/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மகசூல் அதிகரிக்கும் தென்னை டானிக்
/
மகசூல் அதிகரிக்கும் தென்னை டானிக்
PUBLISHED ON : ஆக 07, 2024

தென்னையில் குரும்பை உதிர்வதற்கும் பென்சில் முனை குறைபாட்டிற்கும் பூச்சி, நோய்களுக்கு எளிதில் இலக்காவதற்கும் நுண்ணுாட்ட சத்துகளின் குறைபாடே காரணம். கோவை வேளாண் பல்கலை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தென்னை டானிக் இந்த குறைபாடுகளை குறைந்த செலவில் நிவர்த்தி செய்கிறது.
தென்னை டானிக் கட்டும் போது மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். தென்னை மரத்தின் அடித்தண்டில் இருந்து மூன்றடி தள்ளி உறிஞ்சும் வேர்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஓரடி வரை மண்ணை தோண்ட வேண்டும். பென்சில் கனமுள்ள இளஞ்சிவப்பு வேரை தேர்வு செய்து நுனிப்பகுதியை கத்தியால் சீவ வேண்டும். 160 மில்லி தண்ணீர், 40 மில்லி தென்னை டானிக் கலந்த ஊட்டச்சத்து கலவையை பாலித்தீன் பையில் ஊற்றி வேரின் அடி வரை நுழைத்து கட்ட வேண்டும்.
ஓரிரு நாட்களில் 200 மில்லி ஊட்டச்சத்தும் மரத்தின் மேல்பகுதி வரை சென்றடையும். அதன்பின் பாலித்தீன் பையை அகற்றி மண்ணை அணைக்க வேண்டும்.
ஆண்டுக்கு இருமுறை வேர் வாயிலாக தென்னை டானிக் செலுத்தினால் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்படும். பூச்சி, நோய் தாக்குதலும் குறைகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் கூடுதல் லாபம் கிடைக்கும். வேரின் வழியாக ஊட்டச்சத்து வழங்கும் போது மரத்திற்கு சேதம் விளைவிக்காமல் தேவையான சரிவிகித ஊட்டச்சத்துகளை மரத்திற்கு வழங்கமுடியும்.
தென்னை டானிக் தேவைப்படும் விவசாயிகள் கோவை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.
அலைபேசி: 94431 53880