
நீர்க்கடம்பை மரம் என்பது அடம்பை, கடப்பை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஏரி, குளம், ஆறு ஆகிய நீர் சுரப்பிகளில் இந்த மரத்தைக் காணலாம். இது நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் ஒரு சிறப்பான மரமாகும். இதன் இலைகள் நீர்த்தடாகங்களில் விழும்போது அந்த நீர் குடிநீராக மாறுகிறது என்று கூறப்படுகிறது.
ஆறில் இருந்து ஒன்பது மீட்டர் வரை இந்த மரத்தின் உயரம் படர்ந்து விரிந்து வளர வல்லது. இது பசுமை மாறாத இலைகளைக் கொண்டுள்ளது. இலைகள் தலைகீழாக முட்டை வடிவத்தில் தொங்கும் நிலையில், மிகவும் அழகான சிறிய சிவப்பு பூக்களுடன் காணப்படுகின்றன.
மேலும் இந்த இலைகள் சரீரத்தில் ஓரளவு கேடான நண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. முக்கியமாக வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு காரணமாக உள்ள நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்துகின்ற ஒருவகையான மருத்துவப்பண்பு கொண்டுள்ள விசேஷ பொருள் இதன் இலைகளில் காணப்படுகிறது என்பதாக வேதியியல் விஞ்ஞானிகள் விளம்புகின்றனர்.
இந்த மரத்தின் பட்டைகள், நீர்த் தடாகங்களில் உள்ள மீன்களை மயக்கம் அடையச் செய்யும் ஒருவிதமான ஒவ்வாமைப் பொருளைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் கிராமிய மீனவர்கள் மீன்களை ஓரிடத்தில் தொகுப்பாகப் பிடிப்பதற்கு என்றே இந்த மரப்பட்டைகளைச் சிதைத்து நீரில் இட்டு பயன் அடைகிறார்கள். பொதுவாக இந்த நீர்க்கடம்பை மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பல உள்ளன. பெரும்பாலும் மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
இதன் விதைகள் தூளாக்கப்பட்டு இருமல் நீக்கியாகவும் தலைவலியைப் போக்கிடும் மூக்குப் பொடியாகவும் பயன்படுகின்றன. இலைகளும் வேர்களும் (துவர்ப்புடன் கூடிய) ஊட்டம் அளிக்கின்ற டானிக் ஆக உருவாகின்றது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மருந்துகளின் தயாரிப்புகளில் வேர் வெகுவாகப் பிரயோகிக்கப்படுகிறது.
''இத்தகைய உயர்ந்த மருத்துவப் பண்புகள் கொண்டுள்ளமைக்கு காரணம் 'பேரிஸ்டோனின்' என்ற 'சேப்போனின்' வகை குளூக்கோசைடே ஆகும். மரத்தின் பட்டையைப் பொறுத்த அளவில் பதினாறு சதவீத அளவுக்கு 'டேனின்' காணப்படுகின்றது என்பது விஞ்ஞான ஆய்வு'' - புதுச்சேரி மருத்துவர் என்.லோகநாதன். (ஆதாரம்: ஸ்பைசஸ் இந்தியா, சஞ்சிகை, கொச்சி).
தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் இந்த நீர்க்கடம்பை மரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த நீர் சுத்தமும் சுவையும் சுகமும் அளிக்கின்றது எனலாம். நாட்டு மருந்து தயாரிப்பாளர்களுக்கு இந்த மரத்தின் பாகங்களை விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். மிகுந்த நிழலை அளிப்பதாலும் குளிர்ச்சியைத் தருவதாலும் இந்த மரம் நீர்நிலைகளில் வளர்வதற்குப் பேருதவியாக அமையும்.
-எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.