
பிளஸ் 2 முடித்துள்ள நான் பி.காம். படிப்பில் சேர்ந்துள்ளேன். அதை முடித்த பின் வங்கிப் பணியில் சேர விரும்புகிறேன். இப்போதிருந்து என்ன செய்ய வேண்டும்?
கார்த்திக், காஞ்சிபுரம்
அனைத்து விதமான பட்டப் படிப்புகளுக்குப் பின் போட்டித் தேர்வுகளை எழுதி அரசுத் துறையிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ வேலை பெற விரும்பும் பலரும் உங்களை போல பட்டப் படிப்பின் துவக்கத்திலேயே அதைப் பற்றி யோசித்து அதற்கேற்ப தயாராகத் துவங்கினால் வேலை பெறுவது பெரிய விஷயமாக இருக்காது. இனி உங்களுக்கான விளக்கம்.
அடிப்படையில் எந்தப் போட்டித் தேர்விலும் இடம் பெரும் பகுதிகள் இவைதான்.
* ஆங்கில மொழித் திறன்
* கணிதத் திறன்
* பகுத்தாராயும் ரீசனிங் திறன்
* பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் ஆங்கில மொழித் திறன் பெற நீங்கள் செய்யக்கூடியது:
* அடிப்படை ஆங்கில இலக்கணத்தை ஆழமாக கற்றுக் கொள்வது
* தினமும் புதிதான ஆங்கில வார்த்தைகளை அவற்றின் பயன்பாட்டுடன் அறிவது
* ஆங்கிலத்தில் நிறைய படிப்பது, கேட்பது, பேசுவது மற்றும் எழுதுவது பெரும்பாலும் பலரும் பிளஸ் 2 வரை கணிதம் படிக்கிறோம். எனினும் போட்டித் தேர்வு கணிதம் என்பது ஒரு சவால் தான். எனவே அடிப்படை கணிதத் திறனை முறையாக கற்றுக் கொண்டு அதில் நிறைய பயிற்சி செய்ய வேண்டும்.
இது போலவே வெர்பல் மற்றும் நான் வெர்பல் பகுதிகளை உள்ளடக்கிய ரீசனிங் அடிப்படையை சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.
பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகளுக்கு செய்தித் தாள்களை படித்தாலே போதும்.
3 ஆண்டுகளில் நீங்கள் போட்டித் தேர்வுகளை அணுகுவதற்கான சிறப்பான அடிப்படைகளை நன்றாக கற்றுக் கொள்ளலாம்.

