அசோலாவில் புரதம், அமினோ அமிலம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன. அசோலாவில் காய்ந்த நிலையில் 30 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் 20 சதம் அமினோ அமிலம் உள்ளதால் கால்நடைகளுக்கு செரிமானச் சக்தி தருகிறது.
விளைநிலங்களுக்கு: அண்டை மற்றும் மேலை நாடுகளில் நெல் விளையும் பகுதிகளில் அசோலாவையும் பயன்படுத்தி தழைச்சத்தை நிலைப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுகிறது. இது ஒரு ஏக்கருக்கு 3-4 கிலோ வரை தழைச்சத்தை தரும். இது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நெற்பயிர்களுக்கு கொடுக்கும். வயல்களில் களை வளராது. மேலும் யூரியாவினால் எந்த அளவு பயன் உண்டோ அந்த அளவிற்கு பயன் உண்டு. மேலும் மற்ற உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக அசோலா பயன்படுத்துவதன் மூலம் இயற்கை நெல் உற்பத்தி செய்வதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும்.
இனிவரும் காலங்களில் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அதிகம் விலை கிடைக்கும். மேலும் சப்போட்டா, மாதுளை செடிகளுக்கும் அடி உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது அதிகப் படியான மகசூல் கிடைக்கும். மேலும் விளைச்சல் பல மடங்கு பெருகும்.
ஆக நெல் விவசாயிகள் மற்றும் பழவகை உற்பத்தியாளர்கள் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரமான அசோலாவை பயன்படுத்தலாம். இது எல்லா வகையிலும் பயன்படுவதாக அமையும். செலவுகுறைவு. மண்வளம் காத்தல் போன்றவயாகும்.
கால்நடைகளுக்கு: மீன்: மீன் பண்ணைகள் இப்பொழுது பலர் வைத்துள்ளனர். அசோலா அங்கும் பெரும்பங்கு வகிக்கின்றன. மீன் குஞ்சு விட்ட 35 நாட்களுக்கு மேல் 1000 குஞ்சுகளுக்கு தினமும் 2 கிலோ வரை பரவலாக தூவ வேண்டும். இதில் கெண்டை வகை மீன்கள் 100 நாட்களைத் தாண்டும்பொழுது முக்கால் முதல் ஒரு கிலோ வரை எடைகூடும்.
முயல், பன்றி: முயல் பண்ணை வைத்திருப் பவர்களும் அசோலாவைப் பயன்படுத்தலாம். இதனால் பசுந்தீவன பிரச்னை தீரும். ஒரு முயலுக்கு 75-100 கிராம் வரை தரலாம். இதனால் அதிக ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கும். பன்றிகளுக்கு தரும்பொழுது அதிக எடை தரக்கூடியதாக இருக்கும். அதிக லாபம் பெற முடியும்.
மாடு, ஆடு, கோழி: மாடுகளுக்கு அசோலா தினமும் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம். அதனால் அதிகப்படியான பால் கிடைக்கும். மாடுகள் அதிகம் ஆரோக்கியமாக இருக்கும். தவிடு மற்றும் வைக்கோலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 40 சதவீதம் அசோலா பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவு குறைவு. பொருட்செலவு கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக லாபம் கிடைக்கும். செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அசோலாவைப் பயன்படுத்து வதன்மூலம் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் அதிக எடை கிடைக்கும். கோழிகளுக்கு கொடுக்கும்போது முட்டை அதிக எடை கிடைக்கக்கூடும்.
மனிதர்களுக்கு: மனித வாழ்வின் மாற்றத்தை தரப்போகும் அசோலா கால்நடைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இதை ஒரு வகை கீரை எனக்கூறலாம். (பெரணி) மேலும் வைரஸ் காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை அழிக்கும். இதை வீடுகளில் கூட சிறிய அளவில் வளர்க்கலாம்.
வளர்க்கும் முறை: 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்ட சில்பாலிதீன் கவர். அதை ஒரு அரை அடி உயரம் கொண்ட பாத்திபோல் அமைத்து அதில் சலித்த செம்மண் ஒரு இஞ்ச் அளவிற்கு சம அளவில் பரப்ப வேண்டும். மேலும் 3 இஞ்ச் அளவிற்கு நீர் நிரப்பி அதில் 10 கிலோ பசுஞ்சாணம் நன்கு கரைத்து விடவேண்டும். பிறகு அசோலா விதைகளை அதில் தூவ வேண்டும். இது 6-7 நாட்களில் அந்த பாத்தி முழுவதுமாக வளர்ந்துவிடும். நமது தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.
விதைகள் மற்றும் விபரங்களுக்கு அசோலா ஆய்வகம், செட்டிபாளையம், பொள்ளாச்சி-4 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பிற செய்திகளைப் பெறலாம். வேலி மசால் (ஆட்டிற்கு தேவையான) விதைகள் உள்ளன.
ர.திருமூர்த்தி, 88830 37842.