PUBLISHED ON : செப் 17, 2014

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை.
எளிதாக கிடைத்த சான்று: அங்கு ''ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலில் மாதுளை கன்றுகளை வளர்த்தார். உரமிட இப்பகுதியில் உள்ள இலை, தழைகளை மட்டும் பயன்படுத்தினார். மாடுகளின் சாணத்தை மட்டுமே உரமாக இட்டார். மாடுகளுக்கு வழங்கும் உணவில் கூட ரசாயனம் கலந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் இவரது பழ உற்பத்திக்கு உலகளவிலான 'ஆர்கானிக் சான்று' எளிதாக கிடைத்து விட்டது. ஐ.எஸ்.ஓ., சான்றும் கிடைத்து விட்டது. இதனால் அடுத்து பப்பாளி, மா, பலா, திராட்சை, முருங்கை, சப்போட்டா, எலுமிச்சை, தென்னை சாகுபடி செய்தார்.
குவியும் ஆர்டர்கள்: எல்லாவற்றிற்குமே சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப் பாசனம் செய்தார். அதேபோல் வளமான, மாசற்ற இயற்கை கொடுத்த வரத்தால் விளைச்சல் நன்றாக உள்ளது. பழங்களின் நிறமும் சுவையும் உலகில் முன்னணி இடத்திற்கு போட்டியிடும் திறனை பெற்று விட்டன. எனவே உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரிடம் பழங்கள் வாங்க ஆர்டர்கள் குவிந்தன.
அழகிய பண்ணை: வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைக்கு நேரடியாக ஆய்வாளர்கள் வரத்தொடங்கினர். இதனால் பண்ணையை அழகுற அமைத்தார். 'ஹார்வஸ்ட் பிரஷ்' என்ற பெயருக்கு ஏற்ப பண்ணையில் இயற்கை உரம் தயாரிப்பது, தங்கும் குடில்கள், பணியாளர்கள் குடில்கள், விருந்தினர் குடில்கள், வாத்து, நாட்டுக்கோழி, நவீன மாட்டுப்பண்ணை, நேர்த்தியான ரோடுகள், மாட்டு வண்டி என எல்லாமே கேரள ஸ்டைலில் வடிவமைத்தார்.
இன்று தென்மாநிலங்களில் முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இங்கிருந்து பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் பழங்கள் செல்கின்றன.
மாதுளை தேன்: இங்கு மற்றொரு சிறப்பம்சம் மாதுளை தேன். நிலத்தில் 90 சதவீதம் மாதுளை சாகுபடி செய்திருப்பதால், நூற்றுக்கணக்கான தேன்பெட்டிகள் வைத்து மாதுளை தேன் சேகரிக்கிறார். இயற்கையாக விளைந்த மாதுளை என்பதாலும், மாதுளை தேன் என்பதாலும் உலக மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது. இதனால் அடுத்த பல ஆண்டுகளுக்கு கூட மாதுளை தேனுக்கு முன்பதிவு உள்ளது. கேட்ட பணம் கொடுத்து முன் பதிவு செய்துள்ளது எல்லாமே பன்னாட்டு நிறுவனங்கள் என்பது முக்கிய அம்சம்.
பாதுகாப்பு ஏற்பாடு: இங்குள்ள ஒரே பிரச்னை பழங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு. அடர்ந்த மலையடிவாரம் என்பதால் காட்டு பன்றிகள், யானை, காட்டு மாடுகள் உட்பட வனவிலங்குகள் தொல்லை அதிகம். எனவே பண்ணையை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்துள்ளார்.
வெளிமார்க்கெட்டில் எவ்வளவு விலை கிடைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் பழங்களை வழங்கி வருகிறார். கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்களுக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மாதுளை சில்லரை மார்க்கெட்டில் தெரு வியாபாரிகள் மூலம் கிடைத்து வருவது இதில் மிகவும் சிறப்பான அம்சம்.
குரியன்ஜோசப் கூறியதாவது:
''நன்மை விதைத்து, நல்லதை அறுவடை செய்'' என்று கேரளாவில் கூறுவார்கள்.
நான் மண்ணை கெடுத்து அதிக லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை. மாறாக மண்ணை வளப்படுத்தி, நிறைவான விளைச்சல் எடுக்க விரும்பினேன். நமது பழங்களை தரமாக மாசற்ற வகையில் உற்பத்தி செய்து வென்றுள்ளேன்.
அடுத்த கட்டமாக, இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக இந்த இடத்தில் பண்ணை சுற்றுலா அமைக்க திட்டமிட்டுள்ளேன். வருபவர்களை இங்கேயே தங்க வைத்து, பண்ணையை நேரடியாக பார்வையிட்டு, பழங்களை பறித்து சாப்பிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.
தொடர்புக்கு: 91 93886 10249
www.harvestfresh.in, info@harvestfresh.in
-எம்.பாண்டியராஜன்

