PUBLISHED ON : பிப் 26, 2025

காற்றடித்தாலும் சாய்ந்து விடாத குட்டையான காவிரி வாமன் ரக வாழையை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இம்மாதம் தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலம் இந்த ரகம் வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு முறையில் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் 1993 ஆகஸ்டில் திருச்சியில் துவங்கப்பட்டது.
இந்தியாவிலேயே காவிரி டெல்டா பகுதிகளில் தான் பச்சை நாடன், கற்பூரவள்ளி, மனோரஞ்சிதம் கருவாழை, நேந்திரம், நெய்பூவன், பேயன் உட்பட 15 வகையான ரகங்கள் பயிரிடப்படுகிறது. மற்ற இடங்களில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று ரகங்கள் மட்டுமே பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் 10 லட்சம் எக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு அதன் மூலம் 370 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி ஆகிறது. உலக உற்பத்தியில் இந்தியாவிற்கு முதலிடம். உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய பழங்களின் வரிசையிலும் வாழைக்கு தான் முதலிடம். மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
இந்தியாவில் பழமாக சாப்பிடப் படும் ரகங்கள் தான் அதிகபட்சம் உற்பத்தி ஆகிறது. கென்யா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில், சமையலுக்கான வாழைக்காய் ரகங்கள் தான் அதிகம் உற்பத்தி ஆகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திரா, உத்தர பிரதேசத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் ஒரு லட்சம் எக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் பூவன், கற்பூரவள்ளி, நாட்டு வாழை போன்ற ரகங்கள் உள்ளூரில் பயிரிடப்பட்டு உள்ளூர் மக்களால் நுகரப்படுகிறது. 25 முதல் 30 சதவீத பரப்பில் நேந்திரன், கிரான்ட் னைன், நெய் பூவன் உற்பத்தி செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா, மும்பை சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
கிரான்ட் னைன் ரகம் உயரமாக இருந்தாலும் தாரின் எடை 30 கிலோ அளவு இருப்பதால் காற்றடிக்கும் போது மரங்கள் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் ஒவ்வொரு வாழை மரத்திற்கும் தனியாக குச்சியை கட்டி முட்டு கொடுக்க வேண்டும். ஒரு குச்சிக்கு அதிகபட்சமாக ரூ.50 வீதம் ஒரு எக்டேரில் உள்ள 3000 மரங்களுக்கு ரூ.45 ஆயிரம் உற்பத்தி செலவாகிறது. இந்த செலவை குறைக்கும் வகையில் விவசாயிகளுக்காக, குள்ள ரகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம் என்கின்றனர் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் செல்வராஜன், முதன்மை விஞ்ஞானி சரஸ்வதி.
அவர்கள் கூறியதாவது:
கிரான்ட் னைன் ரகம் 2.4 மீட்டர் நீளம் வளரும். இதன் தார் எடை 30 கிலோ. எனவே காற்றடிக்கும் போது இந்த மரங்கள் சாய்ந்து விழுந்து விவசாயிகளுக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும். பாபா அணு கதிரியக்க ஆராய்ச்சி மையத்தில் இந்த ரகத்தின் உயரத்தை குறைக்கும் வகையில் காமா கதிரியக்கம் செய்ய வைத்தோம். கதிரியக்க மாற்றம் செய்யப்பட்ட ரகத்தை மூன்றாண்டுகள் பயிரிட்டு ஆராய்ச்சி செய்தோம். முடிவில் குட்டை ரகமான காவிரி வாமன் உருவாக்கப்பட்டது.
காவிரி வாமன் ரகம்
புதிய ரகம் ஒன்றரை மீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. வாழைத்தாரை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறுவடை செய்து விடலாம். ஆனால் தாரின் எடை 25 முதல் 28 கிலோ அளவே இருக்கும். அதாவது இதன் உற்பத்தி 10 சதவீத அளவுக்கு குறைந்திருக்கும் என்றாலும் முட்டுக் கொடுக்கும் செலவுடன் ஒப்பிடும் போது விவசாயிகளுக்கு அதிக பயன் தருகிறது. இந்த குள்ள ரக வாழையை விவசாயிகள் முட்டுக் கொடுக்காமல் நடவு செய்யலாம். சுவையும் ஒரே மாதிரி உள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
தற்போது கேரளா, கர்நாடகா, குஜராத், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திர மாநிலங்களுக்கு இந்த ரகங்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளோம். சிறந்த ரகமாக கோவை வேளாண் பல்கலை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. காற்றடிக்கும் பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களுக்கு இந்த ரகம் ஏற்றது.
முதல் முறை வாழைத்தார் அறுவடை செய்த பின் அதன் நார், தண்டு, பூ அனைத்தையும் பயன்படுத்தலாம். வாழையடி வாழையாக மறுதாம்பு விடுவதால் ஒன்றிலிருந்து ஐந்து கன்றுகள் உற்பத்தியாகும். தற்போது ஆராய்ச்சி மையத்தில் திசு வளர்ப்பு முறையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கன்றுகளை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கினோம். ஒருகன்றின் விலை ரூ.15. விவசாயிகள் முன்கூட்டியே தெரிவித்தால் கன்று உற்பத்தி செய்து தரப்படும். ஜூன், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இதை தோட்டக்காலாக பயிரிடலாம். தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (nrcb.Ivar.gov.in) விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்றனர்.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை