தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வெற்றிக்கான ஆறு மென்திறன்கள்

வெற்றிக்கான ஆறு மென்திறன்கள்

வெற்றிக்கான ஆறு மென்திறன்கள்


PUBLISHED ON : ஏப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் தற்போது படித்துவருபவர்களிடையே பெரும் புகழ் பெற்றிருப்பது ஐ.டி., எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறைதான். பொறியியல் சார்ந்த இதர துறைகள் இதற்கு அடுத்த இடம் பிடிக்கின்றன. தொழில் நுட்பம் சார்ந்த படிப்பு என்பதுடன் சமூகத்தில் இந்தத் துறைகளுக்கு இருக்கும் மரியாதை, உலக நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு, கணிசமான சம்பளம், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக இந்தப் படிப்புகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

சமூக தளத்தில் இருந்து பார்க்கும் போது இது நியாயமான எதிர்பார்ப்புதான். ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எண்ணுவதுதான் முறையான ஒன்றாக இருக்க முடியும். இதற்கான பயிற்சிகளை படிக்கும் காலத்தில் போதுமான அளவில் மேற்கொண்டு தற்போது நிலவும் கடும் போட்டிகளுக்கு நடுவே இளைஞர் பட்டாளம் தங்கள் மனதிற்குப் பிடித்த தொழில் நுட்ப படிப்புகளையும் இதர படிப்புகளையும் மேற்கொள்கிறார்கள்.

பட்டப் படிப்பை முழுமையாகவும், நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இதன் பின்னர் கேம்பஸ், ஆப்-கேம்பஸ் என்ற முறைகளிலும், போட்டித் தேர்வுகள் எழுதியும் தங்களுக்கான பணியைப் பெறுகிறார்கள். இதுவரை எல்லாம் சுகம்தான். நிறுவனத்தில் இவர்கள் இணைந்த பின்னர்தான் சோதனைகள் துவங்குகிறது. ஏனென்றால் நிறுவனங்கள் என்பவை தனி மனித உழைப்பினால் மட்டும் உயர்பவை அல்ல. கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய தொடர் முயற்சிகள் ஆகியவற்றுடன் குழுவாகப் பணியாற்றும் தன்மையுடன் அவை தொடர்ந்து இயங்கினால் மட்டுமே எட்டிய இலக்குகளை இருத்தி வைத்துக் கொள்ள முடியும்.

என்ன தேவை:



தொழில் நுட்ப ரீதியாக மிகச் சிறந்த திறன்களை பெற்றிருந்த போதும், இன்றைய நிறுவங்களில் பணி புரிவதற்கு அடிப்படைத் தேவையாக வரையறுக்கப்படும் மென்திறன்களை ( சாப்ட் ஸ்கில்ஸ் ) மிகச் சிலரே பெற்றிருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன. மேலாண்மைத் திறன் என்ற பக்குவத்திலிருந்து தலைமைப் பண்புகள் சார்ந்த பரிணாம வளர்ச்சி கண்டு வரும் இன்றைய நிறுவனங்களில் மென் திறன்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தொடர்ந்து பணி உயர்வு காண முடியும் என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பணியில் இருக்கும் ஒருவர் தொழில் நுட்ப ரீதியான அம்சங்களை முழுமையாக அறிந்திருப்பதுடன், தேவைப்படும் போது இவற்றை தங்கள் குழுவினரிடம் மிக மிக எளிய முறையில் விளக்குவதுதான் இன்றைய நிறுவனங்களின் வெற்றிக்கான ஆதாரம் என்று சர்வதேச நிறுவனங்கள் கருதுகின்றன. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமான திட்டமிடல் என்ற நிலையில் ஒருவரின் திறன்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் திட்டமிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்தும் 'எக்ஸிக்யூஷன்' என்ற நிலையில் அவரின் மென்திறன்கள் மட்டுமே கை கொடுக்கின்றன.

ஆக துறை சார்ந்த திறமைகளுடன் மென்திறன்களைப் பெற்ற ஒருவர் மட்டுமே இனி வரும் காலங்களில் நிறுவனங்களில் மேன்மை பெற முடியும் என்று துறை சார்ந்த வல்லுனர்கள் அழுத்தமாக கூறுகிறார்கள். இந்த மென்திறன்கள் என்னென்னவென்று தெரியுமா ?

அனைவருடனும் சகஜமாகப் பழகும் தன்மை, குழு மனப்பான்மை, சமூக அந்தஸ்து, தொழில் சார்ந்த நாகரீகம், ஒப்பந்தம் செய்யும் திறன், நடத்தை, ஊக்க சக்தி, கால மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நடத்தையுடன் கூடிய திறன்கள் என்பவைதான் அவை. இந்த மென்திறன்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா இல்லையா என்ற சுய ஆராய்ச்சியை உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதே உங்கள் பணி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.

பயிற்சிகளை மேற்கொள்வது எப்படி:



இன்றைய தொழிலரங்கில் இருக்கும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் மென்திறன்களைப் பெற சில மணி நேரங்களில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மட்டும் போதுமா என்பதுதான். ஒரு தனி மனிதன் தன் ஆயுள் முழுமையும் இதுவரை பயிற்சி செய்து வந்த விஷயங்களை இந்தப் பயிற்சி வகுப்புகள் முழுமையாக மாற்றும் அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளதா என்பதுதான் இதற்கான காரணம். ஆனால் இன்றைய தொழில் அரங்கத்தின் தேவை நமக்கு சுட்டிக் காட்டுவது எல்லாம் இதுதான் - சிறந்த பணி எதிர்காலத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த மென்திறன்களைப் பெற்றே ஆக வேண்டும் என்பதுதான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us