/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு
/
மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு
PUBLISHED ON : அக் 17, 2018
தமிழகத்தில் அதிகளவில் மானாவாரி நிலங்கள் தான் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி மழையை பற்றி பேசுவதும், கவலைப்படுவதும் ஆண்டு தோறும் நிகழ்வது வழக்கமான ஒன்று.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே.
மானாவாரி தீவனம்
இறவை பாசனம் செய்யும் விவசாயிகளின் வரவு செலவினை ஒப்பிட்டு எதுவும் செய்யாதிருந்து பெரும் நஷ்டத்தை அடைவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பல ஏக்கர் தரிசாக விடும் விவசாயிகள் மாற்று வழி யோசித்து, தங்களது பகுதிக்கேற்ற மரங்களை தேர்வு செய்யலாம். கால்நடைகள் வளர்க்க உறுதுணையான பல தீவன மரங்கள் வறட்சி தாங்கி வளரும் என்பது அறியாமல் உள்ளனர். நமது பகுதியில் வளர்ந்த மரங்களை கூர்ந்து கவனித்து கூட நல்ல முடிவு எடுக்கலாம்.
குறிப்பாக மரத் தீவனத் தழைக்காக கருவேல், வெள்வேல், வாகை, மந்தாரை, கல்யாண முருங்கை, சூபாபுல், வாத நாராயணன், பெருமரம், வேம்பு, பூவரசு, பலா, இலந்தை, கிளைரிசிடியா, அரசு, ஆல், ஆச்சா, மலைவேம்பு இன்னும் பலவகை வரம் தரும் மரங்கள் உள்ளன. மரத்தழைகளில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, ஊட்டச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் செரிப்புத்திறன் அதிகமாக உள்ளது.
முளைப்பாரி தீவனம்
மானாவாரி களர், உவர் நிலங்களில் வில்வ மரம் நன்கு வளரும். அவற்றை ஆடுகள் விரும்பி உண்ணும்.
இவை தவிர வாதாங் கொட்டை மரம், இலுப்பை மரம், கொடுக்காப்புளி, இலவம் மரம், செடி முருங்கை, மர முருங்கை, அகத்தி, அத்திமரம், மகிழம்பூ மரம், புளியமரம் ஆகியவை மூலம் நாம் நிறைய தழைகள் பெறலாம்.
எனவே மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகள் இவற்றை தனது தோட்டத்தில் நட்டு பசும்புல் கிடைக்காததால் மாடு வளர்க்கவில்லை என்று கூறாமல் குறைந்த நீர் கொண்டு டிரே முறையில் தீவனச் சோளம், முளைப்பாரி, ராகி முளைப்பாரி மற்றும் பார்லி, கோதுமை, முறைத்த இளஞ்செடிகள் உற்பத்தியும் செய்து கால்நடை வளர்க்கலாம். வாய்ப்புள்ளவர்கள் வளர்த்து விற்பனையும் செய்யலாம். பலவகை மரங்களின் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள், உலர்த்திய தழைகள், ஊறுகாய்வற்றல் எனும் சைலோ உத்திகள் மூலமும் வருமானம் ஈட்டலாம்.
தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி.

