PUBLISHED ON : செப் 10, 2014

கரும்பு : தழைச்சத்து உர அளவைக் குறைக்க யூரியாவை நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். 25 கிலோ யூரியாவை 275 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் இருமுறை அதாவது நட்ட 90 மற்றும் 100வது நாட்களில் தெளித்தால் நிலத்தில் கரும்புக்குத் தேவையான மேலுரமாக இடப்படும் யூரியாவில் 30 கிலோ சேமிக்கலாம். மேலும் யூரியாவைத் தெளிக்கும் போது மண் ஈரமாக இருப்பது நல்லது.
கரும்பில் சோகை நோய் இரும்புச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படுகிறது. இலைகள் வெளுத்து நரம்புகளுக்கு இடையே பசுமை சோகை அடியிலிருந்து நுனிப்பகுதி வரை நீண்ட கோடுகளாக தென்படும். இவைகள் தான் இரும்புச் சத்துப் பற்றாக்குறையின் அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் பயிரில் தோன்றும் போது 2 சத அன்னபேதி உப்பை 1 கிலோ யூரியாவுடன் 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர் வளர்ச்சிக்கேற்ற அளவு நீர்க்கரைசலைத் தயாரித்து உபயோகிக்கவும். மேலும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களில் இரும்புச்சத்து உரத்தை இலைவழி மூலமாக தெளிப்பதே சாலச்சிறந்தது.
பருத்தி : பருத்தி செடி முளைத்து சுமார் 30 நாட்களான இளம் பருவத்திலும், காய் முதிர்ந்த நிலையிலும் செம்பட்டை எனப்படும் சிவப்பு இலைகள் தோன்றக்கூடும். இது மக்னீசியம் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது. வயலில் தண்ணீர் தேங்குவதாலும், மண்ணில் சாம்பல் சத்து அளவு அதிகரிக்கும் போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இலைகளில் நரம்புகள் பசுமை நிறத்துடனும், நரம்புகளுக்கு இடையிலுள்ள பகுதிகள் செந்நிறமாகவும் காணப்படும். முற்றிய நிலையில் இலைக்காம்பு தண்டு சிவப்பாக காணப்படும். இதனால் பருத்தியின் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறைகிறது. இதனை நீக்க 500 கிராம் மக்னீசியம் சல்பேட்டையும் 100 லிட்டர் நீரில் கரைத்து இலைகளின் மீது நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
நிலக்கடலை : நிலக்கடலையில் முக்கியமாக விழுது இறங்கிய பின்பும் காய் பிடிக்காமல் போகும். இது பெரும்பாலும் போரான் என்னும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவாகும். இதை நிவர்த்தி செய்ய 0.2 சத போராக்ஸ், ஒரு சத பொட்டாஷ் மற்றும் 0.5 சத யூரியா நீர்க்கரைசலை விதைத்த 30 மற்றும் 40 நாட்களில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும். (400 கிராம் போராக்ஸ், 2 கிலோ பொட்டாஷ் மற்றும் 1 கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்).
பயறுவகைப் பயிர்கள் : தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை அளிக்கக்கூடிய வகையில் 2 சத டிஏபி மற்றும் 1சத பொட்டாஷ் உரக்கரைசலை பூக்கும் தருணத்திலும் பின் 15 நாட்கள் கழித்தும் இருமுறை மாலை வேளையில் தெளிப்பதால் பயிர்களும் வறட்சியை தாங்கி நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகரிக்கிறது. ஒரே ஒருமுறை தான் இலை வழியாக தெளிக்க முடியுமென்றால் அதே பூக்கும் தருணத்தில் தெளிப்பது மிகச் சிறந்ததாகும்.
-கொ.பாலகிருஷ்ணன்,
விதை அறிவியல் மற்றும்
நுட்பவியல் துறைத் தலைவர், விவசாயக் கல்லூரி, மதுரை.

