/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பசுமை புரட்சிக்கு வித்திடும் தென்னை நாற்று பண்ணை
/
பசுமை புரட்சிக்கு வித்திடும் தென்னை நாற்று பண்ணை
PUBLISHED ON : ஏப் 04, 2018

தேனி மாவட்டம் வைகை அணை அருகே கோவில்பட்டி கிராமத்தில் 'தமிழ்நாடு வேளாண்மைத்துறை தென்னை நாற்றுப்பண்ணை' செயல்படுகிறது. இங்கு நெட்டை, நெட்டை குட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வேளாண் விரிவாக்க மையம் மூலம் விற்கின்றனர். 
தனியார் தென்னை நாற்று பண்ணைகளில் குட்டை ரக நாற்று ஒன்று 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கின்றனர். அதுவும் ஆறு மாதத்திற்கு முன்பே பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் தான் நாற்றுகள் கிடைக்கும். கோவில்பட்டி தென்னை நாற்றுப்பண்ணை சார்பில் தனியார் தென்னை மரங்களை தேர்வு செய்து நெத்துகளை விலைக்கு பறிக்கின்றனர். பின், 40 நாட்கள் நிழலில் காய வைக்கின்றனர். 60 நாட்கள் மணல் பதியம் முறையில் காய வைக்கின்றனர். நான்கு மாதம் கழித்து நெத்துகள் முளைப்பு திறன் கொண்டதாக தரமான நாற்றாக உருவாக்கப்படுகிறது. நெட்டை ரகம் ஒன்று 40 ரூபாய். நெட்டை குட்டை ரகம் ஒன்று 60 ரூபாய். 
குட்டை ரக நாற்றுகள் தற்போது உற்பத்தி செய்வதில்லை. இளநீர் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கிறது. தென்னை நாற்றுப்பண்ணையில் வெறும் 40 ரூபாய், 60 ரூபாய்க்கு நெட்டை, நெட்டை குட்டை ரக நாற்றுகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 
கோவில்பட்டி வேளாண்மைத்துறை தென்னை நாற்றுப்பண்ணையில் நேரடியாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்குவதில்லை. 
அந்தந்தப்பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் நாற்றுகளின் விபரங்களை பதிவு செய்திட வேண்டும். அதன்படி விரிவாக்க மையத்திற்கு நாற்றுகள் அனுப்பப்படும். இந்தாண்டு நெட்டை ரகம் 30 ஆயிரம் எண்ணிக்கையிலும், நெட்டை குட்டை ரகம் 50 ஆயிரம் எண்ணிக்கையிலும் உற்பத்தி செய்யப்படவுள்ளது. நெட்டை ரகம் 80 முதல் 100 ஆண்டுகள், நெட்டை குட்டை ரகம் 50 ஆண்டுகள் வாழ் நாள் கொண்டது.

