PUBLISHED ON : ஜன 14, 2026

தென்னையில் சமீபகாலமாக அடித்தண்டழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தமிழகத்தில் பரவி வருகிறது.
நோய் தாக்கிய மரங்களில் வாடல்நோயின் அறிகுறி காணப்படுவதால் வாடல்நோய் எனவும், மரத்தின் துார்ப்பகுதி அழுகுவதால் அடித்தண்டழுகல் நோய் என அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூரில் 1952ல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் தஞ்சாவூர் வாடல் நோய் என்ற பெயரும் உண்டு. கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்களில் பெரும்பான்மையாகவும், மானாவாரி, பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளிலும் நோய் காணப்படுகிறது.
'கேனோடெர்மா லுாசிடம்' என்னும் காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. அந்துப்பூச்சிகள் மற்றும் வண்டுகளால் ஏற்படும் சேதங்கள் நோய்க்கு சாதகமாக அமைகின்றன. வெயிலில் தாக்கம் அதிகரிக்கும். பூஞ்சை மற்றும் மண் மூலம் பரவுகிறது. மேலும் பாசனநீர், மழையும் பூஞ்சை பரவுவதற்கு உதவு கின்றன. நோய் தாக்கிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். மழைநீர் வடிகால் வசதி அமைப்பதோடு வட்டப்பாத்தி அமைத்து தனித்தனியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்தால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும்.
நோயுற்ற, அதைச் சுற்றியுள்ள மரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சதவீத போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப் பாத்தியில் மண் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை ஊற்ற வேண்டும்.
ஐந்து மில்லி 'ஹெக்சகோனோசோல்' மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக மூன்று முறை உட்செலுத்த வேண்டும். திரவம் வடிந்த திசுவை லேசாக சுரண்டி அதன் மீது முதலில் போர்டோபசை பூசவேண்டும். 15 நாட்கள் கழித்து 'டிரைக்கோடெர்மா விரிடி' பசையைத் தடவ வேண்டும்.
மரம் ஒன்றுக்கு 'டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ்' தலா 200 கிராம் மருந்தை 5 முதல் 10 கிலோ மட்கிய சாண எருவுடன் கலந்து மரத்தைச் சுற்றி மண்ணை லேசாக கிளறி வேர்ப்பகுதியில் இடவேண்டும். உயிர் உரங்களான 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 50 கிராம் வேர் உட்பூசணத்தை தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.
உயிர் உரங்கள் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம், வேளாண் விரிவாக்க மையங்களில் விற்கப்படுகிறது. போன் : 04253 - 288 722.
போர்டோ கலவை தயாரிப்பு
பிளாஸ்டிக் பாத்திரத்தில் 50 லிட்டர் தண்ணீரில் பொடியாக்கப்பட்ட ஒரு கிலோ மயில்துத்தத்தை (காப்பர் சல்பேட்) கரைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் 50 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ நீரற்ற சுண்ணாம்பைக் (கிளிஞ்சல் சுண்ணாம்பு) கரைக்க வேண்டும். மயில்துத்த கலவையைச் சுண்ணாம்புக் கலவையினுள் குச்சியால் கலக்கியவாறு ஊற்றும்போது கலவை பச்சை கலந்த நீலநிறமாக மாறும். இரும்புக் கத்தியை கலவையினுள் ஐந்து நிமிடம் வைத்திருக்கும்போது கத்தியில் சிவப்பு நிறம் படிந்திருந்தால் மயில்துத்தம் அதிகமாக உள்ளதென அர்த்தம். சற்று கூடுதலாக சுண்ணாம்பு நீரை விட்டு கத்தி பரிசோதனை செய்தால் அதன் மேல் செம்பு (மயில்துத்தம்) படியாமல் இருக்கும்.
போர்டோ பசை
ஒரு கிலோ மயில்துத்தத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் ஒரு கிலோ சுண்ணாம்பை 5 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும். மூன்றாவது பாத்திரத்தில் இரண்டு கரைசலையும் கலந்து பசை போலாக்கி மரத்தில் சாறு வடிந்த திசுவை லேசாக சுரண்டி அதன் மீது பூசவேண்டும்.
-லதா, இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) சுதாலட்சுமி, துறைத்தலைவர் தென்னை ஆராய்ச்சி நிலையம் ஆழியார்நகர்
