் இருக்கவாவது வேண்டும்...' என்று, மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வேன்.

பந்திக்கு அழைப்பு வர, குழந்தைகளோடு எழுந்து போனாள், நிர்மலா. ஆண்களுக்கான வரிசையில் இடம் காலி இல்லாததால், நான் அமைதியாக இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தேன். என் கஷ்டகாலம், பக்கத்தில் வந்து அமர்ந்து, குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டான், கார்த்திகேயன்.

எத்தனை கஷ்டங்களை கண்டிருந்தாலும், அவன் ஒரு உற்சாக ஆசாமி. ஏதேதோ பேசிய பின், நான் பயந்த விஷயத்துக்கு வந்து நின்றான்.

''ஏன் சுந்தரம், இப்பல்லாம் உன்னை எங்க ஏரியா பக்கம் அடிக்கடி பார்க்கிறதா, என் மனைவி சுகுணா சொன்னா. என்னய்யா, ஏதாவது முக்கிய விஷயமா?''

பந்தியில் அமர்ந்து நிர்மலா முறைத்த முறைப்பில், தொண்டைக்குழி வரைக்கும் வந்து நின்ற வார்த்தைகள் அப்படியே நின்றது.

''முக்கியமெல்லாம் இல்லடா. ஆடிட்டிங் விஷயமா வந்து போக வேண்டியிருக்கு.''

''ஓ அப்ப சரி. நேரமிருந்தால் என் வீட்டுக்கும் ஒருநாள் வந்து போடா. நான் வீட்டுல தான் இருக்கேன்,'' என்றான்.

'இப்போ பார்த்துக் கொண்டிருந்த வேலை என்னாச்சு?' என்று கேட்க நினைத்தேன். அதை கார்த்திகேயனிடம் கேட்கவில்லை. அவனைப் பார்க்கவே ஒரு பக்கம் எரிச்சலாக வந்தது.

வீடு திரும்பும்போது, ''என்ன பேசினீங்க...'' என்று கேட்டு, குடைந்து கொண்டிருந்தாள், நிர்மலா.

''கார்த்திகேயன் இருக்கிற தெருவில, 'ப்ளாட்' ஒண்ணு பார்த்திருக்கோம். நல்ல வாடகைக்கு போகிற இடம். போன வாரம் பார்த்து பேசி, அஞ்சு லட்சம், 'அட்வான்ஸ்' கொடுத்துட்டு வந்திருக்கோம்.

''அவனைப் பார்த்தும், அவன் என்ன விஷயம்ன்னு கேட்டும், நாம சொல்லாம இருக்கோம். நாளைக்கு நாம தான் வாங்கி இருக்கோம்ன்னு தெரிந்தால், ஒரு வார்த்தை சொல்லலயேன்னு அவன் வருத்தப்பட மாட்டானா, நிர்மலா,'' என்றேன்.

''எதுக்கு சொல்லணும்... அதுவும் அவரோட ராசியும், சூழ்நிலையும் தெரிஞ்சும்... துாரத்து சொந்தம். எப்பயோ பார்க்கிற நண்பன். அதுக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.''

வீடு வந்து வெகுநேரமாகியும், நிர்மலா கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தாள்.

பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். 'லோன்' விஷயமாய் அலைந்து விட்டு, நானும், நிர்மலாவும் வந்து கொண்டிருந்தோம்.

''ப்ளாட் உரிமையாளரை, மரியாதை நிமித்தம் பார்த்து விட்டுப் போகலாமே,'' என்றாள், நிர்மலா.

அங்கு சென்றபோது வீடு பூட்டிக் கிடந்தது. லேசான குழப்பம் இருந்தது. இரண்டு நாள் முன்பு வந்தபோதும் பூட்டித்தான் கிடந்தது.

''நமக்கு, 'அக்ரிமென்ட்' முடிய இன்னும் நாள் இருக்குல்ல. எங்கேயாவது போயிருப்பாங்க, வருவாங்க,'' என, எனக்கு சொல்வது போல், தனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டாள், நிர்மலா.

''சுந்தரம்...'' என, அழைத்தபடி, ஏதோ முட்டுச்சந்திலிருந்து கார்த்திகேயன் என்னைப் பார்த்து விட்டு வந்து நிற்கவும், நிர்மலா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

''பக்கத்துல தான்டா என் வீடு, வந்துட்டுப் போங்க.''

மறுக்க முடியாமல், இருவரும் அவனைப் பின் தொடர்ந்தோம்.

வீட்டின் சூழ்நிலை அவ்வளவு ரம்மியமாக இல்லை. ஆனால், அது துளிகூட அங்கு யார் முகத்திலும் இல்லை.

''மனைவிக்கு மூணு மாசம் முன், ஒரு சின்ன ஆபரேஷன். கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதாயிடுச்சு. இரண்டு குழந்தைகள் பிறந்தாச்சு. இப்போ அவள் உடல்நிலை தான் முக்கியம்ன்னு அதையும் செய்தாச்சு.

''இதுல என்ன நன்மைன்னு கேட்கிறீங்களா... நான் நல்லா சமையல் செய்ய கத்துக்கிட்டேன். இருங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்,'' என, அவன் உள்ளே செல்ல, எனக்கு, அவனின் உற்சாகம் வியப்பாக இருந்தது.

டீயோடு வந்தவனிடம், ''இப்போ பார்த்துட்டிருந்த வேலையும் போயிடுச்சாமே. இப்படியே போயிட்டிருந்தால், எப்போ தான், 'செட்டில்' ஆகிறது கார்த்திகேயா... பார்க்கிறவங்களும் நம்மை ரொம்ப குறைவா நினைப்பாங்க தானே...'' என்றேன்.

''நான் ஒரு, துக்கிரி. என்கிட்ட சொன்னா, அந்த காரியம் நடக்காது. ராசி இல்லாதவன். இதானே மத்தவங்க என்னைப் பத்தி கணிச்சு வச்சுருக்கிறது. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு, எனக்கு அக்கறையே இல்லை, சுந்தரம்.

''நான் என்ன, எதுவாக இருக்கணும்ன்னு எனக்குத் தெரியும். தோல்வி, வெற்றியை வச்சு வாழ்க்கையை அடையாளம் காணுறவங்க கருத்து அது; எனக்கு அவசியமே இல்லை. மூணாவது மனுஷங்க எனக்கு என்ன பேர் தந்தால் என்ன...

''என் மனைவிக்கு, நான் அன்பான கணவன்; குழந்தைகளுக்கு அரவணைப்பான தந்தை. அவங்க தந்திருக்கும் இந்த பேர் தானேடா எனக்கு முக்கியம். செய்யிற வேலைக்கு உண்மையா இருக்கேன். இழந்ததுக்காக உட்கார்ந்து யோசிக்கிறதில்லை.

''இறுதி நிமிஷம் வரைக்கும், வாழ வாய்ப்புகள் வந்துட்டே இருக்கும்ன்னு, நேர் மறையா யோசிக்கிறேன். இதோ, மனைவி உடல்நிலைக்காக வேலையை விட்டேன். சமையல் கத்துகிட்டேன். இப்போ மூணாவது தெருவில், 'மெஸ்' ஒண்ணு வாடகைக்கு வருது. எடுத்து நடத்தலாமான்னு ஒரு சிந்தனை ஓடிட்டிருக்கு.

''என்கிட்ட சொன்னால் நல்லது நடக்காதுன்னு நினைச்சாங்கன்னா சொல்ல வேண்டாம். அடுத்தவங்க வாழ்க்கை பற்றியும், வசதி பற்றியும் தெரிஞ்சு, நான் என்ன செய்யப் போறேன்...'' என, புன்முறுவலுடன் முடித்துக் கொண்டான்.

எனக்கு உறுத்தலாக இருந்தது. என்னையும் அப்படித்தானே அவன் யோசித்திருப்பான். சட்டென்று நிர்மலாவை ஏறிடாமல், ப்ளாட்டுக்கு, 'அட்வான்ஸ்' தந்திருக்கும் விஷயத்தைச் சொல்லி முடிக்க, கார்த்திகேயனின் முகம் மெல்ல கருத்தது.

'நான் தான் சொன்னேன்ல...' என்ற பாவனையில், நிர்மலா என்னை முறைக்க, நான் கார்த்திகேயனையே பார்த்தேன்.

''அந்த மளிகை கடையை ஒட்டி இருக்கற, 'ப்ளாட்'டா சுந்தரம். அதுல ஏகப்பட்ட சிக்கல் இருக்கே. அந்த ஆளுக்கு இரண்டு சம்சாரம். ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல பெரிய வாரிசு யுத்தமே நடந்துட்டிருக்கு.

''இதுக்கு முன்ன இரண்டு பேர், 'அட்வான்ஸ்' கொடுத்துட்டு, இடத்தை, 'ரிஜிஸ்டர்' பண்ண முடியாம பெரிய பிரச்னையாகி, அவங்க கொடுத்த, 'அட்வான்ஸ்' பணத்தையே ஏகப்பட்ட செலவு செஞ்சு, போலீசை வச்சுத்தான் திருப்பி வாங்கினாங்க,'' என, கார்த்திகேயன் சொல்லிக் கொண்டிருக்க, எனக்கு துாக்கி வாரிப் போட்டது.

கிட்டத்தட்ட மயக்கமாகி இருந்தாள், நிர்மலா. எப்போது, எப்படி கிளம்பி, வீடு வந்தோம் என்றே தெரியவில்லை.

எல்லாவற்றையும் விட, கார்த்திகேயனின் நேர்மறைச் சிந்தனைகளும், தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெற்றிகளை ரசிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் வெகுவாக ரசிக்கும் அந்த மனோபாவம் எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.

ப்ளாட் உரிமையாளவரை மறுபடி மறுபடி அழைத்து பார்த்து ஓய்ந்து போன பின், ''முன்னாடியே, கார்த்திகேயன்கிட்ட சொல்லி இருந்தால், நமக்கு இந்த கஷ்டம் வந்திருக்காதில்லீங்க?'' என்றாள், நிர்மலா ஆற்றாமையோடு.

இப்போதும் அவள் கருத்துக்கு பலமாக தலை ஆட்டினேன்.

எஸ். பர்வின் பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us