sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பணம் தரும் பாசிப்பயறு சாகுபடி

/

பணம் தரும் பாசிப்பயறு சாகுபடி

பணம் தரும் பாசிப்பயறு சாகுபடி

பணம் தரும் பாசிப்பயறு சாகுபடி


PUBLISHED ON : பிப் 20, 2013

Google News

PUBLISHED ON : பிப் 20, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் தற்போது மாசிப் பட்டம் துவங்க உள்ளது. மாசிப்பட்டம் என்பதை கோடைப்பட்டம் என்றும் சொல்லலாம். கோடைகாலம் என்று சொல்லும்போது பாசனத்தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பயம் ஏற்படும். ஆகையால் விவசாயிகள் பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். சிலர் பாசிப்பயறை விட்டு உளுந்தை ஏன் சாகுபடி செய்யக்கூடாது என்று கேட்கலாம். தற்போதுள்ள பயிர்களில் பாசிப்பயறுக்குத்தான் வயது குறைவு. மேலும் பாசன நீர் தேவையும் குறைவு.

பயிர்கள்:



கரும்பு, வாழை: வயது 300 நாட்கள். தேவையான நீர்: 200-250 செ.மீ. நெல்: வயது 120-130 நாட்கள், தேவையான நீர்: 100-120 செ.மீ. எண்ணெய் வித்துக்கள்: வயது 100-105 நாட்கள், தேவையான நீர்: 60-75 செ.மீ., சிறுதானியம்: வயது 90-110 நாட்கள், தேவையான நீர்: 35-60 செ.மீ., பாசிப்பயறு: வயது 65-90 நாட்கள், தேவையான நீர்: 20-30செ.மீ.

பாசிப்பயறு சாகுபடியில் இதர நன்மைகளும் உள்ளன. மற்ற பயிர்களைவிட ஏக்கருக்கு உரச்செலவு மிகவும் குறைவு. பயிர் பாதுகாப்பிற்கு அதிக செலவு கிடையாது. பாசிப்பயறு சாகுபடி செய்த நிலம் நல்ல வளம் பெறுகின்றது. பாசிப்பயறு ஒரு பணப் பயிராகும். இதன் சாகுபடி நல்ல லாபம் தருகின்றது. இந்த லாபம் 90 நாட்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

சாகுபடி முறை:



ஒரு ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழுதுவிட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 60 கிலோஎடை கொண்ட டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் இடவேண்டும். நிலத்தில் நீர் பாய்ச்சி நல்ல ஈரப்பதத்தில் ஒரு சால் உழவுசெய்து விதை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் விதைப்பிற்கு 8 கிலோ தரமான விதை தேவைப்படும். நீர் பாசனம் செய்வதற்காக நிலத்தில் சிறு சிறு பாத்திகள் (20 அடி, 10 அடி) அமைத்துக்கொள்ளலாம். விதையினை நிலத்தில் விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி, நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு அளிக்கும் கவனம் நல்ல பலனைத்தருகிறது.

விதை நேர்த்தி:



8 கிலோ விதையுடன் 32 கிராம் திரம் அல்லது டைத்தேன் எம்.45 மருந்து கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும்.

நுண்ணுயிர் நேர்த்தி:



பயறு விதைகளுக்கு நுண்ணுயிரை விதையுடன் நேர்த்தி செய்திட வேளாண்மைத்துறை பரிந்துரைக்கிறது. விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையை ஒரு பாக்கெட் நுண்ணுயிர் கலவையுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு முதலில் நுண்ணுயிர் கலவையை அரிசிக்கஞ்சியில் கலந்து நன்கு பரப்பிய விதையில் கரைசலை தெளிக்க வேண்டும். பின் நிழலில் விதையை 15 நிமிடங்கள் உலரவைத்த பின் விதைக்க வேண்டும்.

இலைமூலம் உரமிடல்:



பாசிப்பயறுக்கு டிஏபி உரக்கரைசலை இலைமேல் தெளிக்கும்போது சுமார் 50 கிலோ கூடுதலாக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு. கரைசலை கவனமாக தயார் செய்ய வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு தேவையான டை அம்மோனியம் பாஸ்பேட் 4.5 கிலோ அளவினை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பின் தெளிந்த கரைசலை கவனமாக எடுத்து 210 லிட்டர் தண்ணீரில் கலந்து முதல் தடவையாக பூக்கும் தருணத்திலும் பின் 15 நாட்களில் இரண்டாவது தடவையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். விதைத்தெளிப்பானைப் பயன்படுத்தக்கூடாது. மருந்தடிக்கும் போது பூக்கள் கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது.

களை எடுத்தல்:



பாசிப்பயறுக்கு களையெடுத்துவிட்டால் நல்ல பயன் கிட்டுகின்றது. ஆனால் என்ன காரணத்தினாலோ பாசிப்பயறுக்கு விவசாயிகள் களையெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. களையெடுக்கப்பட்ட வயல்களில் காய்கள் கொத்து கொத்தாக செடிகளில் பிடித்திருக்கும். விதைத்த 20ம் நாள் ஒரு முறையும் 30ம் நாள் ஒரு முறையும் களையெடுத்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

நீர்ப்பாசனம்:



கோடையில் பாசிப்பயறுக்கு 6 அல்லது 9 பாசனங்கள் தேவைப்படும். விதைத்த மூன்றாம் நாள் ஒரு முறையும் பிறகு மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் கொடுக்கலாம். அதிக அளவில் பாசனம் கொடுத்தால் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டு விடுகின்றது. அதிக பாசனம் கொடுத்த இடத்தில் இலைகள் அதிகம் வளர்ந்து வெயிலில் செடிகள் துவண்டுவிடுகின்றது. இதனால் பூ பிடிப்பது பாதிக்கப்படுகின்றது. பாசனத்தை கவனித்து செய்து காய்கள் பிடிப்பதை சீராக்க வேண்டும். நாம் சாகுபடி செய்யும் பயிர்களில் குறைந்த வயதினைக் கொண்டது பாசிப்பயறு. பாசிப்பயறு குறைந்த நீர்த்தேவை கொண்டது.

பயிர் பாதுகாப்பு:



பயிரினை பூச்சி, வியாதிகள் தாக்காமல் இருக்க விதைத்த 25ம் நாள், 130 மில்லி டைமக்ரான், 500 கிராம் டைத்தேன் எம் 45 இவைகளை நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும். பயிரில்தேமல் நோய் வராமல் தடுக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய செடிகளை உடனுக்குடன் பிடுங்கி பிளாஸ்டிக் பையினுள் போட்டு தனியே எடுத்துக்கொண்டு போய் கொளுத்திவிட வேண்டும். நோய் தாக்கிய செடிகளைத் தொட்டுவிட்டு நோய் தாக்காத செடிகளைத் தொடக்கூடாது.

அறுவடை:



பாசிப்பயறில் மூன்று முதல் நான்கு அறுவடைகள் கிடைக்கும். விதைத்த 56வது நாளில் முதல் அறுவடையும், 64வது நாளில் இரண்டாவது அறுவடையும், 85வது நாளில் மூன்றாவது அறுவடையும் கிடைக்கும். நல்ல சாகுபடி முறையில் நான்காவது அறுவடை கிட்டும் வாய்ப்பும் உண்டு. விவசாயிகள் 500 கிலோ மகசூல் எடுக்க முடியும். கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை கையாண்டால் 600 கிலோ மகசூலாகக் கிடைக்கும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us