தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பெருலாபம் தரும் பிரண்டை வளர்ப்பு

பெருலாபம் தரும் பிரண்டை வளர்ப்பு

பெருலாபம் தரும் பிரண்டை வளர்ப்பு


PUBLISHED ON : ஜன 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரண்டையில் கால்சியம் (ஆக்சலேட் வடிவில்; 100 கிராம் தண்டில் 267 மி.கிராம் என்ற அளவில்), கரோடீன், 'சி' ஊட்டச்சத்து (அஸ்கார்பிக் ஆசிட் வடிவில்; 100 கிராம் தண்டில் 398 மி.கிராம் என்ற அளவில்), நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. ஆண்மைக்குறைவு, தாது நஷ்டம், சூதக வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகள், சோம்பல், பசியின்மை, ருசியின்மை, எலும்பு முறிவு, வாய்ப்புண், வாய்நாற்றம், அல்சர், மூலம், பொலிவற்ற சருமம், ஆஸ்துமா, நீரிழிவு, கண்பார்வை கோளாறு, கண் எரிச்சல், உடல் பருமன் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் அருமருந்தாக பிரண்டை திகழ்கிறது. மூலிகை சாகுபடி செய்வோரை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பல்வேறு வியாபார பெயர்களில் விற்பனைக்கு வரும் இயற்கை மருத்துவ தயாரிப்புகளில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தயாரிப்புகளில் பிரண்டை தண்டோ, இலையோ, சாறோ நேரடியாக சேர்க்காமல் பிரண்டை உப்பும், பிரண்டை பஸ்பமும் பயன்படுத்தப்படுகிறது. பிரண்டை உட்பட ஏறக்குறைய எல்லா மூலிகைகளிலும் தாவரத்தின் வேர், தண்டு, இலை, பூ, காய் என அனைத்து பகுதிகளும் பல வகைகளில் பயன்படுகின்றன. உயரிய லாபவிகிதம் கொண்ட பிரண்டையை ஒருமுறை சாகுபடி செய்து காபி, தேயிலை பயிர்களைப் போன்று பலமுறை அறுவடை செய்யலாம்.

வறட்சியை தாங்குவதில் மன்னன். சாகுபடி நுட்பங்களும் மிக எளிதானதாகும். இதனை ஆடு, மாடுகள் அண்டாது என்பதால் வேலி அமைப்பதற்கு பெருந்தொகை செலவு செய்ய வேண்டியதில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் மொட்டை மாடியில் தொட்டியில் இதனை சாகுபடி செய்யலாம். வாரக்கணக்கில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் சாகாது. திரும்பவும் நீர் ஊற்றியதும் உயிர்த்தெழும். சிரஞ்சீவியாய் நின்று பலன் தரும்.

பிரண்டையிலிருந்து மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி ஊறுகாய், ஜாம், ஜெல்லி ஆகிய தின்பண்டங்களையும் தயாரித்து சந்தைப் படுத்தலாம். தங்கள் வீட்டிலும் ஒரு பிரண்டை கொடி வளர்க்க ஆர்வம் கொண்டவர்கள் 'டி.கே.சிவராஜ், விஞ்ஞானி, ஆராய்ச்சித்திட்ட வளாகம், எஸ்.கே.புரம்-627 602, பாப்பாக்குடி அஞ்சல், திருநெல்வேலி' என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பிரண்டை கன்றினை இலவசமாக பெறலாம். கமகமன்னு குழம்பு வெச்சிராதீங்க! நடுங்க... திராட்சை கொடிபோல் அழகா படரும்.

நாஞ்சில் நாட்டு பிரண்டை குழம்பு

தேவையான பொருட்கள்: இளம் பிரண்டை தண்டு-250 கிராம், சுத்தம் செய்த புளி-100 கிராம், மிளகாய்தூள்-15 கிராம், இஞ்சி-15 கிராம், மிளகுதூள்-25 கிராம், முற்றிய தேங்காய்பால்-1 கப், சின்னவெங்காயம்-125 கிராம், தக்காளி-100 கிராம், மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி, சீரகதூள்-1 தேக்கரண்டி, கடுகு-1 தேக்கரண்டி, வெந்தயம்-1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி (தாளிக்க), உப்பு - தண்ணீர் - தேவைக்கு.

செய்முறை: நன்றாக மிக்சியில் அடித்த பிரண்டை தண்டை புளி கரைத்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இத்துடன் சீரகபொடி, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, மிளகுபொடி, மிக்சியில் அடித்த வெள்ளை பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலக்கி, தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் வதக்கி போடவும். தேங்காய்பாலை ஊற்றி கலக்கி கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். வட்ட துண்டுகளாக வெட்டிய தக்காளியை போட்டு இறக்கவும். எந்த உணவையும் அதிக சூட்டிலோ, அதிக குளிரிலோ சாப்பிட்டால் அதன் சுவை தெரியாது. எனவே மூடி வைத்து ஒரு மணிநேரம் கழித்து பரிமாறவும். சுடுசோற்றுக்கு ஏற்ற வலுவான சைட் டிஷ் இது. இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் சாண்ட்விச் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அமர்க்களமாக இருக்கும். உடம்புக்கு வலுவும் வனப்பும் தரும் காரணிகள் அடங்கியது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

டி.கே.சிவராஜ், விஞ்ஞானி, பாப்பாக்குடி, திருநெல்வேலி-627 607.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us