
பிளஸ் 2 முடித்திருக்கும் எனது மகன் அடுத்தாக ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்தால் எங்கு வேலைகள் கிடைக்கும்?
கண்ணன், சாத்தூர்
பொதுவாக இந்தப் படிப்பை முடிப்பவருக்கான வேலைகள் ஏவியேஷன் துறையில் கிடைக்கும். வெளிநாடுகளிலும் வேலை பெறலாம். ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடிக்கும் ஒருவருக்கான வேலை என்பது வெறும் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அவரது டொமைன் திறன், சிறப்பான பகுத்தாராயும் திறன், மென் திறன்கள் ஆகியவற்றையும் பொறுத்தே வேலை பெற முடிகிறது. ஏர் இந்தியா போன்ற விமான சேவை நிறுவனங்கள், எச். ஏ. எல், ஏன்.ஏ.எல்., போன்ற சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள், இந்திய விமானப் படை மற்றும் சிவில் ஏவியேஷன் தொடர்பான எந்த ஒரு நிறுவனத்திலும் உங்கள் படிப்போடு தொடர்புடைய வேலைகள் கிடைக்கின்றன. நம்பிக்கையோடு அது தொடர்பான படிப்பில் சேர்க்கலாம்.
எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள சி.ஜி.எல்., தேர்வு எழுத உள்ளேன். இந்தத் தேர்வு குறித்த தகவல்களை தரவும்.
யமுனா, விழுப்புரம்
ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் பொது அறிவு ஆகிய நான்கு பகுதிகளில் தலா 25 கேள்விகளை கொண்டது முதல் கட்ட எழுத்துத் தேர்வு. மொத்தம் 100 கேள்விகள். 200 மதிப்பெண்கள். இந்த 100 கேள்விகளுக்கு 60 நிமிடத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் கேள்விகளை படிப்பதற்கே செலவிட வேண்டும் என்பதால் சராசரியாக 50 நிமிடத்தில் 100 கேள்விகளுக்கு, அதாவது ஒரு நிமிடத்தில் 2 கேள்விகளுக்கு பதில் அளிப்பது முக்கியம். தவறாக பதில் அளித்தால் நெகட்டிவ் மார்க்கிங் முறையும் உண்டு.
2 ம் கட்டத் தரவும் முதல் தேர்வைப் போலவே அப்ஜெக்டிவ் வகை தேர்வாக நடத்தப்படும். மூன்றாவது தேர்வு முறை என்பது விரிவாக விடையளிக்கும் பகுதியாகும். இவற்றில் தகுதி பெற்றால் டேட்டா என்ட்ரி திறன் மற்றும் கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வும் 4 ம் கட்டமாக நடத்தப்படும்.

