/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாமை
/
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாமை
PUBLISHED ON : ஜன 29, 2025

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில் குறைவான இடுபொருள் செலவில் கூடுதல் லாபம் தரும் சாமை விதையை சரியான பருவத்தில் விதைப்பது அவசியம். தமிழகத்தில் பொதுவாக சாமை தனிப்பயிராக சாகுபடி செய்யப்பட்டாலும் மலைவாழ் விவசாயிகள் துவரை,
பேய் எள், அவரை, சோளம், கடுகுடன் சாமையை கலப்புப் பயிராக விதைக்கின்றனர். சாமையை துவரை, அவரை, பேய் எள் அல்லது கடுகு ஏதாவது ஒன்றுடன் 8க்கு 2 என்ற விகிதத்தில் ஊடு பயிராக விதைப்பது அதிகப்பலன் தரும். சாமையில் அத்தியேந்தல் (ஏ.டி.எல்.1) ரகம் உயர் விளைச்சல் தரக்கூடியது. வறட்சியைத் தாங்கும். கரிப்பூட்டை, இலையுறை அழுகல் நோய், இதர நோய்களை தாங்கி வளரும். பயிர்கள் சீராக ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைவதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். 66.3 சதவீத அரவைத்திறன் கொண்டது. சத்தான தானியத்துடன் சுவையான தட்டை கால்நடைகளுக்கு தீவனமாகிறது.
சாகுபடி செய்வது எப்படி
சாமை வயது 85 முதல் 90 நாட்கள். ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு ஏற்றது. எக்டேரில் வரிசை விதைப்புக்கு 10 கிலோ அளவும் தெளிப்பு விதைப்புக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி 25க்கு 10 செ.மீ. இருக்கவேண்டும். ஒரு எக்டேருக்கான விதையுடன் 3 பொட்டலம் (600கிராம்) அஸோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டேருக்கான விதையுடன் 10 பொட்டலம் (2000 கிராம்) அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து துாவ வேண்டும்.
உர நடைமுறை
எக்டேருக்கு 44:22 என்ற அளவில் தழை, மணிச்சத்து உரமிட வேண்டும். கடைசி உழவின் போது எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் அல்லது 6.25 டன் கம்போஸ்ட் பரப்பி நிலத்தை உழவேண்டும். 22 கிலோ தழைச்சத்து மற்றும் 22 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக இடவேண்டும். விதைத்த 18 முதல் 20ம் நாளில் செடிகளைக் கலைத்து விட்டு சரியான அளவில் பயிர்களின் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். மேலுரமாக எக்டேருக்கு 20 கிலோ தழைச்சத்தை கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி விதைத்த 20 முதல் 25 நாட்களில் இடவேண்டும். விதைத்த 18 - 20ம் நாள் ஒருமுறையும், 40ம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறை களை எடுக்கலாம்.
இப்பயிரை பொதுவாக பூச்சி, நோய் தாக்குவதில்லை. குருத்து ஈ வராமல் கட்டுப்படுத்த வேண்டுமெனில் விதைப்பைத் தள்ளிப்போடாமல் பருவமழை தொடங்கிய உடனே விதைக்கலாம். 85 - 90 நாட்களில் கதிர்கள் காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்யலாம். கதிர்களை களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்த பிறகு மீண்டும் காயவைத்து சேமிக்க வேண்டும். முறையான பயிர் பராமரிப்பு உர நிர்வாகத்தை மேற்கொண்டால் 1600 முதல் 1700 கிலோ சாமை தானிய மகசூல் கிடைக்கும். 3100 முதல் 3300 கிலோ தீவனத் தட்டை கிடைக்கும். திருவண்ணாமலை அத்தியேந்தலில் உள்ள சிறுதானிய ஆராய்ச்சி நிலையம் ஏ.டி.எல்.1 ரக விதைகளைப் பெறலாம்.
- சிங்காரலீனா
விதைச்சான்று உதவி இயக்குநர்,
மதுரை