PUBLISHED ON : ஏப் 04, 2018

இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளில் கோழிகள் மக்கள் வாழ்க்கையோடு இணைந்துள்ளன. நம் நாட்டில் தொன்று தொட்டு கோழி இனங்கள் வளர்க்கப்படுகின்றன. அவை நாட்டுக்கோழி இனங்கள். கோழி வளர்ப்பு என்பது கிராமங்களில் மட்டுமே இருந்த செயல். இன்று 'புவுல்டரி இண்டஸ்ட்ரி' என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அத்தொழிற்சாலைகளில் பிராய்லர் எனப்படும் இறைச்சிக் கோழிகளும், லட்சக் கணக்கில் முட்டைகள் சேகரிக்கக்கூடிய அளவுக்கு முட்டைக் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன.
வெப்ப அதிர்ச்சி நோய்
தமிழகத்தில் மே மாதம் முதல் சில மாதங்களுக்கு கோழிகளில் வெப்ப அதிர்ச்சி நோய் உண்டாகிறது. இந்நோய் ஏற்பட முக்கிய காரணம் சுற்றுப்புற வெளி வெப்ப நிலை அளவு கூடுதலாவதே தவிர நோய்க்கிருமிகள் இல்லை. வெளி வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரிக்கும் போது கோழிகள் அதிகளவில் இறக்கும். கோழிகளில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதல் வெப்பத்தை வியர்வை மூலம் கோழிகள் வெளியேற்ற இயலாது. சாதாரணமாக கோழிகளின் உடல் வெப்பநிலை 104 டிகிரி முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வெப்ப அதிர்ச்சி நோய் பாதிக்கும் போது கோழிகள் சோர்ந்து காணப்படும். மூச்சிரைப்பு ஏற்படும். சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். அதிக தண்ணீர் குடிக்கும். வெப்ப அதிர்ச்சி நோய் இறைச்சிக் கோழிகளை அதிகமாகப் பாதிக்கும். எனவே இறைச்சிக் கோழி வளர்ப்பவர்கள் கோடையில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
கோழிக்கு குளுகுளு நீர்
கோடையில் தாகம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இதை தீர்க்க தண்ணீர் வைக்கும் பாத்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவற்றில் நிரப்பப்படும் நீர் நல்ல தண்ணீராக இருக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை அதில் போட்டு குளிர்ந்த நீராக தரலாம். கூரையின் மேல் பகுதியில் தண்ணீர் குழாய் பொருத்தி தண்ணீர் தெளிக்கலாம். கோழிப் பண்ணையின் பக்கச்சுவர் ஒன்றரை அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. கூரையின் மேற்புரத்தில் வைக்கோலை நிரப்பி அதன் மேல் தண்ணீர் தெளித்து வைத்தால் ஈரம் அதிக நேரம் இருக்கும். கூரையின் வெளிப்பக்கத்தில் கோழிப்பண்ணையின் கூரையின் உச்சியில் 20 அடிக்கு ஒன்று வீதம் ஒரு அடி விட்டம் உள்ள நீளமான குழாய்கள் அமைத்து காற்றோட்டம் அதிகரிக்க செய்ய வேண்டும். இதனால் கோழிப்பண்ணையின் உள்ளே இருக்கும் காற்றின் வெப்பம் கணிசமாகக் குறையும்.
நீர் கலந்த உணவுகள்
கோழிகளின் எண்ணிக்கை பண்ணையில் அதிகம் இருந்தால் எண்ணிக்கையை உடனே குறைக்க வேண்டும். சத்து மருந்துகளை பொறுத்தமட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்றவைகள் கொடுத்தால் நல்லது. பண்ணையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கோழிகளை தண்ணீரில் மூழ்கி எடுக்கலாம். விடியும் முன்னர் விளக்குகள் போட்டு வைத்தால் கோழிகள் குளிர்ந்த நேரத்தில் தீவனம் சாப்பிடும். தண்ணீர் கலந்து தீவனத்தை கொடுப்பது நல்லது. முட்டையிடும் கோழிகள் எனில் கால்சியம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். கிளிஞ்சல் துாள்களை பயன்படுத்தலாம். இதனால் கோழிகள் தோல் முட்டையிடுவதை தவிர்க்கலம். கோழி முட்டையிட மண்பானைபயன்படுத்துவது நல்லது.
கோடைக்கு குட்-பை
கோடை காலங்களில் கோழிகளை விற்பனைக்காகவோ அல்லது பண்ணையின் பிற செயல்பாடுகளுக்காகவோ கையாளும் போது குளிர்ந்த தட்பவெட்ப நிலை நிலவும் காலை அல்லது மாலை நேரங்களில் செய்ய வேண்டும். கோழிகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது வெயில் படும் இடத்தில் நிறுத்தி வைக்கக்கூடாது. அதிக வெப்பம் காரணமாகக் கோழிகள் தளர்ச்சி அடையும் சமயங்களில் 100 கோழிகளுக்கு வைட்டமின் சி மருந்தினை 500 மில்லி கொடுக்கலாம் அல்லது ஒரு எலுமிச்சம் பழச்சாற்றினை 10 லிட்டர் தண்ணீர் கலந்து தரலாம். மேலும் 40 மில்லி லிட்டர் பி காம்ப்ளக்ஸ் மருந்தை 100 கோழிகள் என்ற அளவில் தண்ணீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
எனவே கோழிப் பண்ணையாளர்களே கோடையை சமாளிப்போம்; கோழிகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்போம்.
தொடர்புக்கு 94864 69044.
டாக்டர் வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.
கோடையில் தீவனக்கலவை
தீவனப்பொருள் - முட்டை கோழி - இறைச்சி கோழி
மக்காச்சோளம் - 40 சதம் - 45 சதம்
கடலைப்பிண்ணாக்கு - 23 சதம் - 25 சதம்
தவிடு - 24 சதம் - 17 சதம்
மீன் துாள் - 10 சதம் - 10 சதம்
தாது உப்புக்கலவை - 3 சதம் - 3 சதம்
மொத்தம் -100 சதம் - 100 சதம்

