PUBLISHED ON : அக் 17, 2018

வனப்பகுதிகளில் வாழும் காடை புதர்களிலும், பொந்துகளிலும் வசிக்கும் காட்டுக் காடைகளாகும். இந்திய வன விலங்குச் சட்டப்படி, இவற்றை பிடிப்பது குற்றம். ஆனால் ஜப்பானிய காடைகள் என்ற இனம் வீடுகளிலும், பண்ணை அளவிலும் வைத்து வளர்க்க ஏற்றவை. கோழி இறைச்சியை சாப்பிடும் பழக்கம் துவங்கும் முன்னரே, மனிதன் காடை இறைச்சியை உண்டதாக ரோமானிய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
காடை இறைச்சி மிகவும் ருசியானது. இதனால் விருந்துகளில் சிறப்பு மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. காடைமிகச்சிறிய அளவில் இருப்பதால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.
காடைகள் மிகக்குறுகிய காலத்திலேயே, அதாவது ஐந்து அல்லது ஆறு வார இறுதியில் விற்பனைக்கு தயாராகி விடும். எனவே, முதலீடு செய்த இரண்டு மாதங்களுக்குள் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்து அல்லது ஆறு வார வயதில் ஒரு காடை சராசரியாக அரைக்கிலோ தீவனம் சாப்பிடும். இதனால் தீவனச் செலவும் குறைவு. கோழிகளுக்கு பல தடுப்பூசிகள் போடுவது போல் காடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. கோழி இறைச்சியை காட்டிலும் காடையின் இறைச்சியில் கொழுப்புச்சத்து குறைவு. புரதசத்து அதிகம்.
காடைகள் குறைந்த இட வசதியில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகிறது. தீவனத்தில் நார்ச்சத்து குறைவு இருந்தாலும், காடைகள் ஒன்றை ஒன்று கொத்திக்கொள்ளும்.
இதனால் காடைகளில் ரத்தப்போக்கு காரணமாக இறக்க நேரிடலாம். தீவனத்தில் நார்ச்சத்து அளவை அதிகப்படுத்துவதால் இக்குறைபாட்டை நீக்கலாம். கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் சில சமயங்களில் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் போதுமான தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின் போதுமான அளவில் கொடுக்காமலிருந்தால் இவ்வாறு நேரலாம். காடைக் குஞ்சுகளில் தீவனத்தில் தாது உப்புக்கலவை 2.5 சதவீத அளவிலும், மங்கனீஸ் சல்பேட் ஒரு டன் தீவனத்தில் 200 கிராம் வீதம் கலந்து தருவதால் கால் வலுவிழந்த குஞ்சுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
காடைகளுக்கு சாதாரணமாக நுரையீரல் அழற்சி, பூஞ்சான நஞ்சு, தொப்புள் அழற்சி, ஈகோலி நோய், காடைக் கழிச்சல் நோய்கள் ஏற்படும்.
இந்நோய்கள் தவிர கோழிகளை தாக்கும் 'மேரெக்ஸ்' வாத நோய், 'ராணிக்கெட்' கழிச்சல் நோய், 'காக்சிடியோஸிஸ்' எனும் ரத்தக் கழிச்சல் நோய்களும் காடைகளை பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விட காடைகளுக்கு நோய் எதிர்க்கும் திறன் அதிகம் இருப்பதால், இவ்வகை நோய்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியம் இராது.
ஜப்பானிய காடைகள் தவிர நியூசிலாந்து காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, சைனாக்காடை போன்ற ரகங்களும் உள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில் நந்தனம் - 1, நந்தனம் - 2, நந்தனம் - 3, நாமக்கல் காடை - 1, நாமக்கல் தங்கக்காடை ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானியக் காடைகளின் முட்டையிடும் தருணம் மாலை நேரமேயாகும். முதல் முட்டை ஜப்பானிய காடையிடமிருந்து 7 வது வாரத்தில் கிடைக்கும். ஒரு ஆண் காடையுடன் 3 பெண் காடைகளை இன விருத்தி செய்யலாம். தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
நத்தம்.

