PUBLISHED ON : மார் 21, 2018

கோடையில் கால்நடைகளுக்கு அதிகப்படியான அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கிறது. விவசாயிகளுக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது. கோடையில் கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்க்க விவசாயிகள் நிகழ்கால நடவடிக்கைகளையும், எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
சுற்றுப்புற வெப்பத்தின் அளவு கோடையில் அதிகமாவதால், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவதோடு, அவற்றின் இனப்பெருக்க செயல்களும் மறைமுகமாக பாதிக்கிறது. வெளிப்புற வெப்பநிலை கூடுதலாகும் போது கறவை மாடுகள் அன்றாடம் தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு குறையும். இதனால் பால் உற்பத்தி குறையும். நாம் கொடுக்கும் தீவனப்பொருட்களேயே பாலாக கறவை பசுக்கள் மாற்றித் தருகின்றன. 'சட்டியிலே இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பதை சிலர் புரிந்து கொள்வதில்லை. கறவை மாடு தீவனம் எடுக்கிறதோ இல்லையோ பாலை மட்டும் குறைவில்லாமல் கறக்க வேண்டுமென நினைப்பவர்களும் உண்டு.
வெப்பம் தவிர்க்க வழி:
வெப்பம் கூடுவதால் 20 சதவிகிதம் பால் உற்பத்தி குறைபாடும், 10 முதல் 20 சதவிகிதம் சினைப் பிடிப்பதில் இடையூறுகளும் உண்டாகும். பொதுவாக கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது கறவை மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கும். கறவை எருமைகள் என்றால் உடல் வெப்பத்தைக் குறைக்க நீர் நிலைகளில் நீந்த ஆர்வம் கொள்ளும் அல்லது ஈரப்பதம் அதிகம் உள்ள தரைகளில் படுக்கத் துவங்கும். அதிக வெப்பத்தின் காரணமாக கறவை மாடுகளில் சுவாசிக்கும் நேரங்களில் மூச்சிரைப்பு உண்டாகும். எனவே கோடை வெப்பத்தில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டுத்தொழுவங்கள் ஓலை மற்றும் கீற்றுக் கொட்டகைகளாய் அமைந்தால் உள் வெப்ப நிலை ஓரளவு குறையும். ஓடுகளால் கூரை வேய்ந்திருந்தால், இக்கோடை காலத்தில் ஓடுகளின் மேல் நல்ல வெயில் நேரத்தில் நீரை தெளித்து விடலாம். ஓடுகளின் மேல் தென்னை நார்க்கழிவு, வைக்கோல் போன்றவற்றைப் பரப்பி நீரைத் தெளிக்கலாம்.
பசுந்தீவனம் ஏற்றது:
கறவை மாடுகள் கோடையில் ஒரு பகுதி தீவனம் சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்று பகுதி தண்ணீர் குடிக்கும். அவற்றின் தண்ணீர் தேவை கோடையில் அதிகரிப்பதால் விவசாயிகள் காலை 7:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வெப்பத்தினை கருத்திற்கொண்டு, தினமும் 100 கிராம் முதல் 200 கிராம் வரை அசோலாவை தீவனத்தில் சேர்க்கலாம். மேலும் கறவை மாடுகள் பகலில் தீவனம் எடுப்பதை விட இரவு நேரங்களில் கூடுதலான தீவனங்களை சாப்பிடும். எனவே பகல் தீவன அளவை குறைத்து இரவில் தீவனத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். கோடையில் பசுந்தீவனங்களான கோ-3, கோ-4 போன்ற வீரிய புல் வகைகள் அளிப்பதால் தண்ணீர் தேவையை ஒரு குறிப்பிடட்ட அளவுக்கு கிடைக்கா விட்டால் மர இலைகள், மரவள்ளிக் கிழங்கு, திப்பி போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள தீவனங்களை தரலாம்.
கோடையில் இனப்பெருக்க சிக்கல்களை தீர்க்கும் விதமாக கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு தரமான தாது உப்புக் கலவைத் துாளை தினமும் 50 கிராம் என்ற அளவில் கலப்புத் தீவனத்துடன் கொடுத்து வர வேண்டும். காலை, மாலையில் கறவை மாடுகளை சுதந்திரமாக விசாலமான அடைப்புகளில் திறந்த வெளியில் விட்டால் சினைப் பருவத்துக்கு வரும் கறவை மாடுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
வெப்பம் தவிர்க்க வழி:
கறவை மாடுகள் கன்று ஈன்ற தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் சினைப்பருவ மறு சுழற்சிக்கு எந்த நாளில் வருகின்றன என்பதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அயல்நாட்டு கறவை இனங்களான ஜெர்சி, பிரிசியன், பிரவுன் சுவிஸ் போன்ற கறவை மாடுகள் கோடையின் வெப்பத்தை ஓரளவு தான் தாங்கும். கோடை காலத்தில் இம்மாடுகளை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே கோடை வெப்பத்தினை எதிர்கொள்ளும் வகையில் ஏற்ற கறவை இனங்களை தேர்வு செய்ய வேண்டும். மாட்டுத்தொழுவங்களை அமைக்கும் போது நீள வாக்கில் உள்ள பகுதியை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். மாட்டுத்தொழுவங்களின் மேற்கூரையில் பசலைக்கொடி, மணி பிளான்ட் போன்ற அதிக இலைகளை தரக்கூடிய தாவர வகைகளை வளர்க்கலாம். மாட்டுத் தொழுவங்கள் இருக்கும் இடங்களில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும். கோடையில் பசுந்தீவங்களை தரும் விதமாக கோ-3, கோ-4 புல் வகைகளைப் பயன்படுத்தி குழிப்புல் எனப்படும் சைலேஜ் தீவன வகையாக மாற்றித்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத் திட்டத்தில் அசோலா பயிர் வளர்க்க அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை நாடலாம்.
கோடையில் கறவை மாடுகளுக்கு கோமாரி மற்றும் அடைப்பான் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மே மாதத்தில் அடைப்பான் நோய்த் தடுப்பூசியும், கால்நடை பராமரிப்புத்துறையினரால் மர்ச் மாதத்தில் போடப்படும் கோமாரி நோய்த் தடுப்பூசியையும் தவறாமல் போட வேண்டும்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை.

